இலண்டனின் பெரும் தீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலண்டனின் பெரும் தீ ஓவியம் (1675 இல் வரையப்பட்டது). 1966 செப்டம்பர் 4 செவ்வாய்க்கிழமை புனித கேத்தரின் கப்பற்துறையில் படகு ஒன்றில் இருந்து காணப்பட்டதன் அடிப்படையில் இவ்வோவியம் இனந்தெரியாத ஒருவரால் வரையப்பட்டது. இடது பக்கம் இலண்டன் பாலம்; வலப் பக்கத்தில் இலண்டன் கோபுரம் ஆகியன அமைந்துள்ளன.
இலண்டன் சுவரின் மேற்கு வாயில் லட்கேட் பற்றி எரிகிறது. தூரத்தே பழைய புனித பவுல் கதீட்ரல் எரிய ஆரம்பிக்கிறது. 1670 ஓவியம்

இலண்டனின் பெரும் தீ (Great Fire of London) இங்கிலாந்து, இலண்டன் நகரில் 1666 செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டம்பர் 6 வியாழன் வரை பரவிய தீயைக் குறிக்கும். இத்தீ நகரின் மத்திய பகுதியின் பெரும்பாலான இடங்களை அழித்தது.[1] இடைக்கால இலண்டன் நகரத்தில் பழைய ரோமானிய நகரச் சுவருக்குள் தீப்பிடித்தது. பெரும் தீ ஆனாலும், வெஸ்ட்மின்ஸ்டர் பிரபுத்துவ மாவட்டம், இரண்டாம் சார்லசு மன்னரின் வைதால் அரண்மனை அல்லது பெரும்பாலான புறநகர் சேரிகளை இத்தீ அடையவில்லை.[2] இத்தீயினால் இலண்டன் நகரில் 13,200 வீடுகள், 87 தேவாலயங்கள், புனித பவுலின் பேராலயம், நகர அதிகாரிகளின் பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்தன. நகரின் 80,000 குடிமக்களில் 70,000 பேரின் குடிமனைகள் எரிந்து சாம்பலாயின.[3]

சரியான இறப்பு எண்ணிக்கை அறியப்படவில்லை, ஆனாலும், பாரம்பரியமாகவே இறப்பு எண்ணிக்கை அதிகளவில் இல்லை என்றே நம்பப்பட்டு வந்துள்ளதால், ஆறு இறப்புகள் மட்டுமே அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்ற அடிப்படையில் இறப்பு எண்ணிக்கை பிற்காலத்தில் கேள்விக்குட்படுத்தப்பட்டது. மேலும், நெருப்பின் அகோரம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் அடையாளம் காணக்கூடிய எச்சங்கள் எதுவும் இல்லாமல் அழிந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

புடிங் ஒழுங்கை என்ற சிறிய வீதியிலேயே தீ பரவ ஆரம்பித்திருந்தது. இந்த ஒழுங்கையில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உருகிய மட்பாண்டத் துண்டு ஒன்று இலண்டன் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 1,250°செ (2,280°ப; 1,520 கெ) ஐ எட்டியது என்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[4]

இலண்டன் மாநகர மத்தியில் அமைந்துள்ள புடிங் ஒழுங்கையில் வெதுப்பகம் ஒன்றில் 1666 செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிற்கு சற்றுப் பின்னர் தீ ஆரம்பித்து, விரைவாக மேற்கு நோக்கிப் பரவியது. அக்காலத்தின் முக்கிய தீயணைப்பு நுட்பம் தகர்ப்புகள் மூலம் தீத்தடுப்பு கோடுகளை உருவாக்குவது ஆகும். இலண்டன் நகர முதல்வர் சர் தாமஸ் பிளட்வர்த் இத்தீயை அணைப்பது குறித்த முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு பெரிய அளவிலான தகர்ப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது. பலமாக வீசிய காற்றினால், வெதுப்பகத் தீ ஒரு நெருப்புப்புயலாக மாறியது, இதனால், தகர்ப்பு நடவடிக்கைகள் பின்னடைந்தன. திங்களன்று தீ வடக்கே நகரின் மையத்தை நோக்கித் தள்ளப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டினர் தீ வைத்ததாக வதந்திகள் பரவியதால், நகரத் தெருக்களில் சட்டம் ஒழுங்கு தடைப்பட்டது. அது இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் (1965-1967) காலமானதால், இங்கிலாந்தின் அப்போதைய எதிரிகளான பிரெஞ்சு, இடச்சுக்காரர்களை மையமாகக் கொண்டு வீடற்றோர் குறித்த அச்சங்களையும் ஏற்படுத்தியது. கணிசமான புலம்பெயர்ந்த இந்த வீடற்றோர் பலர் வன்முறைகளுக்கு இரையானார்கள்.

1666 செப்டம்பர் 4 செவ்வாயன்று, நகரத்தின் பெரும்பகுதி முழுவதும் தீ பரவியது, புனித பவுல் கதீட்ரல் அழிந்து வீழ்ந்தது. இது இரண்டாம் சார்லசு மன்னரின் அரண்மனைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. ஒருங்கிணைந்த தீயணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நெருப்பைத் தணிப்பதற்கான சமர் இரண்டு காரணிகளால் வென்றதாகக் கருதப்படுகிறது: வலுவான கிழக்குக் காற்றின் வேகம் வீழ்ச்சியடைந்தமை, மேலும் இலண்டன் கோபுரத்தின் படைகளின் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி தீ கிழக்கு நோக்கி மேலும் பரவுவதைத் தடுக்க பயனுள்ள தீத்தடுப்பு கோடுகள் உருவாக்கியமை ஆகியவையாகும்.

இப்பேரழிவு காரணமாக உருவான சமூக, பொருளாதார பிரச்சினைகள் பெருமளவை இலண்டன் எதிர் கொண்டது. இலண்டனில் கிளர்ச்சி ஏற்படும் என அஞ்சிய இரண்டாம் சார்லசு மன்னர் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் மீள்குடியேற்ற கடுமையாக ஊக்குவித்தார். இவ்வாறு பல தீவிரமான திட்டங்கள் இருந்தபோதிலும், இலண்டன் நகரம் தீக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட அதே தெருத் திட்டத்தில் மீண்டும் புனரமைக்கப்பட்டது.[5]

இலண்டன் பெருந்தீயின் போது பல இலண்டன்வாசிகளின் தனிப்பட்ட அனுபவங்கள் கடிதங்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளில் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு நன்கு அறியப்பட்ட நாட்குறிப்பாளர்கள் சாமுவேல் பெப்பீசு (1633-1703)[6], ஜான் ஈவ்லின் (1620-1706),[7][8] ஆகியோரைக் குறிப்பிடலாம். இருவரும் பெருந்தீ நிகழ்வுகளை தமது சொந்த எதிர்வினைகளுடன் ஒவ்வொருநாளும் பதிவு செய்திருந்தனர்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. அனைத்து தேதிகளும் பழைய யூலியன் நாட்காட்டியில் தரப்பட்டுள்ளன.
  2. Roy Porter (1994). London: A Social History. Cambridge: Harvard. பக். 69-80. https://archive.org/details/londonsocialhist00port. 
  3. Adrian Tinniswood (2003). By Permission of Heaven: The Story of the Great Fire of London. London: Jonathan Cape. பக். 4,101. https://archive.org/details/bypermissionofhe0000tinn_h3d3. 
  4. "Pottery". http://collections.museumoflondon.org.uk/Online/object.aspx?objectID=object-750122. பார்த்த நாள்: 14 November 2014. 
  5. Reddaway, T. F. (1940). The Rebuilding of London after the Great Fire. London: Jonathan Cape. பக். 27. 
  6. "Samuel Pepys Diary 1666 – Great Fire". http://www.pepys.info/fire.html. பார்த்த நாள்: 22 July 2018. 
  7. "John Evelyn". http://spartacus-educational.com/STUevelyn.htm. பார்த்த நாள்: 22 July 2018. 
  8. John Evelyn (1854). Diary and Correspondence of John Evelyn, F.R.S.. London: Hurst and Blackett. https://books.google.com/books?id=JiH6MSVCzmsC&pg=PA10. பார்த்த நாள்: 5 November 2006. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலண்டனின்_பெரும்_தீ&oldid=3580883" இருந்து மீள்விக்கப்பட்டது