உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை
நூல் பெயர்:இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை
ஆசிரியர்(கள்):கா. இந்திரபாலா
வகை:கட்டிடக்கலை வரலாறு
துறை:இலங்கைக் கட்டிடக்கலை
காலம்:1970
இடம்:கொழும்பு
மொழி:தமிழ்
பக்கங்கள்:71 + 4 (படங்கள்)
பதிப்பகர்:விஜயலட்சுமி புத்தகசாலை
பதிப்பு:1970

இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை என்பது கா. இந்திரபாலா எழுதிய ஒரு நூல். இது முதன் முதலாக 1970 ஆம் ஆண்டில் விஜயலட்சுமி புத்தக நிலையத்தினரால் வெளியிடப்பட்டது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகரத்தார், நாயக்கர் ஆகிய வம்சங்களின் ஆட்சிக்காலங்களிலே படிப்படியாக வளர்ச்சியடைந்த திராவிடக் கட்டிடக்கலையின் செல்வாக்கினால் இலங்கையின் சமகாலக் கட்டிடக்கலையில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து இந்த நூல் ஆராய்கிறது. இந்த விடயம் குறித்து இலங்கையில் தமிழில் வெளியான முதல் நூல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கம்[தொகு]

இலங்கையின் மக்கள் என்ற வகையில் இலங்கைத் தமிழர் அந்நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் கொன்டிருந்த பங்கையும், அதன் வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றிய தொண்டுகள் குறித்தும் எடுத்துக் கூறுவதே இந்த நூலின் நோக்கம் ஆகும். இங்கே வளர்ந்த திராவிடக் கட்டிடக்கலையின் நுட்பங்கள் குறித்த ஆய்வுகளைத் தவிர்த்து அதன் வரலாறு பற்றி மட்டுமே இந்நூல் கவனத்தில் கொள்கிறது.[1]

நூல் வரலாறு[தொகு]

மேற்கூறிய நோக்கங்களை அடிப்படையாக வைத்துப் பல்வேறு திராவிடக் கலைகளையும் உள்ளடக்கியதாக "இலங்கையில் வளர்ந்த திராவிடக் கலைகள்" என்னும் தலைப்பில், வீரகேசரி வார வெளியீட்டில் இந்நூலாசிரியரால் தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டன. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி கடுமையான ஆய்வுகளைத் தவிர்த்து இலகுவாகவும், சுருக்கமாகவும் அமையும்படி இக்கட்டுரைகள் அமைந்திருந்தன. 1968 ஆம் ஆண்டில் ஏறத்தாழ நான்கு மாதங்கள் வெளியான இக்கட்டுரைகளில், கட்டிடக்கலை தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.[2]

உள்ளடக்கமும் எடுகோள்களும்[தொகு]

இந்த நூல் தமிழ்நாட்டில் பல்லவர் காலத்துக்குப் பிந்திய திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சியினால் இலங்கையின் கட்டிடக்கலையில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்தே ஆராய்கிறது. பல்லவர் காலமான கிபி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வடக்கே இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிகளில் திராவிடக் கட்டிடக்கலை தோன்றியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே, இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ள காலப்பகுதியைப் பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது இந்திரபாலாவின் கருத்து.[3]

இலங்கையில் வளர்ந்த திராவிடக் கட்டிடக்கலை பற்றி ஆராயும் இந்நூல், எடுத்துக்கொண்ட காலப்பகுதியில் திராவிடக் கட்டிடக்கலையின் வளர்ச்சிக் கட்டங்களான பல்லவர் பாணி, சோழர் பாணி, பாண்டியர் பாணி, விஜயநகரப் பாணி, நாயக்கர் பாணி என்னும் ஐந்து பாணிகளின் அடிப்படையில் ஆராய்கிறது. பல்லவர் காலத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் நிரந்தரமான கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டிய கட்டுமானக் கட்டிடங்கள் எதுவும் காணப்படாததால் இக்காலப்பகுதியில் இருந்த தமிழ்நாட்டுக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் குறித்து எதுவும் கூறமுடியாதுள்ளது என்று குறிப்பிடும் நூலாசிரியர், தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இருந்துவரும் பல்வேறு வகையான தொடர்புகள் காரணமாக தமிழ்நாட்டுக் கட்டிடக்கலையின் தாக்கம் அக்காலங்களிலேயே இருந்திருக்கக்கூடிய வாய்ப்புக்களையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

எடுத்துக்காட்டாக, இலங்கையின் பழங்காலத் தலை நகரமான அனுராதபுரத்தின் அழிபாடுகளிடையே, அக்காலத்தில் அங்கே வணிகத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் வணிகக் குழுவொன்றினால் அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றின் அழிபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் இந்நூலாசிரியர், கிறித்துவுக்கு முந்திய காலத்தில் கட்டப்பட்ட தனிக் கட்டிடங்களின் பகுதிகள் எதுவும் தமிழ்நாட்டில் கிடைக்காவிட்டாலும், இலங்கையில் கட்டப்பட்ட இக்கட்டிடம் அக்காலத் தமிழர் கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட கட்டிடமாக இருக்கலாம் எனவும் கூறுகிறார்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. இந்திரபாலா, கா., 1990, பக். v.
  2. இந்திரபாலா, கா., 1990, பக். v.
  3. இந்திரபாலா, கா., 1990, பக். vii.
  4. இந்திரபாலா, கா., 1990, பக். 3.

உசாத்துணைகள்[தொகு]

  • இந்திரபாலா, கா., இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, விஜயலட்சுமி புத்தகசாலை, கொழும்பு, 1990.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]