இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு (நூல்)
வகை:வரலாற்று ஆவணம்
துறை:இலங்கைத் தமிழர் வரலாறு
காலம்:2008
இடம்:அவுசுதிரேலியா, சிட்னி
மொழி:ஆங்கிலம், தமிழ் (பன்மொழி)
பக்கங்கள்:676
பதிப்பகர்:தென் ஆசியவியல் மையம்
பதிப்பு:2008

இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு எனும் நூல் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய, இலங்கைத் தமிழர் தொடர்பான ஒரு வரலாற்று ஆவணமாகும். இந்த நூல் இதுவரை காலத்தில் இலங்கையில் தமிழர் வரலாற்றில் எவருமே எழுதிராத வகையில், இலங்கைத் தமிழர் வரலாற்றின் மூலாவணங்கள் இருந்த நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து, பல பிரச்சினைகள், சிரமங்கள் மத்தியில், அதிக பொருள் செலவில் உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்று ஆவணமாகும். இந்நூல் கி.மு 300 இல் இருந்து கி.பி 2000 வரையான, 2300 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்நூல் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளிலும் வெளியிடப்பட்டது. தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளான சுவிட்சர்லாந்து, டென்மார்க், நோர்வே, ஐக்கிய இராச்சியம், யேர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா மற்றும் அவுசுதிரேலியா போன்ற நாடுகள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டது.

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து, உலகின் பல தொலைக்காட்சிகள், வானொலிகள், சஞ்சிகைகள், பத்திரிக்கைகள் என இவரைப் பேட்டிக்கண்டதுடன், பல கல்விமான்கள், புத்திஜீவிகள், புலமைசார் வல்லுநர்கள் இந்நூல் தொடர்பான கருத்தாய்வுகளையும் மேற்கொண்டனர்.

நூல் உருவாக்கத்தின் பின்னனி[தொகு]

கலாநிதி முருகர் குணசிங்கம் ஓர் அரசியல் வரலாற்றுத்துறை மாணவனாக 35 வருடமாக இருந்தவர் ஆவர். அவர் தனது பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர், பல்கலைக்கழகம் சென்றபோது அங்கே இலங்கையின் வரலாறு முழுக்க முழுக்க சிங்களவரின் வரலாறாகவும், சிங்களத் தேசத்தின் வரலாறாகவுமே இருந்ததுடன், பின்னனியில், ஆங்காங்கே யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறுகள் மட்டுமே கற்பிக்கப்பட்டுள்ளன. அப்போது இவருக்கு எழுந்த கேள்விகள், இலங்கை இரண்டு தேசங்களாக இருந்த நாடு, இரண்டு தேசிய இனங்களைக் கொண்ட நாடு, மொழி, கலை, பண்பாடு, வரலாறு, பாரம்பரிய நிலப்பரப்புகள் என எல்லாம் வெவ்வேறாக இருக்க; எப்படி இலங்கையில் வரலாறு சிங்கள வரலாறாக மட்டும் இருக்க முடியும், எனும் சிந்தனை எழுந்ததே இந்த வரலாற்று நூல் எழுதத் தூண்டலாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.[1]

அத்துடன் இலங்கையில் இதுவரை தமிழர் வரலாறாக எழுதப்பட்ட நூல்கள் எல்லாம், யாழ்ப்பாண இராச்சியத்தை மையப்படுத்தியதாக மட்டுமே அமைந்துள்ளன. இலங்கைத் தமிழருடைய வரலாறு இதுவரை ஒருவராலும் முழுமையானதாக எழுதப்படவில்லை. சிங்களவர்கள் எழுதிய வரலாற்று நூல்கள், சிங்களவர்களின் தேசமாக மட்டுமே எழுதப்பட்டிருந்ததன் விளைவு தன்னை எப்படியாவது இலங்கை தமிழரின் முழுமையான ஒரு வரலாற்று நூலை எழுதவேண்டும் எனும் எண்ணத்தை தோற்றுவிக்கக் காரணமானதாக குறிப்பிடுகிறார். அத்துடன் தனது பல்கலைக்கழகக் கல்வித்துறை சார்ந்த வேலை வாய்ப்பு, பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பை தந்திருந்ததனால், செல்லும் நாடுகளில், இலங்கை தமிழரின் பூர்வீக வரலாறு தொடர்பான, சான்றுகளுடன் கூடிய ஒரு புலமைச்சார் நூல் இதுவரை இல்லையே என பலர் கேட்கும் கேள்வியின் உண்மை, தனது இந்த நூல் உருவாக்கத்தின் அடிப்படை உந்துசத்தியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

இலங்கைத் தமிழர் வரலாறு தொடர்பான பேச்சுக்கள் இடம்பெறும் போதெல்லாம், தமிழர் தங்களின் வரலாற்று ஆவணங்களை முறையாக பாதுகாத்து வைக்கத் தவறிவிட்டனர் எனும் பொதுவான கருத்தே, தமிழறிஞர்கள் மத்தியில் நிலவின. போர்த்துகீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆட்சிக் காலங்களின் போதான ஆவணக்குறிப்புகளை எடுத்து ஆய்வு செய்யலாம் என்றால், அதற்கும் போர்த்துகீசரின் ஆட்சிக்காலத்து ஆவணங்களை ஒல்லாந்தர் எறித்துவிட்டனர் என்றும், ஒல்லாந்தர் ஆட்சி காலத்து ஆவணங்களை பிரித்தானியர் கொழும்பு தேசிய ஆவணத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர் என்றும் கருத்துக்கள் நிலவின. அவ்வாறான சூழிலின் பின்னனியில் தமிழரின் வரலாறு தொடர்பான நம்பகமாக, ஆதாரங்களுடன் முன்னிருத்தக் கூடிய ஆவணங்கள் தமிழரிடம் இருக்கவில்லை. அதேவேளை சிங்களவர்கள், வரலாற்று நிகழ்வுகளையும், வாய்மொழி கதைகளையும், ஐதீகங்களையும் காலக்கோடாக பதிவு செய்து வைத்துள்ளனர்.

இருப்பினும் தமிழர்களும் இலங்கை மண்ணின் உரிமையாளர்கள், அவர்களும் பூர்வீகக் காலந்தொட்டு இந்த மண்ணில் வாழ்பவர்கள் எனும் அடிப்படையில் இலங்கையில் தமிழரது வரலாறும் இருக்க வேண்டும் எனும் நோக்கின் அடிப்படையில் இலங்கை தமிழரின் வரலாறு தொடர்பான ஒரு ஆய்வும், ஒரு தேடலும் தன்னுள் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நிலவியதாக கூறுகிறார்.

தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான புலம்பெயர் வாழ்க்கை பின்னனியில், தான் பல்கலைக்கழகங்களின் பணிகள் தொடர்பான பயணங்களின் போது, பல நாடுகளில், பல நூலகங்களில் இலங்கைத் தமிழர் வரலாறு தொடர்பான இலட்சக் கணக்கான ஆவணங்கள் குவிந்து கிடப்பதை தான் கண்டதாகவும், அத்துடன் லண்டன் பல்கலைக் கழகத்தில் இருந்தப்போதும் இந்த ஆவணங்களை எல்லாம் ஆய்வு செய்து, தமிழரின் வரலாற்றை ஆதாரங்களுடன் ஆவணமாக்க வேண்டும் என்றும், இந்த ஆய்வை எப்படியாவது மேற்கொள்ள வேண்டும் எனும் ஆதங்கம் எழுந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

இவைகளே இந்த நூலாக்கத்திற்கான அடிப்படை காரணங்களாக அமைந்துள்ளன.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]