இலங்கையின் முடிவுறாத போர்
| இலங்கையின் முடிவுறாத போர் | |
|---|---|
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| மொழி | ஆங்கிலம் |
| தயாரிப்பு | |
| ஓட்டம் | 30 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | பி.பி.சி உலகச் செய்திகள் |
| ஒளிபரப்பான காலம் | 9 நவம்பர் 2013 |
இலங்கையின் முடிவுறாத போர் (Sri Lanka's Unfinished War) என்பது இலங்கை அரசாங்கத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இனவழிப்பு மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை ஆராயும் 2013 ஆண்டைய ஆவணப்படமாகும். இது இலங்கைக்கான முன்னாள் பிபிசி நிருபர் பிரான்சிஸ் ஹாரிசனால் வழங்கப்பட்டது. இது முதன்முதலில் 2013 நவம்பர் 9 அன்று பிபிசி உலக செய்திகளில் திரையிடப்பட்டது. இலங்கையின் முடிவுறாத போர் ஆவணப்படத்தில் நேர்காணல் செய்யப்பட்டவர்களிடமிருந்து வெளியான கடுமையான சாட்சியங்களைக் கொண்டுள்ளது. இதில் இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மை தேசிய இனத்தின் மீது அரசால் போருக்குப் பிந்தைய காலத்தில் நிகழ்த்தபட்ட பாலியல் வன்கொடுமைகள், தடுப்புக்காவலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.[1] [2] காணொளிகளில் இருந்து கொடுக்கபட்ட ஆதாரங்களை இலங்கை அரசு மறுத்தது.
உள்ளடக்கம்
[தொகு]முப்பது நிமிட நேரம் கொண்ட இந்த ஆவணப்படம், இலங்கைப் படைகளால் பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் ஆண்கள் மற்றும் பெண்களின் சாட்சியங்களுடன் 2013 ஆகத்தில் வெளியிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிகரெட்டுகளால் சூடுவைக்கப்பட்டு, மூச்சுத் திணறடிக்கப்பட்டு, குழாய்களால் தாக்கபட்டு, கம்பிகளால் சூடுவைக்கப்பட்டு, தங்களுக்குப் புரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று கூறுகின்றனர். [3] பாதிக்கப்பட்டவர்களின் கூற்றுகள் நம்பகமானவை மற்றும் சட்டபூர்வமானவை என்பதை சுயாதீன நிபுணர்களும் மருத்துவ அறிக்கைகளும் சரிபார்த்து உறுதிப்படுத்தின. [4][5]
பாதிக்கப்பட்டவர்களின் பதிவுகள்
[தொகு]பாதிக்கப்பட்டவர்களின் துயரமான கூற்றுகள் ஆவணப்படம் முழுவதும் காணப்படுகின்றன. பாதிக்கபட்டவர்களில் ஒருவரான நந்தினி, அந்த ஆண்டின் துவக்கத்தில் தனது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு மூடுந்தில் கண்களைக் கட்டியபடி கொண்டு செல்லப்பட்டு, இராணுவ மற்றும் சாதாரண உடையில் இருந்த ஆண்களால் தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் நடந்த 200க்கும் மேற்பட்ட சித்திரவதை வழக்குகளை விசாரித்தவரும், இங்கிலாந்து நீதிமன்றங்களுக்கான நிபுணத்துவ சாட்சியுமான மருத்துவர் அலிசன் காலவே, அண்மைய பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை பற்றிய தனது தகவல்களை உடல் மற்றும் உளவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன என்று முடிவு செய்தார். [1] [3]
அரசாங்கத்தின் 'மறுவாழ்வு' திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரவி என்பவர், இராணுவக் காவலில் தான் இருந்தபோது தாக்கப்பட்டு, மூச்சுத் திணறடிக்கப்பட்டு, கடுமையாக கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறினார்.[5]
அரசாங்கத்தால் எப்போது, எங்கு கைது செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க ஆவணங்களைக் கொண்ட சிவா, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பே கடுமையான சித்திரவதைக்கும், துஷ்பிரயோகத்திற்கு ஆளானார். [4]
அவதானிப்புகள்
[தொகு]பிபிசி, ஐக்கிய நாடுகள் அவை மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளின் கண்டுபிடிப்புகளை பகுப்பாய்வு செய்த, முன்னணி பிரிட்டிஷ் வழக்கறிஞர் கிர்ஸ்டி பிரிமெலோ கூறியது:[5]
இவை அனைத்தும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்திற்குச் சமம், எனவே இது போன்ற வழக்குகளில், பொதுவாக அவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு மேலதிக விசாரணைக்காக பரிந்துரைக்கப்படுவதைப் பார்ப்பீர்கள்.
அறிக்கையை எழுதிய சாத்தம் அவுஸின் அசோசியேட் ஃபெலோ சாரு லதா ஹாக், நிகழ்ச்சி நிரலுக்கு இவ்வாறு கூறியது: [4]
நாங்கள் சேகரித்த ஆதாரங்களில், இந்த பாலியல் வன்முறைகள் முரட்டுத்தனமான அதிகாரிகளால் மட்டும் நிகழ்த்தப்படவில்லை அல்லது சீரற்ற வன்முறைச் செயல்கள் அல்ல என்பதைத் தெளிவாகக் காட்டும் போதுமான குறிப்புகள் இருக்கின்றன. அனைத்து குற்றங்களும் ஒருங்கிணைப்பு நிலையில் வரம்பு மீறலுடன் நடத்தப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "BBC World News - 'Tamils still being raped and tortured' in Sri Lanka". https://www.bbc.co.uk/news/world-asia-24849699. பார்த்த நாள்: 10 November 2013.
- ↑ "BBC Our World: Sri Lanka's Unfinished War". Our World. Retrieved 10 November 2013.
- ↑ 3.0 3.1 "Sri Lanka's unfinished war: BBC documentary on air on Saturday". Deccan Chronicle. Archived from the original on 11 November 2013. Retrieved 13 November 2013.
- ↑ 4.0 4.1 4.2 "BBC World News investigation reveals recent allegations of rape and torture in post-war Sri Lanka". BBC. Archived from the original on 11 November 2013. Retrieved 13 November 2013.
- ↑ 5.0 5.1 5.2 "Tamils still face rape and torture in Sri Lanka's 'Unfinished War' - BBC reports". Tamil Guardian. 8 November 2013. https://www.tamilguardian.com/content/tamils-still-face-rape-and-torture-sri-lankas-unfinished-war-bbc-reports?articleid=9134. பார்த்த நாள்: 13 July 2020.