இலங்கையில் சங்ககால நாணயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் சங்ககால நாணயங்கள் என்னும் இக்கட்டுரை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால நாணயங்கள் பற்றியது. சங்ககாலம் எனப் பொதுவாகக் கருதப்படும் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரையிலான 600 ஆண்டுக் காலப் பகுதியில் மூவேந்தர்கள் என அழைக்கப்பட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டனர். இவ்வாறான நாணயங்களுட் பல இலங்கையின் பல பாகங்களிலும் கிடைத்துள்ளன.

வரலாற்றுப் பின்னணி[தொகு]

தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகப் பழைய காலம் முதலே பல்வேறு வகையான தொடர்புகள் இருந்து வந்துள்ளன. சிங்கள இனத்தைத் தொடக்கியவர்கள் என நம்பப்படும் விசயனும் அவனது 700 நண்பர்களும் பாண்டிய நாட்டில் இருந்து பெண்களை வரவழைத்து மணம் புரிந்து கொண்டதாக மகாவம்சம் என்னும் சிங்களவரின் வரலாற்று நூல் கூறுகிறது. அத்துடன், தமிழ் நாட்டில் பழங்காலத்தில் நிலவிய நுண்கற்கால, பெருங்கற்காலப் பண்பாட்டை ஒத்த பண்பாட்டைக் காட்டும் தொல்பொருட்கள் இலங்கையில் பல இடங்களில் கிடைத்துள்ளன. சங்ககாலப் பகுதியில் தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே வணிகத் தொடர்புகள் இருந்ததைக் காட்டும் சான்றுகளும் இலங்கையில் கிடைத்துள்ளன.

தமிழ் நாட்டு வணிகர்கள் பெரும்பாலும் இலங்கையின் வடக்கு, வட மேற்குக் கரையோரங்கள் ஊடாகவே வணிகம் நடத்தி வந்தனர். இதனால், இது தொடர்பான தொல்லியற் சான்றுகளும் இப்பகுதியில் அதிகம் கிடைக்கின்றன.

சங்ககால நாணயங்கள்[தொகு]

சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட நாணயங்கள் சதுர, நீள்சதுரச் செப்புக் காசுகள்; பெருவழுதிக் காசுகள், ஆண்டிப்பட்டிக் காசுகள், மாக்கோதைக் காசுகள், கொல்லிப்புறைக் காசுகள், குட்டுவன்கோதைக் காசுகள் போன்ற பெயர்களால் அறியப்படுகின்றன.[1] பல சங்ககால நாணயங்களில் மன்னர் பெயர் எதுவும் இல்லை. இவற்றின் பின்புறம் காணப்படும் அவர்களின் குலச் சின்னங்களை அடிப்படையாக வைத்தே நாணயங்கள் அடையாளம் காணப்படுகின்றன. சோழர் நாணயங்களில் முன்பக்கம் யானையும் பின்பக்கத்தில் புலி உருவமும் பொறிக்கப்பட்டன. முன்பக்கத்தில் யானையும் பின்பக்கத்தில் பனை மரமும் பொறிக்கப்பட்டவை சேரர் நாணயங்கள். முன்புறம் யானையும் பின்புறத்தில் மீனும் பொறிக்கப்பட்ட நாணயங்கள் பாண்டியர் நாணயங்கள்.[2] மன்னர் பெயர் பொறிக்கப்பட்ட சில நாணயங்களும் உள்ளன. இவற்றுள் பெருவழுதி, எதிரன், அதிரன், சேந்தன், கொல்லிரும்புறை போன்ற பெயர்களுடன் கூடிய நாணயங்கள் அடங்கும். குட்டுவன் கோதை, மாக்கோதை ஆகியோர் வெளியிட்ட நாணயங்களில் மன்னனின் பெயரும் உருவமும் காணப்படுகின்றன.[3]

இலங்கையில் கிடைத்த நாணயங்கள்[தொகு]

இலங்கையில் சோழரும் பாண்டியரும் வெளியிட்ட சங்ககால நாணயங்கள் கிடைத்துள்ளன. சேரரின் நாணயங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சோழரினதும், பாண்டியரதும் நாணயங்கள் இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அநுராதபுரம், மன்னாருக்கு அருகில் பெரிய வணிகத் துறைமுகமாக விளங்கிய மாதோட்டம், யாழ் குடாநாட்டில் முக்கிய நகரமாக விளங்கிய கந்தரோடை ஆகிய இடங்களிலும் பூநகரியிலும், கிடைத்துள்ளன. இவற்றுள்ளும் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களே அதிகம்.[4]

கந்தரோடை[தொகு]

1917 ஆம் ஆண்டில் கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் சில பாண்டியர்களின் சங்ககால நாணயங்கள் கிடைத்தன. இவை பெருவழுதி நாணயங்களென இனங்காணப்பட்டுள்ளன. அண்மைக் காலத்திலும் மூன்று நாணயங்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றுள் சதுர வடிவான இரண்டு நாணயங்கள் பெருவழுதி நாணயங்கள்.[5] இங்கே சில சோழ நாணயங்களும் கிடைத்துள்ளன.

பூநகரி[தொகு]

1989-95 காலப் பகுதியில் ப. புஷ்பரட்ணத்தின் ஆய்வுகளில் இப்பகுதியில் இருந்து 19 சங்ககால நாணயங்கள் கிடைத்தன. இவற்றுள் 17 பாண்டியர் நாணயங்கள். இரண்டு சோழர் வெளியிட்டவை.[6]

குறிப்புக்கள்[தொகு]

  1. காசிநாதன், நடன., 2003. பக். 16.
  2. காசிநாதன், நடன., 2003. பக். 16, 17.
  3. புஷ்பரட்ணம், ப., 2003, பக். 78.
  4. புஷ்பரட்ணம், ப., 2003, பக். 78.
  5. புஷ்பரட்ணம், ப., 2003, பக். 80, 81.
  6. புஷ்பரட்ணம், ப., 2003, பக். 81.

உசாத்துணைகள்[தொகு]

  • காசிநாதன், நடன., தமிழர் காசு இயல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003 (முதற்பதிப்பு 1995).
  • புஷ்பரட்ணம், ப., தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு, பவானி பதிப்பகம், யாழ்ப்பாணம், 2003 (முதற்பதிப்பு 2000).