உள்ளடக்கத்துக்குச் செல்

இறுகப்பற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறுகப்பற்று
இயக்கம்யுவராஜ் தயாளன்
தயாரிப்புஎஸ். ஆர். பிரகாஷ் பிரபு
எஸ். ஆர். பிரபு
பி. கோபிநாத்
தங்க பிரபாகரன் ஆர்.
கதையுவராஜ் தயாளன்
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்புவிக்ரம் பிரபு
ஷ்ரத்தா ஸ்ரீநாத்
விதார்த்
ஸ்ரீ
அபர்ணதி
சானியா ஐயப்பன்
ஒளிப்பதிவுகோகுல் பினாய்
படத்தொகுப்புஜே. வி. மணிகண்ட பாலாஜி
கலையகம்பொட்டன்சியல் ஸ்டுடியோஸ்
வெளியீடு6 அக்டோபர் 2023 (2023-10-06)
ஓட்டம்153 நிமிடங்கள்[1]

இறுகப்பற்று (Irugapatru) என்பது 2023-ஆம் ஆண்டு திரையிடப்பட்ட இந்தியத் தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை யுவராஜ் தயாளன் எழுதி இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, சிரத்தா சிறீநாத்து, விதார்த்து, சிறீ, அபர்ணதி,[2] சானியா ஐயப்பன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம், 6 அக்டோபர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சகர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தில், வெவ்வேறு குடும்பப் பின்புலங்கள், வளர்ப்பு முறைகள், பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல்கள் முதலியவற்றைக் கொண்ட மூன்று இணையர்களை முன்வைத்து, திருமண வாழ்க்கையில் இணையர்களுக்குள் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளால் ஏற்படும் பிரிவுகள் எப்படித் தீர்த்து வைக்கப்படுகின்றன என்பது அழுத்தம் திருத்தமாக விளக்கப்பட்டிருக்கிறது.

திருமண இணையர்களுக்கிடையே அன்பும் அக்கறையும் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவது குறைந்து போவதும் அவர்கள் தங்களுக்குள் மனம்விட்டுப் பேசாததுமே பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம் என்பது அழுத்தமாக உணர்த்தப்பட்டிருக்கிறது.

இணையர்கள் ஒருவரையொருவர் மட்டம் தட்டுவது, அவர்களுக்குள் எந்த அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையே புரிந்து கொள்ளாமல் இருப்பது, பெற்றோர், உறவினர்கள் ஆகியோர்களிடமிருந்து கிடைக்கும் ஏமாற்றங்களை இணையர் மீதான வெறுப்பாகப் பிரதிபலிப்பது, தனது புத்தக அறிவை, யதார்த்த வாழ்விற்குப் பொருத்தி, இணையரின் இயல்பான எதிர்பார்ப்புகளுக்கு செவிசாய்க்க மறுப்பது என இணையர்களின் பிரிவுக்கு வித்திடக்கூடிய பிரச்சினைகளின் நுட்பமான பரிமாணங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.

தம்பதிகளுக்கு இடையிலான அன்பு, விட்டுக் கொடுத்தல், சுயமரியாதையைப் பேணவேண்டிய பொறுப்பு, சிறு விவாதங்களையும் ஊடல்களையும் அணுகும் முறை ஆகியவை விவாதிக்கப்பட்டிருக்கின்றன.[3]

கதைக்களம்

[தொகு]

இத்திரைப்படத்தில் மூன்று இணையர்கள். ஓர் இணை: மனோகர் (விக்ரம் பிரபு), மித்ரா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்); அடுத்த இணை: ரங்கேஷ் (விதார்த்), பவித்ரா (அபர்ணதி); மூன்றாவது இணை: அர்ஜுன் (ஸ்ரீ), திவ்யா (சானியா ஐயப்பன்).[4]

இந்த மூன்று இணைகளுக்குள்ளும் வெவ்வேறு வகையில் வெவ்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை நாளடைவில் பிரிவுகள் ஏற்படும் வரை சென்று விடுகின்றன.

மித்ரா மனோகர் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்), திருமண இணையர்களுக்கிடையே எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் உளவியல் ஆலோசகர். அவளுக்கும் கணவர் மனோகருக்கும் இடையேயான திருமண வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தன் உளவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, இயல்பாக எழக்கூடிய பிரச்சினைகளத் தவிர்த்து விடுகிறாள்.[5] ஆனால், அவளது கணவர் மனோகருக்கோ, தன் மனைவி மித்ரா, தன்னிடமும் உளவியல் ஆலோசகர் போல் நடந்து கொள்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதுவே அவர்களது வாழ்வில் பிரச்சினையாக உருவெடுக்கிறது.

இரண்டாவது இணையான ரங்கேஷ், பவித்ரா தம்பதிகள், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். ரங்கேஷ், தன் மனைவி பவித்ராவிடம், அவளின் குழந்தை பிறப்பிற்குப் பிறகு அவள் பருமனாகிவிட்டதைக் காரணமாக்கி, அவளிடம் விவாகரத்து கோருகிறார். அவரின் வாயில் துர்நாற்றம் வீசுகிறது என்று அவர்களது பிரச்சினை மித்ராவிடம் கொண்டுவரப்படுகிறது.

மூன்றாவது இணையான அர்ஜுன், திவ்யா இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்கள். இருவரும் தினமும் வாய்ச்சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இருவருக்கும் மணவாழ்க்கையில் தொடர்ந்து பயணிப்பது போராட்டமாக இருக்கிறது. வேலை, மன அழுத்தங்களினால் அவர்கள் காதலை மறந்து பிரிந்து விட, இவர்களது பிரச்சினைகளும் மித்ராவிடம் மனநல ஆலோசனைக்காக வருகின்றன.[6]

வாழ்க்கையில் அதிக கவனத்துடன் இருந்தாலும் தவறு என்பதைச் சுட்டிக் காட்டி, முதல் இணைகளுக்குத் தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. பருமனாக இருப்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்பது சுட்டிக் காட்டப்பட்டு இரண்டாம் இணைகள் இணைக்கப்பட்டுள்ளது. யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அனைவருக்கும் மரியாதை பொதுவானது என்று மூன்றாவது இணைகளை இணைத்திருக்கிறார்கள்.

குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும், அவற்றில் ஏற்படும் சின்னச் சின்னத் தவறுகள் எப்படி சரிசெய்யப்பட வேண்டும் என்றும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் அழகாகவும் எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அழுத்தமாகவும் ஆழமாகவும் கூறப்பட்டு, உறவுகளை இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவாகிறது.

கதாபாத்திரங்கள்

[தொகு]
  • விக்ரம் பிரபு - மனோகர் (மனோ)
  • ஷ்ரத்தா ஸ்ரீநாத் - மித்ரா மனோகர்
  • விதார்த் - ரங்கேஷ்
  • ஸ்ரீ - அர்ஜூன்
  • அபர்ணதி - பவித்ரா
  • சானியா ஐயப்பன் - திவ்யா
  • மனோபாலா
  • மை. பா. நாராயணன் - வங்கி மேலாளர்
  • ரெட் ஜெயன்ட் சுப்பிரமணி
  • பசி சத்யா - பவித்ராவின் வேலையாள்
  • டிங்கு - ரங்கேஷ் (பவித்ராவின் மகன்)
  • சாப்ளின் சுந்தர் - வழக்கறிஞர்

துறைகள்

[தொகு]
  • இயக்கம் - யுவராஜ் தயாளன்
  • தயாரிப்பு - எஸ். ஆர். பிரகாஷ் பிரபு;
    எஸ். ஆர். பிரபு;[7]
    பி. கோபிநாத்;
    தங்க பிரபாகரன் ஆர்.
  • கதை - யுவராஜ் தயாளன்
  • இசை - ஜஸ்டின் பிரபாகரன்
  • நடிப்பு - விக்ரம் பிரபு;
    ஷ்ரதா ஸ்ரீநாத்;
    விதார்த்;
    ஸ்ரீ நடராஜன்;
    அபர்னதி;
    சானியா ஐயப்பன்
  • ஒளிப்பதிவு - கோகுல் பினாய்
  • படத்தொகுப்பு - ஜே. வி. மணிகண்ட பாலாஜி
  • கலையகம் - பொட்டன்சியல் ஸ்டுடியோஸ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இறுகப்பற்று - விமர்சனம் {3/5} : இறுகப்பற்று - பாசத்துடன்… - Irugapatru". cinema.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2026-05-17.
  2. "இறுகப்பற்று விமர்சனம்". Samayam Tamil. Retrieved 2026-05-17.
  3. விகடன் டீம் (2023-10-06). "இறுகப்பற்று விமர்சனம்: `திகட்ட திகட்ட காதலித்தவரை ஏன் வெறுக்கிறோம்?'- படம் சொல்வதென்ன?". www.vikatan.com/. Retrieved 2026-05-17.
  4. செய்திப்பிரிவு, நக்கீரன் (2023-10-07). "மூன்று ஜோடிகளின் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? - 'இறுகப்பற்று' விமர்சனம்!". Nakkheeran. Retrieved 2026-05-17.
  5. செய்திப்பிரிவு (2023-10-07). "திரை விமர்சனம்: இறுகப்பற்று". Hindu Tamil Thisai. Retrieved 2026-05-17.
  6. "இறுகப்பற்று கதை | Irugapatru Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil". tamil.filmibeat.com. Retrieved 2026-05-17.
  7. ராகவ்குமார் (2023-10-04). "'இறுகப்பற்று' விமர்சனம்!". Kalki Online. Retrieved 2026-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறுகப்பற்று&oldid=4544805" இலிருந்து மீள்விக்கப்பட்டது