இறுகுபுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறுகுபுல் என்பதை இக்காலத்தில் இறுகம்புல் என்கின்றனர். இறுகம்புல்லின் பூவின் நடுவில் ஐந்தாறு நரம்புகள் இருக்கும். வாழைப்பூவின் நடுவில் ஒரு கெட்டியான நரம்பு இருப்பதைப் போன்றது இது. இந்த நரம்பு வாழைப்பூ நரம்பைவிட மெல்லிது. குண்டூசி பருமன் இருக்கும். இந்த ஐந்தாறு நரம்புகளும் தமக்குள் ஒன்றுசேர்ந்து முறுக்கிக்கொண்டிருக்கும். இவ்வாறு தாமே இறுகி உடைவதால் இதனை இறுகுபுல் என்றனர். நன்றாகக் காய்ந்தபின் ஈரம் பட்டால் தாமே அவிழ்ந்து தானே சுழன்று உடைந்து அருகில் பரவலாக விழும்.

சிறுவர் சிறுமியர் இதனைப் பறித்து வாயில் வைத்து ஈரமாக்கி அது தானே சுழல்வதை வேடிக்கை பார்த்து மகிழ்வர். இந்தப் புல் இப்படி ஒரு விதைபரவல்[1] உத்தியைக் கையாளுகிறது.

இறுகுபுல்லை ஆறு கிளைக்கொம்பு கொண்ட கலைமான் மேய்ந்தது பற்றிச் சங்கப்பாடல் ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் புல்லை மேய்ந்தபின் அந்த மான் சேற்றில் புரண்டதாம். இத்தகைய புல்லும் மானும் வாழும் ஊராம் பாரம் என்னும் ஊர். இந்த ஊரின் காவல் பொறுப்பினை மிஞிலி என்னும் தன் படைத்தலைவனிடம் ஒப்படைத்திருந்தான் வள்ளல் நன்னன்.[2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. Pulsatilla
  2. இறுகுபுல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்
    அள்ளல் ஆடிய புள்ளி வரிக்கலை
    வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
    பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
    பாரம் - நற்றிணை 265
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறுகுபுல்&oldid=1262752" இலிருந்து மீள்விக்கப்பட்டது