உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகரங்களுக்கிடையேயான தொடர்வண்டி ஒன்று வழிநிலையத்தில் காத்திருத்தல்

இலங்கையில் போக்குவரத்து (Transportation in Sri Lanka) பெரும்பாலும் இலங்கையின் தலைநகர், கொழும்பை மையமாகக் கொண்டு அமைந்துள்ள சாலைப் பிணையத்தையே முதன்மையாகக் கொண்டுள்ளது. பிரித்தானிய குடியேற்றத்தின்போது கட்டமைக்கப்பட்ட தொடர்வண்டிப் பிணையம் உள்ளபோதும் நாட்டின் போக்குவரத்துத் தேவைகளில் மிகச்சிறிய பங்கையே இவை நிறைவு செய்கின்றன. பயணிக்கத்தக்க நீர்வழிகளும் துறைமுகங்களும் வானூர்தி நிலையங்களும் இலங்கையின் போக்குவரத்தில் பங்கேற்கின்றன. கொழும்பிலிருந்து 22 கிமீ தொலைவிலுள்ள கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் இலங்கையின் ஒரே பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இலங்கையின் நெடுஞ்சாலைகளும் விரைவுச்சாலைகளும் மிகச் சிறப்பான நிலையில் பராமரிக்கப்படுவதோடு தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன. 2009ஆம் ஆண்டில் இதற்காக மதிப்பிடப்பட்ட செலவினம் டாலர் ஒரு பில்லியன் ஆக இருந்தது.

பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையின் போக்குவரத்து

[தொகு]

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்ட ஒரு காலகட்டமாகக் கொள்ளலாம். இலங்கையில் போக்குவரத் துறையின் விரிவாக்கத்துக்கு பிரித்தானியர் கூடுதலான ஆர்வம் காட்டியமைக்கான காரணிகள்:

  • இராணுவ நோக்கம்
  • நிர்வாக நடவடிக்கையை இலகுபடுத்தல்
  • பெருந்தோட்ட நடவடிக்கையை இலகுபடுத்தல் (இலாப நோக்கம்)

பெருந்தெருக்கள்

[தொகு]
  • எட்வேர்ட் பாண்ஸ் தேசாதிபதி காலத்தில் 1820ல் கண்டி - கொழும்பு வீதி அமைக்கப்பட்டது. 1821ல் அம்பேபுஸ்ஸவிலிருந்து இவர் ஒவ்வொரு மாகாணத்தின் தலைநககர்களையும் இணைக்கத் திட்டமிட்டிருந்தார்.
  • தேசாதிபதி வில்மட் ஹோல்ட்டன் 1831ல் கண்டி - மாத்தளை வீதியை அமைத்தார். இது 1832ல் தம்புள்ளைவரை நீடிக்கப்பட்டது
  • 1841ல் கொழும்பு கண்டி வீதிக்கு கல் பதிக்கப்பட்டது
  • தேசாதிபதி ஹென்றி வாட் தெருக்கள் அமைப்பதில் முக்கிய பங்கினை அளித்தார். இவரால் அமைக்கப்பட்ட முக்கிய வீதிகளுள் சில நாவலப்பிட்டிய - கொத்மலை வீதி, மாத்தளை, ரத்தொட்டை, தெனியாய வீதிகள்

தொடருந்து போக்குவரத்து

[தொகு]
  • ஆகஸ்ட் 3 1858ம் திகதி அப்போதைய ஆளுனர் சர். ஹென்றி வோர்ட் கொழும்பில் பிரதான தொடர்வண்டி நிலையம் இப்போது அமைந்துள்ள இடத்தில் நிலத்தை வெட்டி நிர்மாண வேலைகளைக் கோலாகலமாக ஆரம்பித்து வைத்தார். இம் முயற்சி 1861ல் கைவிடப்பட்டது
  • மீண்டும் 1865ல் ஆரம்பிக்கப்பட்டு 1867ல் கண்டி கொழும்பு தொடருந்துப் பாதை முடிக்கப்பட்டது
  • 1873ல் கண்டிக்கும் கம்பளைக்கும் இடையில் 1874ல் நாவலப்பிட்டிக்கும், 1884ல் கட்டன் வரைக்கும், 1899ல் பண்டாரவளைக்கும் மலைநாட்டுப் தொடருந்துப் பாதை விஸ்தரிக்கப்பட்டது. இக்கட்டத்தில் கண்டி - மாத்தளை தொடருந்து வீதியும் அமைக்கப்பட்டது
  • 1900ன் பின்னர் தொடருந்துப் பதைகள் அமைப்பதில் துரித வளர்ச்சி கண்டது. (உதாரணம்: 1865 - 1895க்குமிடையில் சுமார் 263 மைல் நீளமான தொடருந்துப் பாதை 1895 - 1924க்குமிடையில் சுமார் 450 மைல் நீளமாக வளர்ச்சிகண்டது

பெருந்தோட்டத்துறைக்கான தொடருந்துப் பாதை அமைத்தல்

[தொகு]
  • இறப்பர்
    • களனி - இரத்தினபுரி, குறுகிய தொடருந்துப் பாதை அமைக்கப்பட்டமை
  • தென்னை
    • சிலாபம், புத்தளம் கரையோரப் பாதை அமைக்கப்பட்டமை
  • இந்திய தொழிலாளர் வருகைக்காக
    • குருநாகல், மதவாச்சி, தலைமன்னார்
  • தேயிலை
    • மலைநாட்டுப் தொடருந்துப் பாதை அமைக்கப்பட்டமை

தொடர்வண்டி பிணையம்

[தொகு]
இலங்கையின் தொடர்வண்டி பிணையத்தைக் காட்டும் வரைபடம்.

இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்தில் நகரங்களுக்கு இடையேயான கனரக இருப்புப்பாதையும் கொழும்பின் நகரவாசிகளுக்காக இயக்கப்படும் பெருநகர தொடர்வண்டிச் சேவையும் அடங்கும். சிறீலங்கா இரயில்வேஸ் நாட்டின் 1,450 km (901 mi) தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள இருப்புப்பாதைகளில் தொடர்வண்டிகளை இயக்குகிறது. நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள முதன்மை நகரங்களை இப்பாதைகள் இணைக்கின்றன.

இலங்கையின் பெரும்பாலான இருப்புப் பாதைகள் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் கட்டமைக்கப்பட்டவை. 1867இல் ஏப்ரல் 26 அன்று முதல் தொடர்வண்டிப் பாதை கொழும்பிற்கும் கண்டிக்கும் இடையே அமைக்கப்பட்டது. இது பிரித்தானிய தேயிலைத் தோட்டங்களிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்ய பயன்பட்டது.

விடுதலைக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் தோட்டத் தொழிலில் இருந்து தொழில்துறைக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியது. இதற்கு ஏதாக சாலைப் பிணையம் வளர்ந்தது. சரக்குந்துகளால் ஏற்றிச்செல்லப்பட்ட சரக்குகளின் மதிப்பு தொடர்வண்டிகளால் ஏற்றிச் செல்லப்படுவதை விட உயரலாயிற்று. தொடர்வண்டிப் போக்குவரத்து மிகுந்த நட்டத்தை எதிர்கொண்டது.

அண்மையில் தொடர்வண்டிப் போக்குவரத்து நவீனப்படுத்தப்பட்டு கடலோரமாக விரைவான தொடருந்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.[1] மிகுந்த போக்குவரத்து நெருக்கடி மிக்க இருப்புப்பாதைகள் மின்மயப்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.[2] கடலோரமாக மத்தாராவிலிருந்து அம்பாந்தோட்டைக்கு கதிர்காமம் (கோயில்) வழியாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.[3]

சாலை போக்குவரத்து

[தொகு]

இலங்கையின் நிலப்புற போக்குவரத்தில் 93% சாலை போக்குவரத்தால் நிகழ்கிறது. திசம்பர் 2011 நிலவரப்படி, தர மற்றும் பி தர சாலைகள் 12,000 கிமீக்கும் விரைவுச்சாலைகள் 126 கிமீக்கும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

அமைப்பு

[தொகு]

இலங்கையின் சாலைப் பிணையம் ஏ, பி, சி மற்றும் ஈ தரச்சாலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  • ஏ தரச் சாலைகள் - தேசிய நெடுஞ்சாலைப் பிணையம் - உயர்ந்த வேகம்: மணிக்கு 70 கிமீ[4]
  • பி தரச் சாலகள் - முதன்மை மாகாணச் சாலைகள் - ஏ தரச் சாலைகளுடனும் ஈ தரச் சாலைகளுடனும் இணைகின்றன - வேகக்கட்டுப்பாடு:மணிக்கு 60 கிமீ
  • சி தரச் சாலைகள் - உள்ளூர் குடியிருப்புச் சாலைகள் - வேகக்கட்டுப்பாடு:50 கிமீ/மணிக்கு
  • ஈ தரச் சாலைகள் - இவை மிகவிரைவான, மிகுந்த போக்குவரத்தை ஏற்கக்கூடிய பெருவழித்தடங்கள் - ஏ தரச் சாலைகளில் நெரிசல் ஏற்படும்போது இவை இணையாக கட்டமைக்கப்படுகின்றன. - வேகக்கட்டுப்பாடு: 120 கிமீ/மணிக்கு

சாலைகளும் நெடுஞ்சாலைகளும்

[தொகு]

இலங்கையில் திசம்பர் 2011 நிலவரப்படி, தர மற்றும் பி தர சாலைகள் 12,000 கிமீக்கு உள்ளன. கூடுதலான சாலைகள் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் கொழும்பு நகரைச் சுற்றி இடப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகள் நல்ல தரத்தில் இடப்பட்டுள்ளன. தார் இடப்பட்டு சாலை தடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. வழிநடத்து அறிக்கைகளும் வழிகாட்டிகளும் ஆங்காங்கே நடப்பட்டுள்ளன. சில சிற்றூர்ச் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. பெரும்பாலும் பயன்படுத்தப்படக்கூடிய சாலைகள் அடிக்கடி மேம்படுத்தப்பட்டு மீளமைக்கப்படுகின்றன. பல நகர்புறங்களில் பொது போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[5]

சாலைகளின் நீளம் (1998 மதிப்பு.)
மொத்தம் 11,285 கிமீ
பாவப்பட்டவை 10,721 கிமீ
பாவப்படாதவை 564 கிமீ

விரைவுசாலைகள்

[தொகு]

கொழும்பு, காலி, மற்றும் மாத்தறை நகரங்களை இணைக்கும் தென்னிலங்கை விரைவுச்சாலை 126 கிமீ தொலைவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தென் மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. மற்ற விரைவுச்சாலைகள் திட்டமிடப்பட்ட நிலையில் அல்லது கட்டமைப்புப் பணிகளில் உள்ளன. கொழும்பு - கட்டுநாயக்க விரைவுச்சாலை, கொழும்பு-கண்டி (கடுகன்னவா) விரைவுச்சாலை, மற்றும் புற வட்ட நெடுஞ்சாலை (கொழும்பு புறவழிச்சாலை) ஆகியன கட்டமைக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு-படேனியா விரைவுச்சாலை திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இலங்க அரசு இந்த முதன்மை விரைவுச்சாலைகளை இணைக்கும் விதமாக மூன்று உயர்தள நெடுஞ்சாலைகளை கட்டவும் திட்டமிட்டுள்ளது.[6]

பேருந்து போக்குவரத்து

[தொகு]
நீர்கொழும்பிலிருந்து கிளம்பும் பல்வேறு தனியார் பேருந்துகள்

பேருந்துகள் பொதுமக்களுக்கான முதன்மையான போக்குவரத்தாக உள்ளது. பேருந்து சேவைகளை அரசுத்துறை நிறுவனமான சிறீலங்கா போக்குவரத்து வாரியமும் (SLTB) தனியார் நிறுவனங்களும் இயக்குகின்றன. போக்குவரத்து வாரிய பேருந்துகள் நகர்ப்புற ஊரகத் தடங்களில் சேவை வழங்குகின்றன. இலாபம் தராத பல சிற்றூர்த் தடங்களிலும் தனியார் நிறுவனங்களை ஈர்க்காத தடங்களிலும் போக்குவரத்து வாரியப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[5]

நீர் போக்குவரத்து

[தொகு]

இலங்கையில் குறைந்த ஆழத்தில் செல்லத்தக்க படகுகள் செல்வதற்கான நீர்வழிகள் (பெரும்பாலும் தென்மேற்குப் பகுதி ஆறுகளில்) 160 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளன.

சரக்குக் குழாய் பிணையம்

[தொகு]

Sri Lanka has 62 km of pipelines for பாறை எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு செல்கின்ற எண்ணெய்க் குழாய்கள் 62 கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. (1987 மதிப்பீடு).

துறைமுகங்கள்

[தொகு]
கொழும்புத் துறைமுகத்தில் சரக்குக் கொள்கலன்கள் கையாளப்படுதல்

இலங்கையில் ஆழ்கடல் துறைமுகங்கள் கொழும்பு, அம்பாந்தோட்டை, காலி, திருக்கோணமலை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பான்மையான சரக்குப் போக்குவரத்தை கொழும்புத் துறைமுகமும் அடுத்து காலித் துறைமுகமும் கொண்டுள்ளன. குறைந்த ஆழமுள்ள துறைமுகமாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை அமைந்துள்ளது.

அம்பந்தோட்டையிலுள்ள துறைமுகம் செயற்கைத் துறைமுகமாக 2010இல் கட்டப்பட்டது.[7][8] கொழும்புத் துறைமுகமும் விரிவாக்கப்படுகிறது; காங்கேசன்துறையிலுள்ள துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது.[9]

கடல்வழி வணிகம்

[தொகு]

மொத்தம்: 21 கப்பல்கள் (1,000 மொத்த பதிவுசெய்யப்பட்ட டன்கள் (GRT) அல்லது கைடுதலாக) 192,190 GRT/293,832 மெட்ரிக் டன்கள் டெட்வெயிட் கப்பல் வகைகள்: பெருஞ்சரக்குக் கப்பல்கள் - 4, சரக்குக் கப்பல்கள் - 13, வேதிப்பொருட்களுக்கான கப்பல் - 1, கொள்கலன் கப்பல் - 1, எண்ணெய்தாங்கி கப்பல்கள் - 2 (2010).

வான்வழிப் போக்குவரத்து

[தொகு]

சிறீலங்கன் எயர்லைன்ஸ் இலங்கையின் தேசிய வான்வழிச்சேவை நிறுவனமாகும். 1979இல் ஏர் லங்காவாக துவங்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் வெளிநாட்டு முதலீட்டைத் தொடர்ந்து 1998இல் மாற்றப்பட்டது. இலங்கையின் பன்னாட்டு வானூர்தி நிலையங்களாக பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம், மத்தல ராசபக்ச விமான நிலையம் மற்றும் தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் இரத்மலானை விமான நிலையம் ஆகியன உள்ளன.[10]

உள்ளூர் வான்போக்குவரத்து

[தொகு]

பல உள்ளூர் சேருமிடங்களுக்கு இரத்மலானையிலிருந்து வானூர்திகள் இயக்கப்படுகின்றன.

உள்ளூர் நிறுவனங்கள்

வானூர்தி நிலையங்கள்

[தொகு]
பண்டாரநாயக்க வானூர்தி நிலையத்தில் மிகின் லங்கா நிறுவனத்தின் வானூர்தி.

பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் கொழும்பின் வடக்கில் 35 கிமீ (22 மை) தொலைவில் உள்ள கட்டுநாயக்கவில் அமைந்துள்ளது. அம்பாந்தோட்டையின் வடக்கே மத்தலவில் மத்தல ராசபக்ச விமான நிலையம் அமைந்துள்ளது. அரை நூற்றாண்டுக்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட பின்னர் இரத்மலானை விமான நிலையம் பன்னாட்டு சேவைகளை இயக்கக்கூடியதாக இருக்கும்.[10]

2012ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள மொத்த வானூர்தி நிலையங்கள் 18ஆக இருந்தன.

பாவப்பட்ட ஓடுபாதைகளுடனான வானூர்தி நிலையங்கள்
மொத்தம் 15
3,047 மீ கூடுதலாக 2
1,524 மீ முதல் 2,437 மீ வரை 6
914 முதல் 1,523 மீ 7
பாவப்படாத ஓடுபாதைகளை உடைய வானூர்தி நிலையங்கள்
மொத்தம் 4
1,524 முதல் 2,437 மீ 1
914 மீ குறைவாக 3

உசாத்துணை

[தொகு]
  1. "Dailymirror". No trains between Galle and Kalutara South. 2011-04-23 இம் மூலத்தில் இருந்து 2011-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111004193438/http://www.slrfc.org/2011/04/23/no-trains-between-galle-and-kalutara-south. 
  2. "Daily News". IESL proposes railway electrification project. 2010-12-25 இம் மூலத்தில் இருந்து 2012-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120308023320/http://www.dailynews.lk/2010/12/25/bus04.asp. 
  3. "Rail Finance: Sri Lanka south railway financed by US$278mn China credit". Lanka Business Online. 23 August 2012 இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121009151453/http://lankabusinessonline.com/fullstory.php?nid=1063271941. பார்த்த நாள்: 28 September 2012. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2013-04-11.
  5. 5.0 5.1 "Sri Lanka Transport Board to import 2,000 single door buses for rural transportation". ColomboPage. 2011-12-05 இம் மூலத்தில் இருந்து 2012-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120407030723/http://www.colombopage.com/archive_11B/Dec05_1323096445CH.php. பார்த்த நாள்: 2011-12-06. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-04-11.
  7. B. Muralidhar Reddy (2010-11-18). "Hambantota port opened". THE HINDU. பார்க்கப்பட்ட நாள் 2010-11-20.
  8. "Development of Port in Hambantota". Sri Lanka Port Authority. Archived from the original on 2010-03-06. பார்க்கப்பட்ட நாள் 2010-03-10.
  9. R.K. Radhakrishnan (2011-07-21). "India, Sri Lanka MoU to re-build port". THE HINDU. பார்க்கப்பட்ட நாள் 2011-07-27.
  10. 10.0 10.1 "Private jets to fly to R'lana A'port". Daily Mirror. Archived from the original on 12 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  • மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
  • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]