இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் என்னும் தலைப்பிட்ட நூல், இலங்கையில் இதுவரை கண்டெடுக்கப்பட தமிழ்ச் சாசனங்கள் அல்லது கல்வெட்டுக்களில், கிபி 700 முதல் கிபி 1300 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்ட சாசனங்களைப் பற்றியது.[1] பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய இந்நூல், 2006ம் ஆண்டு இலங்கை இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.[2] இதில் இடம்பெற்றுள்ள பல்வேறு விளக்கங்களும் ஆய்வுகளும் தனிக் கட்டுரைகளாகவும், அங்கொன்றும் இங்கொன்றுமாக வேறு நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றிலும் இடம்பெற்றிருப்பினும், இவ்வாறான கல்வெட்டுக்களுள் பெரும்பாலானவற்றைப் பற்றிய தகவல்களை ஒரேயிடத்தில் தருவது இந்த நூலின் சிறப்பு ஆகும். அத்துடன், இந்நூலில் இடம்பெற்றுள்ள சில கல்வெட்டுக்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வேறெங்கும் வெளியிடப்படாதவை.

அமைப்பு[தொகு]

நூலின் ஆரம்பத்தில் வெளியீட்டுரையும், நூலாசிரியரின் ஆங்கில முன்னுரையும் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து தமிழில் நூலாசிரியரின் நீண்ட முன்னுரை காணப்படுகிறது. இம்முன்னுரையில், தமிழ்க் கல்வெட்டுக்கள் தொடர்பிலான சில அடிப்படையான விடயங்கள் விளக்கப்படுகின்றன. குறிப்பாக, தமிழ்ப் பிராமிச் சாசனங்கள், தமிழ்ப் பிராமிச் சாசனங்களுக்கும் பெருங்கற்காலப் பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்புகள், இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடு, ஈழத்துப் பிராமிச் சாசனங்கள், தென்னிலங்கை நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்கள் போன்ற தலைப்புக்களின் கீழ் நூலில் கையாளப்பட்டுள்ள விடயங்களைப் புரிந்து கொள்வதற்கான தகவல்கள் இம்முன்னுரையில் எடுத்தாளப்பட்டுள்ளன. முன்னுரையின் இறுதியில் நூலில் உள்ள விடயங்கள் பற்றிய அறிமுகம் உள்ளது.

நூல் பின்வரும் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:[3]

  1. இலங்கைத் தமிழ்ச் சாசனங்களும் பூர்வாங்க வெளியீடுகளும்
  2. அனுராதபுரக் காலத்துச் சாசனங்கள்
  3. சோழர் காலத்துச் சாசனங்கள்
  4. பொலநறுவை காலத்துச் சாசனங்கள் - 1, பிரமதேயங்களின் சாசனங்கள்
  5. பொலநறுவை காலத்துச் சாசனங்கள் - 2, வீரசாசனங்களும் வீர பட்டினங்களும்
  6. பொலநறுவை காலத்துச் சாசனங்கள் - 3, படைவீரரின் சாசனங்கள்
  7. பொலநறுவை காலத்துச் சாசனங்கள் - 4, அரசின் பிரகடனங்களும், கோயிற் சாசனங்களும்

இறுதியில், நூலில் எடுத்தாளப்பட்ட சாசனங்களின் முழுமையான வாசகங்களும், தொடர்ந்து அடிக்குறிப்புக்கள், உசாத்துணை நூல்கள், சொல்லடைவு என்பன உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "வரலாற்றுத் தொன்மை மிக்க முருக்கன் தீவு". பார்த்த நாள் 15 அக்டோபர் 2015.
  2. "சிவசுப்பிரமணியம் பத்மநாதன்". பார்த்த நாள் 15 அக்டோபர் 2015.
  3. பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், 2006. பக் xvii, xviii

வெளி இணைப்பு[தொகு]