இலட்சுமணன் (சகமான வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமணன்
நாதுல்லாவின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 950–982 பொ.ச.
பின்னையவர்சோபிதா
அரசமரபுநாதுல்லாவின் சகமனாக்கள்
தந்தைமுதலாம் வாக்பதிராஜா

இலக்ஷ்மணா (Lakṣmaṇa, ஆட்சி சுமார் 950–982 பொ.ச.) நாதுல்ல சகமான வம்சத்தை நிறுவிய ஒரு இந்திய மன்னராவார். சாகம்பரியின் சகமான மன்னர் முதலாம் வாக்பதிராஜாவின் மகனான இவர் நாதுல்லாவைச் சுற்றி (இன்றைய இராஜஸ்தானில் உள்ள நாடோல்) ஒரு சமஸ்தானத்தை உருவாக்கினார்.

வரலாறு[தொகு]

இடைக்கால வடமொழி இலக்கியங்களில், இவர் ராவ் லகா அல்லது லக்னா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சாகம்பரி மன்னர் முதலாம் வாக்பதிராஜாவுக்குப் பிறந்தார். தனது மூத்த சகோதரர் சிம்மராஜாவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். [1]

இலட்சுமணன் வாக்பதிராஜாவின் மகன் என்பது நாதுல்ல சகமான பதிவுகளின் மூலம் மட்டுமே தெரிகிறது. இவரது தாய் வம்சத்தின் கல்வெட்டுகள் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. பொ.ச.973 தேதியிட்ட ஹர்ஷநாத் கோயில் கல்வெட்டு இவரது சகோதரர்கள் மற்றும் நான்கு மருமகன்களின் பெயரைக் குறிப்பிடுகிறது, ஆனால் இவரைக் குறிப்பிடவில்லை. [2] இவர் சிம்மாசனத்திற்கு போட்டியாக இருந்ததாலோ அல்லது வேறு சில காரணங்களுக்காக சிம்மராஜாவுடன் இவருக்கு நல்லுறவு இல்லாததாலோ இருக்கலாம். [3]

சில பிற்காலக் கணக்குகள் இவரது தந்தை சிம்மராஜா என்று கூறுகின்றன. இவற்றில் 15 ஆம் நூற்றாண்டின் இலக்ன ரவுல பிரபந்தம் (புராதன பிரபந்த சங்கிரக தொகுப்பில் உள்ள இவரது புராண வாழ்க்கை வரலாறு) மற்றும் 17 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் முஹ்னோத் நைன்சியின் நைன்சி ரி கியாத் ஆகியவை அடங்கும். இலுண்டிகதேவனின் அச்சலேசுவரர் மகாதேவர் கோயில் கல்வெட்டு இவரது தந்தையை சிந்துராஜா என்று அழைக்கிறது. இருப்பினும், இந்த பதிவுகள் தவறானவை என்று புறக்கணிக்கப்படலாம். ஏனெனில் ஆரம்பகால கல்வெட்டுகள் இவரை வாக்பதிராஜாவின் மகன் என்று தெளிவாக விவரிக்கின்றன. [4]

பின்னணி[தொகு]

காலவரையற்ற பயணத்தில் இவர் வீட்டை விட்டு வெளியேறியதாக இலக்ன ரவுல பிரபந்தம் கூறுகிறது. இவருடன் இவரது மனைவி மற்றும் அவரது வேலைக்காரன் மட்டுமே இருந்தனர். பயணத்தின் போது ஓய்வெடுக்க நாதுல்லாவில் உள்ள ஒரு கோவிலில் தங்க முடிவு செய்தார். பயணத்தின் போது இவருக்கு அரச ஆதரவு இல்லாததால், தனது வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று புராணக்கதை கூறுகிறது. [3]

சகமான பதிவுகளின்படி, இலட்சுமணன் பதானிலிருந்து வரிகளை வசூலித்து, சித்தோர்கருக்கு கப்பம் செலுத்தினார்.[5] ஜி.ஹெச். ஓஜா மற்றும் தசரத சர்மா போன்ற வரலாற்றாசிரியர்கள் இதை ஒரு வெற்று பெருமையாக கருதுகின்றனர். ஏனெனில் இந்த இரண்டு நகரங்களும் அந்த நேரத்தில் சுதந்திரமான ஆட்சியாளர்களால் ஆளப்பட்டன. சோலாங்கி மன்னன் மூலராஜாவின் தலைநகராக பதான் இருந்தது, அதே சமயம் சித்தோர்கர் குகில ஆட்சியாளர்களான சக்திகுமாரன் மற்றும் அம்பாபிரசாத் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்தது. [6] [7]

நாடோல் கோட்டையின் கட்டுமானத்தை இலட்சுமணன் கட்டினார். நாடோலில் (12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள இலட்சுமண-சுவாமின் கோயிலாக இருக்கலாம்) இவரது பெயரில் ஒரு விஷ்ணு கோயிலை இவர் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. [4]

இவர் நாதுல்லாவைச் சேர்ந்த ஒரு வைசியப் பெண்ணை மணந்ததாகக் கூறப்படுகிறது. [6] இவருக்குப் பிறகு இவரது மகன் சோஹியா என்ற சோபிதா ஆட்சிக்கு வந்தார். [8]

சான்றுகள்[தொகு]

  1. R. B. Singh 1964, ப. 233.
  2. R. B. Singh 1964, ப. 235.
  3. 3.0 3.1 R. B. Singh 1964, ப. 234.
  4. 4.0 4.1 Dasharatha Sharma 1959, ப. 120.
  5. R. B. Singh 1964, ப. 236.
  6. 6.0 6.1 R. B. Singh 1964, ப. 237.
  7. Dasharatha Sharma 1959, ப. 122.
  8. R. B. Singh 1964, ப. 238.

உசாத்துணை[தொகு]