இறைக்குருவன்
இறைக்குருவன் | |
---|---|
பிறப்பு | சாமிநாதன் 20 ஏப்ரல் 1942 தீவாமங்கலம், பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 23 நவம்பர் 2012 தமிழ்நாடு, இந்தியா | (அகவை 70)
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
பெற்றோர் | மீனாட்சி (தாய்) முத்தையா (தந்தை) |
வாழ்க்கைத் துணை | பொற்கொடி |
உறவினர்கள் | பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மாமனார்) ப. அருளி (தமர்) |
மு. சாமிநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இறைக்குருவன் (20 ஏப்ரல் 1942- 23 நவம்பர் 2012) ஒரு தமிழ்நாட்டுப் புலவர் ஆவார். மறைமலை அடிகள் மீது பற்றுக் கொண்டவர் தனித்தமிழ் இயக்க முன்னோடியாக இருந்து இயங்கியவர். இதழாசிரியர், நூலாசிரியர், உரையாசிரியர் போராளி எனப் பலவாறு போற்றப்படும் ஓர் அறிஞர் ஆவார். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழ்ந்த புலமைப் பெற்றவர்.
பிறப்பும் கல்வியும்
[தொகு]இன்றைய திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் அமைந்துள்ள தீவாமங்கலம் என்னும் சிற்றுரில் 20 ஏப்ரல் 1942 அன்று மீனாட்சி அம்மாள்-முத்தையா இணையருக்கு மகனாகப் பிறந்தார் இறைக்குருவன். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சாமிநாதன் என்பதாம்.தூய தமிழிலும் சிவ நெறியிலும் நாட்டம் கொண்டதால் மறைமலை அடிகளைப் பின்பற்றி இறைக்குருவன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார் பள்ளியில் பயிலுங்கால் திருக்குறள் முழுவதையும் மனப்பாடம் செய்தார். பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர் ஆனார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார்.அப்பொழுது தென்மொழி என்னும் இதழை மாணவத் தோழர்களிடம் அளித்து தனித்தமிழ் உணர்வைப் பரப்பினார்.
இல்லறம்
[தொகு]1969 ஆம் ஆண்டில் பெருஞ்சித்திரனாரின் மூத்த மகள் பொற்கொடியை விரும்பி மணந்து கொண்டார். மகனுக்குத் தமிழ்ச்செம்மல் என்றும் பெண் மக்கள் இருவருக்கும் இசைமொழி என்றும் அங்கயற்கண்ணி என்றும் பெயர்களைச் சூட்டினார்.
பணிகள்
[தொகு]கடலூர் தூய வளனார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் மதுரையில் வெற்றித் தனிப் பயிற்சிக் கல்லூரியில் சில ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் பதிப்பாசிரியராகவும் சுதேசமித்திரன், மாலை முரசு, முரசொலி ஆகிய நாளிதழ்களில் துணை ஆசிரியராகவும் இருந்து பணி செய்தார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி பதிப்பாசிரியராகவும் இருந்தார்.
இயக்கப் பணிகள்
[தொகு]- 1964-65 காலத்தில்அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் போராடியபோது இறைக்குருவன் களத்தில் நின்று மாணவர்களை ஒருங்கிணைத்து முனைப்புடன் போராடினார்.
- 1968 இல் தேவநேயப் பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவித்தபோது அதில் இணைந்தும் பொறுப்பேற்றும் இயங்கினார். இறைக்குருவன் பொதுச் செயலாளராக இருந்தபோது தஞ்சையில் தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடு பாவாணர் தலைமையில் நடந்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது.
- மனு தரும நூல் எரிப்புப் போராட்டத்தில் தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனாருடன் இணைந்து கலந்து கொண்டு சிறை சென்றார்.
- தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி நடந்த பரப்புரைச் சுற்றுப் பயணத்திலும் தமிழ் அறிஞர்கள் நூறு பேர் உண்ணாநோன்பு அறப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
- தமிழ் ஈழப் போராட்டம், மொழி ஈகிகளின் வீர வணக்க நாள் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
- பழ. நெடுமாறன் தலைமையில் இயங்கும் உலகத் தமிழர் பேரவையில் துணைத் தலைவராக இருந்தார்.
- தென்மொழி அவையம் , பாவலரேறு பெருஞ்சித்திரனார் அறக்கட்டளை, பாவலரேறு தமிழ்க் களம் ஆகிய அமைப்புகளின் நிகழ்வுகளில் முகாமையான பங்காற்றினார்.
- திருக்குறள் பாடி, தேவாரம் ஓதித் தமிழ் நெறியில் பல திருமணங்களை நடத்தி வைத்தார்.
இதழிகைப் பணி
[தொகு]பாவை என்னும் மகளிர் இதழ், வலம்புரி என்னும் திங்களிதழ், குன்றக்குடிகள் நடத்திய தமிழகம் என்னும் இதழ் ஆகியவற்றைப் பொறுப்பேற்று நடத்தினார். பெருஞ்சித்திரனார் மறைவுக்குப் பின் தென்மொழி இதழின் ஆசிரியர் ஆனார். தம் இறுதிக் காலத்தில் மக்கள் தொலைக் காட்சியில் ஊரும் பேரும் என்னும் நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றினார்.
சிறப்புப் பட்டங்கள்
[தொகு]புலவர் இறைக்குருவனாரின் திருக்குறள் புலமையைப் போற்றி தமிழ் அறிஞர் அ. கி. பரந்தாமனார் திருக்குறள் மணி என்னும் பட்டத்தை வழங்கினார். திருக்குறள் செந்தொண்டர் தமிழ்த் தேசியச் செம்மல், மொழிப் போர் மறவர், இதழ் மாமணி ஆகிய பட்டங்களை பல்வேறு அமைப்புகள் வழங்கின.
இறைக்குருவனார், திருக்கழுக்குன்றத்தில் மறைமலையடிகள் மன்றத்தின் சார்பில் திருக்குறள் தொடர்வகுப்பு நடத்தினார்; அந் நிகழ்வின் மகிழ்வாய் தமிழ்த்திரு வீ.இறையழகனார் அவர்களால் 133000 உருவா பணக்கொடை வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது.
எழுதிய நூல்கள்
[தொகு]- மொழிப் புரட்சி
- இளமைக் காலம்
- மீனாட்சிசுந்தரம் பிள்ளைத் தமிழ்
- கித்தேரி அம்மானை
- வயிர மூக்குத்தி
- சிலம்பிற் பிழையா?
- பாவேந்தரும் தமிழும்.
- நூலைப் படி.
- தமிழ்நாட்டில் பிற மொழிக் கவர்ச்சி.
- தமிழினம் அன்றும் இன்றும்.
- நல்ல தமிழ்ப் பெயர்கள்.
- திருக்குறளின் தனிச்சிறப்புகள்.
- திருக்குறள் நெறித் திருமணம்.
- தமிழரா? திராவிடரா?
- தமிழாரம்.
- வல்லினம் மிகுதலும் மிகாமையும்.
- தமிழ்த்தேசியத் திருநாள்.
- வாழ்வியற் சொல் அகர முதலி.
- தமிழ்வழிக்கல்வித்தடையும், விடையும்.
- திருக்கோயில் வழிபாடு.
- திருவள்ளுவர் அல்லது தமிழாண்டு.
உரைஎழுதிய நூல்கள்
[தொகு]- மதுரைச் சொக்கநாதர் வருக்கக் கோவை.
- உரைவிலிக்கம் சித்தேரி அம்மன் குறிப்புரை.
- பெருஞ்சித்திரனாரின் நூறாசிரியப் பாடல்களில் சில.
- பெருஞ்சித்திரனாரின் அறுபருவத் திருக்கூத்து.
பிற செய்திகள்
[தொகு]புலவர் இறைக்குருவன் இசையிலும் விருப்பம் கொண்டிருந்தார். பாரதிதாசன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் சில பாடல்களில் சிலவற்றுக்குத் தாமே இசை அமைத்துப் பாடிவந்தார். தம் இசைத் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள இசைக் கல்லூரியிலும் சேர்ந்து இசை பயின்றார். மலேசியா, சிங்கப்பூர், ஈழம் ஆகிய நாடுகளுக்கும் சென்று தமிழ் பரப்பினார்.
உசாத்துணை
[தொகு]முதன்மொழி இதழ் ஏப்பிரல் 2013
விடுதலைப் பாவலர்கள், ஆசிரியர் த.இரெ.தமிழ்மணி