இலங்கையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டில் ஆள்புல எல்லைக்குள் வாழும் முழுமையான மக்கள் தொகையைக் கணக்கெடுப்பதாகும். அதுவே குடிசன மதிப்பீடு எனவும் கூறப்படுகின்றது. 1871ம் ஆண்டிலேயே இலங்கைக்கென முதன் முதலில் அதிகாரபூர்வமான குடிசனக் கணிப்பீடு செய்யப்பட்டது. அன்றிலிருந்து 10 வருடங்களுக்கொரு முறை சர்வசனக் கணக்கெடுப்பு நிகழ்கிறது. அதன்படி 2001ம் ஆண்டு கணக்கெடுப்பு நிகழ்ந்தது. இதற்கு முன் 1981ல் இக்கணிப்பீடு நிகழ்ந்து பின்னர் 1991ம் ஆண்டில் இக்கணக்கெடுப்பு நிகழவில்லை. 2001ம் ஆண்டு கூட நாடளாவிய கணிப்பீடு நிகழ்த்தப்படவில்லை.

புதிய கணக்கெடுப்பு முறை[தொகு]

இலங்கையில் மக்கள் தொகை மற்றும் வீடுகள் பற்றிய இக்கணக்கெடுப்பு மீண்டும் 2011ல் எடுக்கப்படுகிறது. இது இலங்கையின் 14வது மக்கள் தொகை மற்றும் வீடுகள் பற்றிய கணக்கெடுப்பாகும். இது முன்பு நிகழ்ந்தவற்றை விடவும் வித்தியாசமான முறையில் அமையும். அதாவது குறிப்பிட்ட காலத்தில் அனைவரையும் ஒரேநேரம் கணக்கெடுப்பதற்குப் பதிலாக இரு வாரங்களில் வீடுதோறும் வந்து ஒவ்வொருவரையும் கணக்கெடுப்பு செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சனத்தொகையைத் தீர்மானிக்கும் காரணிகள்[தொகு]

ஒரு நாட்டில் சனத்தொகையைத் தீர்மானிக்கும் காரணிகளாக பின்வருவன காணப்படுகின்றன.

  • பிறப்பு,
  • இறப்பு,

குடியேற்றம் அல்லது குடியகல்வு ஆகியனவாகும்.

மக்கள் தொகைக் கட்டமைப்பு[தொகு]

பிறப்பு விகிதம்[தொகு]

வருடாந்தம் குடிசனத் தொகையில் 1,000 பேருக்குப் பிறக்கும் தொகையைக் குறிக்கும். இந்த அட்டவணை மக்கள் தொகை அதிகரிப்பை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் அடையாளமாகும்.

இறப்பு விகிதம்[தொகு]

வருடாந்தம் குடிசனத் தொகையில் 1000 பேருக்கு அவ்வருடத்துக்குள் நிகழும் மரணத்தொகையின் மதிப்பீட்டு விகிதமாகும். இதுவும் சனத்தொகை அதிகரிப்பைக் கணிக்க உபயோகிக்கப்படும் இன்னொரு அடையாளமாகும்.

அகதிகள் விகிதம்[தொகு]

மக்கள் தொகை அதிகரிப்பை முடிவு செய்கையில் உபயோகமாகும் இன்னுமொரு பெறுமதிமிக்க அடையாளம் அகதிகள் விவகாரமாகும். வருடாந்தம் குடியேறுவோரின் தொகை மற்றும் வருடாந்தம் குடியல்வோரின் தொகை என்பன இதன் மூலம் கணக்கெடுக்கப்படும்.

ஆண், பெண் எண்ணிக்கை[தொகு]

இதுவும் சனத்தொகைக் கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும். 100 பெண்களுக்கு எத்தனை ஆண்கள் எனப் பார்ப்பதே இதன் நோக்கமாகும்.

உழைப்பு முயற்சியாளர்[தொகு]

குடிசனக் கணக்கெடுப்பில் உழைக்கும் முயற்சியாளரும் தகவலில் சேர்க்கப்படுவர். பொருளதார ரீதியில் செயற்பாடுள்ளோர் உழைப்பு முயற்சியாளர் எனப்படுவர். இவர்கள் தொழிலுள்ளோர் தொழிலற்றோர் என வகுக்கப்படுவர்.

சாரத விகிதம்[தொகு]

சனத்தொகை அதிகரிப்பில் தீர்க்கமான இன்னுமொரு காரணி என சாரதா விகிதத்தைக் குறிப்பிடலாம். பெண்களின் வாழ்வில் அவர்கள் பெறும் குழந்தைகளின் தொகையே சாரதா விகிதம் எனப்படுகின்றது.

கணக்கெடுப்பு[தொகு]

பெருந்தொகையான மக்களை கணக்கெடுப்பதெனில் அது ஒரு கடினமான காரியமாகும். எனவே, கணக்கெடுப்புக்கு முன்சில காரியங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன. அவை

  • அனைத்து கிராமவட்டாரங்களினதும் வரைபடங்களைத் தயாரித்தல்
  • அனைத்து கட்டடங்கள், வீடுகளின் பட்டியலைத் தயாரித்து அடையாளம் ஒட்டுதல்
  • கணக்கெடுத்தல்.

மேற்கூறப்பட்டவாறு வரைபடம் தயாரித்தல் அடையாளம் ஒட்டுதல் என்பனவற்றின் மூலம் கணக்கெடுப்பு அதிகாரி மிக எளிதாகச் செயற்பட முடியும்.

குடிசனக் கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்கள்[தொகு]

பிரதான நோக்கம் குடிசனத் தொகையைக் கணக்கிடுவதாகும். அத்தோடு மேலும் சில தகவல்களும் இதன் மூலம் பெற்றப்படுகின்றன. பிறந்த தினம், ஆண், பெண் வேறுபாடு திருமணம் புரிந்த, திருமணம் புரியாத எனும் வித்தியாசத்தில் வீட்டின் பிரதான உரித்தாளிக்குரிய குடும்ப உறவு ஆகிய தகவல்களும் பெறபப்படுகின்றன. அவற்றோடு, கல்வித்தராதரம் அகதிகள் குடியேற்றம் பற்றிய தகவல்கள், தொழில்கள் பற்றிய விபரங்கள், அங்கவீனர் பற்றிய விவரங்கள், வீடுகளின் விபரங்கள் ஆகியனவும் அவற்றில் அடங்கும்.

குடிசனத் தகவல்களினால் கிடைக்கும் பயன்கள்[தொகு]

  • ஒழுங்கான குடிசன மதிப்பீட்டின் மூலம் ஒரு நாட்டில் அபிவிருத்தித் திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்த முடியும்.
  • மக்கள் தொகை, வீடுகளின் தொகை ஆகியவற்றின் மூலம் பெறும் தவல்களால் சிறந்த அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்த முடியும்.
  • அரசின் கொள்கைகளை வகுப்பதற்கும் திட்டமிடுவதற்குத் குடிசனத்தொகை மதிப்பீடு உதவுதல்.
  • அரச மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் வழங்கப்படுவதற்குத் தேவையான தகவல்களைத் தேடிப் பயன்படுத்த குடிசனத் தொகை மதிப்பீடு உதவுதல்
  • கல்விக்குரிய தீர்மானத்தை எடுக்கும்போது குடிசனத் தொகை மதிப்பீடு பயன்படல்
  • சுகாதார மற்றும் மருத்துவப் பாதுகாப்பு வசதிகளைத் திட்டமிடவும் குடிசனத் தொகை மதிப்பீடு அவசியமாகின்றது.
  • பொதுநல திட்டங்களைத் திட்ட இத்தகவல்கள் பயன்படுகின்றன.
  • வெளிநாட்டு உதவிகளால் பிரதேசங்கள் தோறும் அபிவிருத்தியைச் செயற்படுத்தவும் குடிசன மதிப்பீடு பயன்படுகின்றது.
  • உத்தியோகம் புரிவோர் உத்தியோகமற்றோர் ஆகியோரின் எண்ணிக்கைகளை அறிவதோடு, உத்தியோகம் வழங்கவும் தொழிற் பயிற்சியளிக்கவும் குடிசன மதிப்பீடு பயன்கொடுக்கின்றது.

உசாத்துணை[தொகு]

  • குடித்தொகைக் கணக்கெடுப்பு -1981 அரசாங்க வெளியீடு
  • விஜய் - மார்ச்சு 2011