இறக்கைத் துடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறக்கைத் துடுப்புக்களின் இயக்கத்தால் ஏற்படும் வானூர்தியொன்றின் உருட்சி.

இறக்கைத் துடுப்பு (aileron) என்பது, நிலைத்த இறக்கை வானூர்திகளின் இறக்கை ஒவ்வொன்றினதும் பிற்பகுதியில் காணப்படும் பிணைச்சற் பறப்புக் கட்டுப்பாட்டு மேற்பரப்பு ஆகும். இறக்கைத் துடுப்புக்கள், இணைகளாக, வானூர்தியின் உருட்சியைக் (வானூர்தியின் நீள் அச்சைச் சுற்றிய இயக்கம்) கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுகிறது. வானூர்தியின் உருட்சி பொதுவாக அதன் பறப்புத் திசையை மாற்றுகிறது.

1864 இல் எழுதப்பட்ட, வான்வழி இயக்கம் தொடர்பாக (On Aërial Locomotion) என்னும் ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு 1868 இல் பிரித்தானிய அறிவியலாளரும், கண்டுபிடிப்பாளருமான மத்தியூ பியார்சு வாட் போல்ட்டன் என்பவருக்கு முதன்முதலாக இறக்கைத் துடுப்புக்கான காப்புரிமை வழங்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் இறக்கைத் துடுப்புத் தொடர்பிலும், அதை செயற்பாட்டு அடிப்படையில் ஒத்த இறக்கை முறுக்கல் தொடர்பிலும் விரிவான முற்பட்ட ஆக்கங்கள் இருந்தபோதும், 1906 ஆம் ஆண்டு ஓகியோவில் உள்ள டேட்டனைச் சேர்ந்த ரைட் சகோதரர்களுக்கு, வானூர்திகளின் கட்டுப்பாட்டு மேற்பரப்புக்களை இயக்குவதற்கான வானியக்கவியல் கட்டுப்பாட்டு முறையைக் கண்டுபிடித்ததற்காக ஐக்கிய அமெரிக்கா காப்புரிமை வழங்கியது. முதலாம் உலகப் போர் வரை இது தொடர்பில் அமெரிக்காவில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன.

வரலாறு[தொகு]

இறக்கைத் துடுப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான எய்லெரோன் (aileron) என்பது "சிறிய இறக்கை" என்னும் பொருள்கொண்ட பிரெஞ்சுச் சொல்லாகும். பிரெஞ்சு மொழியில் இச்சொல் பறவைகளின் இறக்கைகளின் நுனிப் பகுதியையும் குறிக்கிறது.[1][2] பறவைகள் இப்பகுதியைப் பயன்படுத்தியே தமது பறப்பைக் கட்டுப்படுத்துகின்றன என்பதால், அதே செயற்பாட்டைக் கொண்ட வானூர்திப் பகுதிக்கும் இப்பெயர் ஏற்பட்டது. "சிறிய இறக்கை" என்னும் பொருளில் இச்சொல் 1877 இன் காசெல்லின் பிரெஞ்சு - ஆங்கில அகரமுதலியில் காணப்பட்டாலும்,[3] வானூர்தி தொடர்பில் இச் சொல் 1908 ஆம் ஆண்டிலேயே புழக்கத்துக்கு வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. aileron (n.), Online Etymology Dictionary. Retrieved 26 April 2013.
  2. Aileron, nom masculin பரணிடப்பட்டது 2014-04-26 at the வந்தவழி இயந்திரம், Larousse online French dictionary. Retrieved 2 May 2013.
  3. Parkin 1964, p. 66.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறக்கைத்_துடுப்பு&oldid=3234650" இலிருந்து மீள்விக்கப்பட்டது