இலக்கிய வெளிவட்டம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கிய வெளிவட்டம் என்பது 1970 களில் வெளியான தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வெளிவந்தத காலாண்டு இடதுசாரி முற்போக்கு இதழ் ஆகும்.

வரலாறு[தொகு]

இலக்கிய வெளிவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் வ. புதுப்பட்டி என்ற ஊரிலிருந்து வெளிவந்த இதழாகும்.[1] இது 1976இல் காலாண்டு ஏடாக துவக்கப்பட்டது. இது இலக்கிய விவாதத்தில் ஆர்வம் கொண்டிருந்தது. இலக்கிய வெளிவட்டத்தில் முதன்மையாக மார்க்சியத்தைப் பரந்த அடிப்படையில் ஏற்றுக் கொண்டவர்கள் எழுதினார்கள்.

1982 சூன் இதழில் இலக்கிய வெளிவட்டம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இலக்கியம், கலை, கலாச்சாரம், சமூக விஷயங்களில் கவனம் செலுத்திய இலக்கிய வெளிவட்டம் சாதி, சமயப் பிரச்னைகளுக்கு அதிகமான கவனிப்பைத் தரத் தீர்மானித்தது என்றது அது.

1983இல் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி இலக்கிய வெளிவட்டம் அதிகக் கவலையும் தீவிர அக்கறையும் காட்டியது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள சிறு பத்திரிகைச் சூழல் சார்ந்தவர்கள், கலாச்சார அமைப்புகள் இணைந்த கருத்தரங்கம் ஒன்றை ‘இலக்கிய வெளிவட்டம்' ஏற்பாடு செய்தது. 7. செப்டம்பர். 1983 அன்று மதுரையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுயேச்சை எழுத்தாளர்கள், படைப்பாளிகள் சிலரும் கலந்துகொண்டார்கள். அங்கே வெளியிடப்பட்ட கருத்துக்கள், தீர்மானங்கள் அனைத்தையும் தொகுத்துத் தரும் இலக்கிய வெளிவட்டம் இதழ் நவம்பரில் வெளிவந்தது. இந்தச் சிறப்பிதழ் இலங்கைத் தமிழர் பிரச்னைகளையும் போராட்ட அனுபவங்களையும் தமிழ்நாட்டினருக்கு உணர்த்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்டது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "தமிழம் வலை - பழைய இதழ்கள்". www.thamizham.net. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
  2. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 184–188. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.