இலை சுருட்டுப் புழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலை சுருட்டுப் புழு
Rice Leaf Roller.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: செதில் இறக்கை இனம்
குடும்பம்: Crambidae
பேரினம்: Cnaphalocrocis
இனம்: C. medinalis
இருசொற் பெயரீடு
Cnaphalocrocis medinalis
(Achille Guenée, 1854)
வேறு பெயர்கள்
 • Salbia medinalisGuenée, 1854
 • Botys nurscialisWalker, 1859

இலை சுருட்டுப் புழு (Cnaphalocrocis medinalis) விட்டில் பூச்சி வகைகளுள் ஒன்றாகும். ஆசியா (ஆங்காங், இந்தியா, இலங்கை, சீனக் குடியரசு, தாய்லாந்து) மற்றும் ஆத்திரேலியா கண்டங்களில் இது காணப்படுகிறது. மக்காச்சோளம், நெல், கோதுமை, கரும்பு, சோளம் முதலியப் பயிர்களில் தீமை விளைவிக்கும் பூச்சியாக உள்ளது. பூச்சி தாக்குதல் அதிகமானால் 30 முதல் 80 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படும்[1].

பூச்சியின் வாழ்க்கை[தொகு]

இலை சுருட்டுப் புழுவின் தாய் அந்துப்பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறக்கையில் குறுக்காக இரண்டு கோடுகளும் பின் இறக்கையில் ஒரு கோடும் காணப்படும். இறக்கைகளின் ஓரம் கருமை நிறத்தில் பட்டையாக காணப்படும். தாய் அந்துப் பூச்சி, தளிர் இலைகளின் அடிப்பரப்பில் 10-15 வெண்மையான முட்டைகளை நீளவாக்கில் இலை நரம்பின் ஓரத்தில் ஒரே தொகுதியாக, பெரும்பாலும் வரிசையாக சுமார் 300 முட்டைகள் வரை குவியலாக இடும். முட்டைகள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் நீள்கோள வடிவத்தில் இருக்கும். 4 முதல் 6 நாட்களில் முட்டைகள் பொரிந்து இளம் புழுக்கள் வெளிவரும். இளம் புழுக்கள் பசுமை கலந்த மஞ்சள் நிறத்திலும், வளர்ந்தபின் பசுமை நிறத்திலும் காணப்படும். புழுப்பருவம் 25 முதல் 30 நாட்கள் வரை நீடிக்கும். பின் கூட்டுப்புழு பருவத்தை சுருட்டப்பட்ட இலைக்குள்ளேயே கழிக்கும். கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில் காணப்படும். கூண்டுப் புழுக்களிலிருந்து 4 முதல் 8 நாட்களில் தாய் அந்துப்பூச்சிகள் வெளிவரும். வாழ்க்கைச் சுழல் 30-42 நாட்களில் முடியும்[2][3].

தாக்குதலின் அறிகுறிகள்[தொகு]

முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளை நீளவாக்கில் மடித்துச் சேதப்படுத்துகின்றன. எனவே, இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டு மெல்லிய இழைகளால் பின்னப்பட்டிருக்கும். இளம் பயிர்கள், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களை தாக்கும் இந்தப் புழுக்கள் இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன[4]. இதனால், சுருட்டப்பட்ட இலைகளில் பச்சையம் சுரண்டப்பட்டு வெள்ளை வெள்ளையாகக் காணப்படும் (முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு, உமிழ் நீர் கொண்டு உற்பத்தி பண்ணும் மெல்லிய பட்டு நூல் போன்ற இழைகளால் இலையை சுருட்டி அல்லது இலையின் நுனிப்பகுதியை அடிப்பகுதியுடன் மடக்கி இணைத்து, பின்னி அதற்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டு, பச்சையத்தை அரித்து உண்பதனால் இது நிகழ்கிறது). இப்புழுவினால் தாக்கப்பட்ட இலைகள் வெளிறிக் காணப்படுவதுடன் பயிரில் ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றிவிடுகிறது. இலைகள் காய்ந்த சருகு போல் காணப்படும். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் தாக்குல் அதிகம் இருக்கும்[3]. புரட்டாசி முதல் மார்கழி மாதம் வரை இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதிக அளவு தாக்கப்பட்ட பயிரில் இலைப் பச்சையம் அதிக அளவில் அரிக்கப்பட்டு இலைகள் வெண்மையான திட்டுகளுடன் காணப்படுவதோடு, பயிர் வளர்ச்சி குன்றி, மணி பிடிப்பதும் பாதிக்கப்படுகிறது. இலைகள் தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும். இந்தப் பூச்சி பயிரை எல்லா வளர்ச்சிப் பருவத்திலும் தாக்கக்கூடியது. பூக்கும் பருவத்தில் பூச்சி தாக்கி, கண்ணாடி இலை பாதிக்கப்பட்டால் மகசூல் அதிகம் குறைய ஏதுவாகிறது[2]. இப்பூச்சித் தாக்குதலை வயல்களில் அந்துப் பூச்சிகள் பறப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். விளக்குப் பொறியால் பெருமளவில் தாய் அந்துப் பூச்சிகள் கவரப்படும்[5].

தாக்குதலுக்கான காரணிகள்[தொகு]

தொடர் மழை, பனி மூட்டம் காரணமாக காற்றின் ஈரப்பதம் அதிகளவிலும், வெப்பநிலை குறைந்த அளவிலும் உள்ள காலங்களில் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் அதிகளவில் இருக்கும். அதிகப்படியான தழைச்சத்து இடுதல் மற்றும் நெருக்கமான பயிர் இடைவெளி போன்ற காரணிகளும் இவற்றின் பெருக்கத்திற்கு ஏதுவாகின்றன.[6][7]

பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்[தொகு]

முன்னிரவு நேரங்களில் விளக்குப் பொறிகளால் கவரப்படும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கணித்து, தேவைப்பட்டால் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். எல்லாப் பூச்சிகளையும் கொல்லும் தன்மையுடைய பூச்சிக்கொல்லி மருந்துகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தினாலும் இப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக ஏற்படக் கூடும்[8]. ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுபாட்டு முறைகள்[2][4][3][5][7] கீழ்வருமாறு:

இயற்கை விவசாய முறைகள்[தொகு]

 • இந்த பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயம் தழைச்சத்து உரங்களை வயலில் இடுவதை குறைக்க வேண்டும். தழைச்சத்தை தேவைக்கு அதிகமாகவோ, ஒரே தடவையாகவோ போடக் கூடாது. பூக்கும் பருவத்தில் அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.
 • இரவு நேரங்களில் வயலில் புழுவின் அந்தி பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து விளக்கு பொறிகளை வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
 • இலந்தை மரக்கிளையால் பிணைக்கப்பட்ட இலைகளை உரசி, மறைந்திருக்கும் புழுக்களை முட்களால் குத்தி அழிக்கலாம். இது போல சீமைக்கருவேல கிளைகளையும் பயன்படுத்தலாம். முட்செடிகளின் கிளைகளை பயிரின் மீது படும்படி உராயச் செய்வதன் மூலம் மடங்கியுள்ள இலைகள் கிழிக்கப்பட்டு உள்ளிருக்கும் புழுக்கள் இயற்கை எதிரிகளான கோனியோசஸ் குளவி, ஸ்டைபலினிட் வண்டு மற்றும் சிலந்திகளின் தாக்குதலுக்கு ஏதுவாக இருக்கச் செய்யலாம்.
 • டிரைக்கோகிரம்மா இன முட்டை ஒட்டுண்ணிகள் இப்பூச்சியின் முட்டையை தாக்கி அழிக்கக்கூடியது. டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 2 மி.லி. என்ற வீதத்தில் நடவு செய்த 25, 40 மற்றும் 55ம் நாளில் ஒட்டுகட்டி வெளியிட வேண்டும்[3].
 • டி.கே.எம். 2,6, ஏ.எஸ்.டி. 11 போன்ற எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களைப் பயிரிடலாம்.
 • நடவு செய்வதற்கு முன்னர் இரண்டு மாட்டு வண்டி தொழுவுரத்தை வயலில் இடலாம்.
 • வயல் வெளிகளில் காணப்படும் சில புல் பூண்டுகள் இப்பூச்சிக்கு மாற்றுப் பயிராகக் காணப்படுவதால், புல் பூண்டுகளை அகற்றி, வயல்வெளிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இதன் மூலம் இலை சுருட்டுப்புழுவின் மாற்று உறைவிடங்களை அழிக்கலாம்.
 • வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.

திரவ, திட தெளிப்புகள்[தொகு]

 • ஐந்து இலைக் கரைசலை (எருக்கு, காட்டாமணக்கு, வேம்பு, சீந்தில் கொடி, நொச்சி, ஆடாதோடை, சிறியா நங்கை, பீநாரிசங்கு, அரப்பு ஆகியவையின் கலவையாகும். இதன் இலைகள் அனைத்தும் சுமார் 1 கிலோ அளவுக்கு எடுத்து, தூளாக்கி, கூழாக்கப்படுகிறது. இந்த கூழை 5 லிட்டர் மாட்டு சிறுநீருடன் கலக்கப்படவேண்டும். மீண்டும், இதை, 5 லிட்டர் தண்ணீரில் கரைத்து, கைபடாமல் ஐந்து நாட்கள் வைத்திருக்கவும் பின் தேவையான போது இதில் இருந்து 500 மில்லி கரைசலை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து) செடிகளுக்கு காலை 6 முதல் 8.30 மணி வரையிலும் மாலை 4 முதல் 6.30 வரையிலுமான நேரத்தில் தெளிக்கவும்[9].
 • வளர்ச்சிப் பருவத்தில் பொருளாதார சேதநிலை 10%, பூக்கும் தருணத்தில் 5% தாண்டும்பொழுது வேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலை தெளிக்க வேண்டும் (5 கிலோ வேப்பம் பருப்பை நன்றாக இடித்து தூளாக்கி ஒரு சாக்கு துணியில் முடிச்சாகக் கட்டி 100 லிட்டர் தண்ணீரில் சுமார் 8 மணி நேரம் வரை வைக்க வேண்டும். பின்னர் சாக்குப்பையினை பிழிந்து வேப்பங் கொட்டைச் சாறுடன் தூளாக்கிய காதி சோப்பு 300 கிராமை கரைத்து தெளிக்க வேண்டும்)[3].
 • வேப்ப எண்ணெய் 300 மில்லி மண்ணெண்ணெய் 250 மில்லி மற்றும் காதி சோப் 50 கிராம் ஆகியவற்றை 160 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து காலை வேளையில் இலைப் பிணைப்புகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
 • 10 கிலோ வேப்ப இலையை விழுது போல் அரைத்து அதனை 1 லிட்டர் நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை 30 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். இரவு முழுவதும் ஆற வைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
 • 3-5 சதம் சிறியாநங்கை கசாயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கரைசல் அல்லது 5 சதம் வேப்ப விதைக் கரைசலைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 • 300 மில்லி வேப்ப எண்ணெய், 300 மில்லி புங்கம் எண்ணெய் 150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
 • 4 சதம் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.
 • சோற்றுக் கற்றாழை சாறை தெளிக்கலாம்.
 • சாம்பல் தூவலாம்.

வேதியியல் முறைகள்[தொகு]

 • இப்பூச்சி அதிகமாகத் தோன்றும் இடங்களில் ரசாயன உரங்களைத் தவிர்த்தும் சேதத்தைக் குறைக்கலாம்.
 • தாக்குதல் தீவிரமடையும் சமயங்களில் பின்வரும் மருந்துகளில் (புரபனோபாஸ் 400 மிலி அல்லது டைக்குளோர்வாஸ் 100 மிலி அல்லது பாசலோன் 600 மிலி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 400 மிலி அல்லது குளோர்பைரிபாஸ் 20 இ.சி. 500 மிலி அல்லது புரோபனோபாஸ் 400 மிலி அல்லது குவின்பால் 400 மிலி அல்லது பெனிட்ரோதியின் 500 மிலி அல்லது பேசிலஸ் துரிஞ்சியான்ஸிஸ் 400 கிராம்) ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம்[3][8][10].
 • தாவர பூச்சிக் கொல்லியான அசாடிரக்டீன் 0.03 சதக் கரைசலை ஏக்கருக்கு 400 மில்லி தெளிக்கலாம்.
 • பொருளாதாரச் சேதநிலை பயிர் வளர்ச்சிக் காலத்தில் 10% இலைச் சேதத்தையும், பூக்கும் தருணத்தில் கண்ணாடி இலைகளில் 5% சேதத்தையும் தாண்டும்போது ஏக்கருக்கு 400 மி.லி. டிரை அசோபாஸ் அல்லது 10 கிலோ கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4% குருணை அல்லது 500 மில்லி பிப்ரோனில் 5% எஸ்.சி. அல்லது 40 கிராம் தயோ மெத்தோசம் 25% நனையும் குருணை அல்லது 20 மி.லி. புளுபென்டையமைடு 480 எஸ்.சி. போன்ற பூச்சி மருந்துகளைத் தெளித்து பயிர்களின் இழப்பைத் தடுக்கலாம்[5].
 • ரசாயன பூச்சிக் கொல்லிகளான கார்ட்ஃப் 50 சதவீத தூளை ஏக்கருக்கு 400 கிராம் உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "இலை சுருட்டுப் புழு கட்டுப்படுத்த ஆலோசனை". தினமலர். 4 நவம்பர் 2015. http://www.dinamalar.com/news_detail.asp?id=1379459. பார்த்த நாள்: 6 சூன் 2016. 
 2. 2.0 2.1 2.2 முனைவர். மலர்வண்ணன் (30 ஏப்பிரல் 2012). "இலைச் சுருட்டுப் புழு". Jamsetji Tata National Virtual Academy, M S Swaminathan Research Foundation. பார்த்த நாள் 6 சூன் 2016.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 சி. விஜயராகவன், ப. துக்கையண்ணன் (4 மே 2011). "நெற்பயிரை தாக்கும் இலை சுருட்டுப் புழுக்கள்". தினமலர். http://new.dinamalar.com/supplementary_detail.asp?id=5112&ncat=7. பார்த்த நாள்: 6 சூன் 2016. 
 4. 4.0 4.1 "பூச்சி, நோய்க் கட்டுப்பாடு". ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்கம். விகாஸ்பீடியா. பார்த்த நாள் 6 சூன் 2016.
 5. 5.0 5.1 5.2 "சம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்". ஆதாரம் : வேளாண் இயக்குநர் அலுவலகம், புதுக்கோட்டை. விகாஸ்பீடியா. பார்த்த நாள் 6 சூன் 2016.
 6. "நெல் பயிரில் இலை சுருட்டு நோய்: மகசூல் பாதிக்கும் அபாயம்". தினமலர் (22 செப்டெம்பர் 2011). பார்த்த நாள் 6 சூன் 2016.
 7. 7.0 7.1 "நெற் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதல்". தினமணி. 10 டிசம்பர் 2015. http://www.dinamani.com/edition_coimbatore/tirupur/2015/12/10/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-/article3170714.ece. பார்த்த நாள்: 6 சூன் 2016. 
 8. 8.0 8.1 "நெற் பயிரில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதல்". தமிழ்வெப்துனியா.கொம். 27 சனவரி 2009. http://www.tamil.webdunia.com/article/finance-news-articles-features/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-109012700064_1.htm. பார்த்த நாள்: 6 சூன் 2016. 
 9. செல்வி. ராஜரீகா. "கட்டுப்பாட்டின் உயிரி பூச்சிக்கொல்லி". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 6 சூன் 2016.
 10. "நீடாமங்கலம் வட்டாரத்தில் சம்பா, தாளடி பயிர்களில் கூண்டு, இலை சுருட்டுப் புழு கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் வழிகாட்டல்". தினகரன் (இந்தியா). 22 டிசம்பர் 2014. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=407480&cat=504. பார்த்த நாள்: 6 சூன் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_சுருட்டுப்_புழு&oldid=2776393" இருந்து மீள்விக்கப்பட்டது