இலங்கைச் சிறுத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கைச் சிறுத்தை
Sri Lankan Leopard
இலங்கைச் சிறுத்தை
இலங்கைச் சிறுத்தை
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு பாலூட்டிகள்
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனைப் பேரினம்
பேரினம்: பான்தெரா
இனம்: P. pardus
சிற்றினம்: P. p. kotiya
முச்சொற்பெயர்
Panthera pardus kotiya
தெரனியாகல, 1956
இலங்கைச் சிறுத்தைகளின் பரம்பல்

இலங்கைச் சிறுத்தை (Sri Lankan Leopard, Panthera pardus kotiya) சிங்கம், புலி, ஜகுவார் (Jaguar), பனிச் சிறுத்தை (Snow Leopard), சிறுத்தை என்பன Felidae என்ற பூனைக் குடும்பத்தில் Panthera என்ற சாதியைச் சேர்ந்த விலங்கு இனங்களாகும். ஊணுண்ணும் முலையூட்டிகளான இவை பொதுவாகப் பெரும் பூனைகள் (Big Cats) என அழைக்கப்படுகின்றன. மேற்குறித்த இனங்களுள் மத்திய அமெரிக்கா, மற்றும் தென்அமெரிக்கக் காடுகளில் காணப்படும் ஜகுவார் மாத்திரமே தோற்றத்தில் சிறுத்தையை ஒத்திருக்கிறது. சிறுத்தைகள் ஆசிய, ஆபிரிக்கக் காடுகளில் பரவலாக வாழ்கின்றன. இவ்விரு இனங்களிலும் பளுப்பு மஞ்சள் நிறமான தோலில் கறுப்பு நிறப் புள்ளிகளும் ரோசாப் பூ போன்ற அடையாளங்களும் (Rosettes) காணப்படுகின்றன.

கூர்ப்படைந்த இனம்[தொகு]

இலங்கையில் காணப்படும் சிறுத்தைகள் ஏனைய நாடுகளில் காணப்படும் சிறுத்தைகளிலிருந்து பல விதங்களில் வேறுபடுகின்றன. இந்தியப் பெருநிலத்திலுள்ள சிறுத்தைகளிலிருந்து கடலினால் பிரிக்கப்பட்டிருப்பதனால் இலங்கைச் சிறுத்தைகள் வித்தியாசமான முறையில் கூர்ப்பு அடைந்திருப்பதாக விலங்கியலாளர்கள் கருதுகின்றனர். எனவே இவற்றை அவர்கள் உப இனமொன்றாகப் பாகுபடுத்தி உள்ளனர். பொதுவாக, சிறுத்தைகள் அனைத்தும் Panthera pardus எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வினத்தில் எட்டு உப இனங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்த வகையில் இலங்கையில் மட்டுமே காணப்படும் உப இனமான இலங்கைச் சிறுத்தை Panthera pardus kotiya எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உருவ அமைப்பு[தொகு]

பெரும் பூனை இனங்களுள் சிறுத்தைகளே உருவில் சிறியனவாக இருக்கின்றன. சிறுத்தையின் உடல் நீண்டு. எளிதில் வளைந்து கொடுக்கக்கூடியதாகக் காணப்படுகின்றது. இதன் கால்கள் தடித்துக் குட்டையாக இருப்பதோடு அகன்ற பாதங்களையும் கொண்டுள்ளன. தோலிலுள்ள கறுப்புப் புள்ளிகளும் அடையாளங்களும் விலங்குக்கு விலங்கு வேறுபடும். இலங்கைச் சிறுத்தைகள் ஏனைய சிறுத்தை உப இனங்களை விடப் பருமனில் பெரியனவாக உள்ளன. இவற்றிலும் ஆண் விலங்குகள் பெண்ணைவிடப் பருமனில் கூடியவை. ஆண் விலங்கொன்றின் சராசரி நிறை 50 கிலோகிராம் வரையும் பெண் விலங்கின் நிறை 29 கிலோகிராம் வரையும் காணப்படலாம்.

ஊனுண்ணிகள்[தொகு]

சிங்கம், புலி போன்ற வலிமையில் கூடிய பெரிய ஊனுண்ணிகள் வாழும் நாடுகளில் சிறுத்தைகள் தம் உணவுக்காக அவற்றுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இப்போட்டி காரணமாக வலிமை கூடிய விலங்குகளால் சிறுத்தைகள் கொல்லப்படுவதும் உண்டு. இலங்கைக் காடுகளில் சிங்கம், புலி போன்றவை இல்லாமையினால் சிறுத்தைக்கு அவ்வாறான போட்டியோ இயற்கை எதிரிகளோ இல்லை. எனவே, அவை உணவுச் சங்கிலிகளின் உச்சத்தில் காணப்படுகின்றன.

இலங்கைச் சிறுத்தை

மேற்குறிப்பிட்ட சாதகமான நிலைமைகள் காரணமாக ஒரு காலத்தில் சிறுத்தைகள் இலங்கைக் காடுகளில் பெருகிக் காணப்பட்டன. எனினும், இப்போது மனிதன் சிறுத்தைகளின் பிரதான எதிரியாக மாறியுள்ளான். இலங்கைச் சிறுத்தை மனிதர்களைத் தாக்குவது அரிது. எனினும், இயற்கையான இரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது அவை மனிதக் குடியேற்றங்களை நாடிச் சென்று கால்நடைகளையும் நாய்களையும் கொன்று தின்கின்றன. இதனால் சிறுத்தைகளைக் கொல்வதற்கு மனிதன் நாடுகின்றான்.

சட்டத்தினால் பாதுகாப்பு[தொகு]

இதைத் தவிர, சிறுத்தைத் தோலுக்கு நல்ல கிராக்கி இருப்பதனால் தோலைப் பெறுவதற்காகப் பெருந்தொகையான சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன. சேனைப் பயிர்ச்செய்கை, காடழித்தல் போன்றனவும் சிறுத்தைகளின் இயல்பான வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இலங்கைச் சிறுத்தைகளைச் சட்டத்தினால் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) இலங்கைச் சிறுத்தையை அருகிய இனமாகப் (அழிவுறும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள விலங்காகப்) பிரகடனம் செய்துள்ளது.

இனப்பெருக்கம்[தொகு]

இலங்கைச் சிறுத்தைகள் வருடத்தின் எந்தப் காலத்திலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடக்கூடும். எனினும், 'யால' தேசிய வனத்திலுள்ள சிறுத்தைகள் ஜுன் - ஆகஸ்ட் காலத்திலும் டிசம்பர் - ஜனவரி காலத்திலும் உச்சமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சிறுத்தையில் கர்ப்ப காலம் 98 - 105 நாட்களாகும். ஒரே சூலில் ஒன்று முதல் நான்கு வரையான குட்டிகள் ஈனப்படலாம். குட்டிகள் முதிர்ச்சி நிலையை அடைய 18 மாதங்கள் பிடிக்கும். ஒரே சூலில் அதிக எண்ணிக்கையான குட்டிகள் பிறக்கும் சந்தர்ப்பத்தில் சில குட்டிகளே பிழைத்து வளர்கின்றன.

வாழிடம்[தொகு]

இரவில் நடமாடும் பழக்கம் கொண்டவை.

பொதுவாகச் சிறுத்தைகள் மரங்களில் வாழும் பழக்கத்தை உடையவை. வாழிடமாகவும், தாம் கொன்ற இரைகளைச் சேமித்து வைக்கும் இடமாகவும் அவை மரங்களைப் பயன்படுத்துகின்றன. பாரம்மிக்க விலங்குகளின் உடல்களை இழுத்துக்கொண்டு மரங்களில் லாவமாக ஏறவும் மரத்துக்கு மரம் தாவவும் அவற்றால் முடியும். பொதுவாகச் சிறுத்தைகள் இரவில் நடமாடும் பழக்கம் கொண்டவை. எனினும், இலங்கைச் சிறுத்தைகள் பகலிலும் இரைதேடி நடமாடுவதை 'யால' போன்ற வனவிலங்குப் புகலிடங்களில் காணமுடிகிறது.

ஆட்சிப் பிரதேசம்[தொகு]

குட்டிகளோடு தாய் இணைந்து வாழும் சந்தர்ப்பத்தைத் தவிர ஏனைய காலங்களில் சிறுத்தைகள் தனித்தே வாழ்கின்றன. ஒவ்வொரு விலங்கும் தனது ஆட்சிப் பிரதேசத்தை அடையாளமிட்டு வரையறுத்துக் கொள்கிறது.

ஆதாரம்[தொகு]

அரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை

மேற்கோள்கள்[தொகு]

  1. Kittle, A., Watson, A. (2008) Panthera pardus ssp. kotiya. In: IUCN 2010. IUCN Red List of Threatened Species. Version 2010.4. online
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கைச்_சிறுத்தை&oldid=1358744" இருந்து மீள்விக்கப்பட்டது