இரைப்பை ஏற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரைப்பை ஏற்றம்
Hiatal hernia
ஒத்தசொற்கள்Hiatus hernia
Hiatalhernia.gif
இரைப்பை ஏற்றத்தைக் காட்டும் ஓவியம்
சிறப்புஇரையகக் குடலியவியல், பொது அறுவைச்சிகிச்சை
அறிகுறிகள்வாயின் பின்பக்கத்தில் அமிலச் சுவை, நெஞ்செரிவு, விழுங்குவதில் சிக்கல்[1]
சிக்கல்கள்இரும்புச்சத்துக் குறைவுச் சோகை, குடல் முறுக்கம், குடல் அடைப்பு[1]
வகைகள்நழுவுதல், இடமாறுதல்[1]
சூழிடர் காரணிகள்உடற் பருமன், முதுமை, பெரும் அதிர்ச்சி[1]
நோயறிதல்உள்நோக்கியியல், மருத்துவப் படிமவியல், அழுத்த அளவியல்[1]
சிகிச்சைபடுக்கும்போது உயரமாக தலைவைத்துக் கொள்ளுதல், எடைக் குறைப்பு, மருந்துகள், அறுவைச்சிகிச்சை[1]
மருந்துH2 blockers, proton pump inhibitors[1]
நிகழும் வீதம்10–80% (US)[1]

இரைப்பை ஏற்றம் அல்லது இயற்பிளவுப் பிதுக்கம் (hiatal hernia) என்பது ஒரு வகையான குடலிறக்கம் ஆகும். இரைப்பையின் மேற்பகுதியில் உள்ள ஒரு சிறு பகுதி உதரவிதானத்தின் மேற்பகுதியின் உள்ள நெஞ்சுக்குள் புகுந்துகொள்ளும் நிலை இரைப்பை ஏற்றம் என அழைக்கப்படுகிறது. இதன் அறிகுறிகள் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்செரிச்சல் ஏற்படுதல், குறிப்பாக மிக இனிப்பான, காரமான, கொழுப்பான உணவு வகைகளைச் சாப்பிட்டால், உடனே நெஞ்சு முழுவதும் எரிதல், இரைப்பையில் உள்ள அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சல் உண்டாதல், இவற்றோடு ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற பிற தொல்லைகளும் சேர்ந்துகொள்ளுதல்.[2] இதன் பிற அறிகுறிகள் விழுங்கற்கடுமை மற்றும் நெஞ்சு வலி ஆகியன. இரும்புச்சத்துக் குறை சோகை, குடல்முறுக்கம் போன்றவையும்ஏற்படலாம்.

இதன் பொதுவான காரணியானது முதுமை மற்றும் உடற் பருமன் ஆகும். பிற காரணிகள் பேரதிர்ச்சி, ஸ்கோலியோசிஸ், சிலவகை அறுவைச் சிகிச்சைகள் ஆகும். இதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: நழுவும் இரைப்பை ஏற்றம் என்பது இரைப்பையின் சிறு பகுதி நெஞ்சுக்குள் புகுவதும் மீண்டும் வயிற்றுக்குள் திரும்பும் நிலை ஒன்று ஆகும். அடுத்து இடமாறு இரைப்பை ஏற்றம் என்பது நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் நழுவிக்கொண்டிருக்கும் இரைப்பையின் மேற்பகுதி, ஒரு கட்டத்தில் வயிற்றுக்குத் திரும்பாமல், நெஞ்சுக்குள்ளேயே நிலையாக இருந்துவிடும் நிலையாகும். இந்த சிக்கலை உள்நோக்கியியல் அல்லது மருத்துவப் படிமவியல் போன்றவற்றால் உறுதிப்படுத்தலாம். மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருப்பின் பொதுவாக உள்நோக்கியல் வழியாகவே கண்டறியப்படுகிறது, இதன் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது பொதுவாக 50 வயதைக் கடந்தவர்களுக்கே ஏற்படுகிறது.

படுக்கையின் தலைப்பகுதியை உயர்த்திக்கொள்ளுதல், எடையைக் குறைத்தல், உணவு பழக்கங்களை மாற்றுதல் போன்ற பழக்கவழக்கங்கள் இதற்கு நிவாரணமாகும். இதற்கான மருந்துகளாக எச்2 பிளாக்கர்ஸ் அல்லது புரோட்டான் பம்ப் இன்ஹைபைட்ஸ் போன்ற இரைப்பை அமிலத்தை குறைக்கும் மருந்துகள் உதவுகின்றன, எனினும் அவை குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளை உருவாக்கலாம். மருந்துகளால் நிலை மேம்படாவிட்டால், லேப்ராஸ்கோப் முறையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதும் உண்டு. அமெரிக்காவில் 10% முதல் 80% வரையிலான மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.[1]

அறிகுறிகள்[தொகு]

Hiatal Hernia.png

இரைப்பை ஏற்றமானது பெரும்பாலும் "great mimic" (பெருநடிப்பு) என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் அறிகுறிகள் பல உடல் சீர்குலைவுகளை ஒத்திருக்கின்றன. இரைப்பை ஏற்றத்துக்கு ஆளானவர்கள் மார்பில் மந்தமான வலி, மூச்சு வாங்குதல் (உதரவிதானத்தின்மீது இரைப்பை ஏறுவதால் உண்டாகிறது), இதயப் படபடப்பு (வேகஸ் நரம்பு எரிச்சல் காரணமாக), அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுவதும், மார்பக வலி அல்லது உண்ணும் வலி ஏற்படக்கூடும். பெரும்பாலும் இரைப்பை ஏற்றமானது எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருப்பதும் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Roman, S; Kahrilas, PJ (23 October 2014). "The diagnosis and management of hiatus hernia.". BMJ (Clinical research ed.) 349: g6154. doi:10.1136/bmj.g6154. பப்மெட்:25341679. 
  2. "Hiatal Hernia". PubMed Health. 28 ஏப்ரல் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 மே 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

ஏறிய இரைப்பை இறங்குமா..?

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரைப்பை_ஏற்றம்&oldid=3586235" இருந்து மீள்விக்கப்பட்டது