உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சுமி நரசிம்மர் கோயில், மாரேஹள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமி நரசிம்மர் கோயில்
இலட்சுமி நரசிம்மர் கோயில் வளாகம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:மண்டியா
அமைவு:மலவள்ளி, மாரேஹள்ளி
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை

மாரேஹள்ளி இலட்சுமி நரசிம்மர் கோயில் (Lakshmi Narasimha Temple) என்பது கருநாடகத்தின், மண்டியா மாவட்டத்தில், மலவள்ளிக்கு அருகில் உள்ள மாரேஹள்ளி என்ற இடத்தில் உள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும். இது கருநாடகத்தில் உள்ள முக்கியமான நரசிம்மர் கோயிலாகும். சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோயில் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

மாரேஹள்ளி இலட்சுமி நரசிம்மர் கோயிலானது மலவள்ளி நகரத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயில் ஊருக்கு வெளியே பசுமை சூழ்ந்த அமைவிடத்தில் உள்ளது. சுற்றிலும் பசுமையான நெல்வயல்கள் உள்ளன. கோயிலுக்கு எதிரில் காவிரி ஆற்றின் பாசன வாய்க்கல் ஓடுகிறது. இக்கோயில் யாரால் முதலில் கட்டப்பட்டது என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்றாலும், இராஜராஜ சோழன் காலத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.[1]

கோயில் அமைப்பு

[தொகு]

கோயிலுக்குள் நுழைகையில் வலப்புறம் சிவனுக்காக கட்டபட்ட அமிர்தேசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது. இலட்சுமி நரசிம்மர் கோயில் இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், இடப்புறம் அனுமனுக்கு அமைக்கபட்ட ஒரு சிற்றாலயமும், வலப்புறத்தில் பிள்ளையாரின் சிற்றாலயமும் உள்ளன. கோயில் நரசிம்மர் கருவறைக்கு பின்னால் பிரகாரத்தில் மூலையில் தாயார் சந்நிதி உள்ளது.

கருவறையில் உள்ள நரசிம்மர் நான்கு கைகளுடன் உள்ளார். நரசிம்மர் சாந்த மூர்த்தியாக காணப்படுகிறார். அவரின் இடது தொடையில் திருமகள் அமர்ந்திருக்கிறார். திருமகளின் பாதங்களுக்கு கீழே ஒரு அமுதக்கலயம் உள்ளது.

வழிபாடு

[தொகு]

இலட்சுமி நரசிம்மர் கோயிலில் வைகாசன ஆகம முறைப்படி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கோயில் காலை எட்டு மணிமுதல் நண்பகல் இரண்டு மணிவரை திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மாலை நேரத்தில் திறந்திருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Marehalli Lakshmi Narasimha Temple - A magnificent testament to early Chola brilliance" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-08-25. Retrieved 2026-02-23.

வெளி இணைப்புகள்

[தொகு]