இலந்தை சு. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இலந்தை சு. இராமசாமி
பிறப்புஇராமசாமி
ஏப்ரல் 20, 1942 (1942-04-20) (அகவை 81)
தெற்கிலந்தைக்குளம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிகவிஞர்
பெற்றோர்இரா. சுப்பையர்,
பொன்னம்மாள்
விருதுகள்கவிவேழம், கவிமாமணி, சந்தத் தமிழ்க் கடல்

இலந்தை என்ற புனைபெயரால் அழைக்கப்படும் இலந்தை சு. இராமசாமி (பிறப்பு: ஏப்ரல் 20, 1942) பல்துறை வித்தகர், கவிஞர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கதாசிரியர், வில்லுப்பாட்டு வித்தகர், நாடகாசிரியர் , மொழிபெயர்ப்பாளர். ஆய்வாளர் மற்றும் பொறியியலாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். கவிதை இலக்கணம் கற்றுக்கொடுத்துப் பல மரபுக்கவிஞர்களை உருவாக்கியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இலந்தை சு. இராமசாமி தூத்துக்குடி மாவட்டத்தில், கயத்தாறு நகரை ஒட்டியுள்ள தெற்கிலந்தைக்குளம் கிராமத்தில் ஏப்ரல் 20, 1942 ஆம் ஆண்டு இரா. சுப்பையர், பொன்னம்மாள் ஆகியோருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். கயத்தாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். அவரது நினைவாற்றல், கற்றுக் கொள்ளும் ஆர்வம், விடா முயற்சி அவரை பள்ளியில் முதல் மாணவனாகத் திகழ வைத்தன. இதனால் பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணிப்பிள்ளையின் உதவியும் தூத்துக்குடியில் உள்ள வ. உ. சி. கல்லூரி முதல்வர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களின் ஆதரவும் கிடைத்தன. இவர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் இல்லத்தில் தங்கிப் படித்தார். அவருடைய மாணவராகத் தமிழ் இலக்கியமும், ஆங்கில இலக்கியமும் கற்றார். வ. உ. சி. கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். எல்லாப்பாடங்களிலும் இணைந்து முதலிடம் பெற்றதற்காகத் தங்கப்பதக்கமும், தமிழில் முதலிடம் பெற்றதற்காகத் தங்கப்பதக்கமும் பெற்றார்.[1][2]

பணி[தொகு]

1962-65 வரை வ. உ. சி கல்லூரியில் ஆங்கிலத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு இந்தியத் தபால்தந்தித் துறையில் சிறப்புத் தேர்வு செய்யப்பட்டு, 1966 இல் பொறியியல் மேற்பாற்வையாளராகப் பதவியேற்றார். அங்கே பணிசெய்து கொண்டே பொறியியல் கற்று மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றார். அதில் பெற்ற சிறப்பு வித்தகத்தால் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு மையத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே துறையில் சென்னை பம்பாய், டெல்லி, மற்றும் வடக்கு ஏமன் நாட்டிலும் பணிபுரிந்தார். பின்பு உதவிப்பொது மேலாளராகப் பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்றார்.

இலக்கியப்பணி[தொகு]

1958 இல் இவர் தன் முதல் கவிதையை எழுதினார். பேராசிரியர் அ.சீ. ரா தலைமையில் 1962 இல் முதல் கவியரங்கத்தில் கலந்துகொண்டார். சென்னையில் பாரதி கலைக் கழகத்தின் பல கவியரங்குகளில் இவர் கலந்துள்ளார். குழந்தைகளுக்கான கவிகள் இயற்றும் ஆர்வம் அவருக்கு கவியரங்குகளில் கலந்து கொண்ட ஆரம்ப கால கட்டங்களிலேயே இருந்தது. இன்று வரை 2000க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கும் இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. நூற்றுக்கணக்கான கவியரங்குகளில் கலந்து கொண்டுள்ள இவர் 200க்கும் மேற்பட்ட கவியரங்குகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறார். ஏமன் நாட்டில் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கப் பேரவையின் மாநாட்டில் இருமுறை கவியரங்கத் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவின் பல பாகங்களிலும் இவர் கவியரங்குகளில் பங்கேற்றிருப்பதோடு, சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார். சிங்கப்பூர், அமெரிக்கா, ஏமன் ஆகிய நாடுகளில் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். பாரதி வரலாற்று வில்லுப்பாட்டு, ஐயப்பன் சரிதை வில்லுப்பாட்டு ஆகியவற்றை இயற்றியுள்ள இவர் வில்லுப்பாட்டுக் குழு அமைத்து, தமிழகத்திலும் ஏமன் தலைநகர் சன்னாவிலும் அமெரிக்காவில் நியுஜெர்சி தமிழ்ச்சங்கத்திலும் முழுநேர வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாக நடத்தியுள்ளார். இவருடைய மெல்லிசைப்பாடல்கள் பல வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பாடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க்கிலிருந்து வெளிவந்த “தி தமிழ் டைம்ஸ்” என்னும் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இரண்டாண்டுகளுக்கும் மேல் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார். அமெரிக்காவில் நடந்த முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் புறநானூற்றில் வாழ்த்து உத்திகள் என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். மிச்சிகன் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், நியூஜெர்சி, இண்டியானா போலிஸ், சிக்காகோ, ஹூஸ்டன் பாரதி கலா மன்றம், நியூயார்க், ஃபெட்னா(மூன்று முறை) டொரொந்தோ தமிழமைப்பு, உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை போன்ற அமைப்புகளில் பல சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

கவிதை நாடகங்கள்[தொகு]

மார்க்கண்டேயன், கண்ணகி, ஞானப்பழம் ஆகிய கவிதை நாடகங்களை அமெரிக்கத் தமிழ் சிறுவர்களுக்காக எழுதி இயக்கி இருக்கிறார்.

சந்த வசந்தம்[தொகு]

மின்வலையில் சந்த வசந்தம் என்னும் கவிதைக்குழுமத்தை 2001 ஆம் ஆண்டு தொடங்கினார். 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு அக்குழுமம் சிறப்பாக இயங்கிவருகிறது. அதில் கவியரங்குகள், கவிதைப் பட்டிமண்டபம் ஆகியவை நடத்தப்படுகின்றன. அது தவிர மரபுக் கவிதை இலக்கண ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து பல புதிய இலக்கண மரபுகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் அதன் தொண்டு வெகுவாகப் பாராட்டப்படுகிறது. முதல்முதலாக விழியம் வழி கவியரங்கம் நடத்தியபெருமை இன்று சந்த வசந்தம் முழுமத்திற்கு உண்டு. மின்னஞ்சல் மூலம் மரபுக் கவிதைகளை அந்தக் குழும உறுப்பினர்களுக்கு அவர் சொல்லிக் கொடுக்கிறார். உலகம் முழுவதும் உள்ள கவிஞர்களுக்கு மரபு இலக்கணமும், செய்யுள் இலக்கணமும் தெரிந்து கொண்டு தாம் கற்றதைப் பயிற்சி செய்யும் தளமாக இன்று சந்தவசந்தம் வளர்ந்துள்ளது. இக்குழுமத்தின் நீட்சியாக முகநூலிலும் தமிழ் செய்யுள் இலக்கணம், தமிழ் மரபுக் கவியரங்கங்கள் நட ந்த வண்ணம் உள்ளன. விருத்தம் எழுத வருத்தம் எதற்கு என்னும் இலக்கணத்தொடர் மின்வலையில் வெளியாயிற்று.[3]

பெற்ற விருதுகளும் பரிசுகளும்[தொகு]

  1. கவிமாமணி - சென்னை பாரதி கலைக்கழகம் வழங்கியது.
  2. சந்தத் தமிழ்க்கடல் - கவியோகி வேதம் நடத்தும் சக்தி யோகா நிலையம் வழங்கியது
  3. கவிவேழம் - சந்தவசந்தத்தில் கவிஞர் புதுச்சேரி தியாகராஜன் வழங்கியது.
  4. அமுத சுரபி நடத்திய குறுநாவல் போட்டியில் முதற்பரிசு
  5. அமுதசுரபி நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு
  6. கலைமகள் பத்திரிகை நடத்திய கி வா.ஜ நூற்றாண்டு விழாக் கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
  7. முனைவர் க. தமிழ்மல்லன் நடத்தும் ’வெல்லும் தூய தமிழ்’ பத்திரிகை நடத்திய தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.
  8. இவர் எழுதியுள்ள மகாகவி பாரதி வரலாறு புத்தகத்திற்குத் திருப்பூர்த் தமிழ்ச்சங்கத்தின் பரிசு
  9. இலந்தைப் பெட்டகம் முதல் தொகுதி நூலுக்கு நல்லழகம்மை செல்லப்பன் அறநிலையம் நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு - 2018
  10. கவிதை உறவு நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு - 2018
  11. சேஷன் சன்மான் விருது -2018 [4]

நூல்கள்[தொகு]

இவர் எழுதியுள்ள நூல்கள் 65[5] அவற்றில் சில

  1. ஸ்ரீதேவி கருமாரி அந்தாதி
  2. ஸ்ரீ ஐயப்பன் சிந்து
  3. சைதை சிவசுப்பிரமணியன் நான்மணி மாலை
  4. கானூர் பிரளய விடங்கேசர் இரட்டை மணி மாலை
  5. கயத்தாறு அகிலாண்டேஸ்வரி இரட்டைமணிமாலை
  6. பேராசிரியர் அ.சீ.ரா இரட்டைமணி மாலை
  7. முத்தமிழ் மும்மணிச்சிந்து
  8. தெற்கிலைந்தைக்குளம் ஸ்ரீ வீரபத்ரர் இரட்டைமணிச்சிந்து
  9. பாரதி வாழ்வும் வாக்கும்
  10. அன்றாடம் மலரும் அறிவியல் பூக்கள்
  11. பொருநைவெள்ளம்- கவிதைத் தொகுதி
  12. சந்த வசந்தம் - கவிதைத் தொகுதி
  13. அப்பாலுக்கப்பால் கவிதைத் தொகுதி
  14. காரைக்காலம்மையார் காரிகை- குறுங்காவியம்
  15. அலாஸ்கா- பயண நூல்
  16. கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன்
  17. ஹென்றி ஃபோர்ட்
  18. ஐயர் தி கிரேட் வ.வே சு ஐயர்
  19. வீர் சாவர்க்கர்
  20. மகாகவி பாரதி
  21. பனிகண்டேன் பரமன் கண்டேன்(கைலாய யாத்திரை)
  22. மைக்கேல் பாரடே
  23. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
  24. படைத்தளித்த பதின்மூன்று- அமெரிக்க வரலாறு
  25. இலக்கியச் சீனி அ.சீ.ரா வாழ்வும் வாக்கும்
  26. திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும்
  27. பாரதியில் அறிவியல்
  28. கீத கோவிந்தம் மொழியாக்கம்
  29. பஜகோவிந்தம், கனகதாரா- மொழியாக்கம் [6]
  30. பாரதி வில்லுப்பாட்டு
  31. வள்ளுவ வாயில்
  32. இந்திய சுதந்திரப் போராட்டம்
  33. கண்ணன் ஏன் தேம்பித்தேம்பி அழுகிறான் - குழந்தைப் பாடல்கள்
  34. ஏனிந்த மாட்டுப் பொங்கல்? – (இயற்கை பற்றிய கவிதைத்தொகுப்பு)
  35. இலந்தைக் கவிப்பெட்டகம்-5 தொகுதிகள்- சொல்லத்தாகநினைக்கிறேன் 36 விண்ணோக்கிய வேர்கள்- சிறுகதைத் தொகுதி 37 விடுதலை வேள்வியில் தொட்டதும் சுட்டதும் 38- புறநானூற்றில் வாழ்த்து உத்திகள் 39 விருத்தம் எழுத வருத்தம் எதற்கு? 40 மூவேந்தரைப் போற்ரிய முத்தொள்ளாயிரம் 41 வாரிக்கொடுப்பாள் வாராகி

இன்று வரை மின்னலைக் குழுமங்களிலும் முக நூலிலும் தொடர்ந்து கவிதைகள் எழுதிவருகிறார். இவரது மனைவியின் பெயர் பானுமதி. இவரது மகன் சீனிவாசராகவன் கணினி வல்லுனராக வட அமெரிக்காவில் பணியாற்றுகிறார். இவரது மகள் கவிதா ராமசாமி வழக்கறிஞராக வட அமெரிக்காவில் பணியாற்றுகிறார்.

உசாத்துணைகள்[தொகு]

  1. கவிமாமணி இலந்தை ராமசாமி, ‘தென்றல்’ இதழ் நேர்காணல்
  2. தமிழின் திருவிளையாடல், ’அனிதம்’ கட்டுரை
  3. http://www.vallamai.com/?p=81903 கவிமாமணி இலந்தை சு.இராமசாமி்: “வல்லமை’க் கட்டுரை
  4. http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-06-48/2016-07-11-14-54-18/item/781-2018[தொடர்பிழந்த இணைப்பு] சேஷன் சன்மான் விருது
  5. http://www.valaitamil.com/kalaimaamani-ilanthai-ramasamy_17338.html இலந்தை ராமசாமியின் நூல்களின் பட்டியல்
  6. http://www.vallamai.com/?p=39106&cpage=1 துதி கோவிந்தனை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தை_சு._இராமசாமி&oldid=3640320" இலிருந்து மீள்விக்கப்பட்டது