இரேலங்கி (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேலங்கி
பிறப்புஇரேலங்கி வெங்கட ராமையா
ராவுலபாலம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ராவுலபாலம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு26 நவம்பர் 1975(1975-11-26) (அகவை 65)
தாடேபள்ளிகூடம், ஆந்திரப் பிரதேசம்
பணிநடிகர், பின்னணி பாடகர்
வாழ்க்கைத்
துணை
சிறிதேவியம்மா
விருதுகள்பத்மசிறீ (1970)

இரேலங்கி வெங்கட ராமையா (Relangi Venkata Ramaiah) (13 ஆகத்து 1910 - 26 நவம்பர் 1975) இந்தியத் திரைப்படத்துறையின் குணசித்திர நடிகரும், நகைச்சுவை நடிகரும், தயாரிப்பாளருமாவார். முக்கியமாக இவர், தெலுங்குப் படங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். [1] [2] 1970ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்படங்களுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தெலுங்குப் படங்களின் பொற்காலத்தில் இவரது நகைச்சுவை வெளிப்பாடுகளாலும், உரையாடல்களாளும் குறிப்பிடப்பட்ட இந்தியாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஆரம்பகாலத்தில் இரமண ரெட்டியுடன் இணைந்து நகைச்சுவை இரட்டையராக இருந்தார். இவர் நடித்தப் படங்களில் குணசுந்தரி கதா, மிஸ்ஸியம்மா, மாயா பஜார், நர்த்தனாசாலா, தொங்க ராமுடு, இத்தரு மித்ருலு, சதுவுக்குன்னா அம்மாயிலு, அப்பு சேசி பப்பு கூடு, வெலுகு நீடலு, விப்ரநாராயணா, லவகுசா, குல கோத்ராலு போன்றவை குறிப்பிடத்தக்கப் படங்கள் அடங்கும். [3] [4] சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்காக இவரது நினைவாக "இரேலங்கி கலைக்கழக விருது" நிறுவப்பட்டது. [5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சென்னை மாநிலத்தில் (இப்போது ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இராவுலபாலம் கிராமத்தில் தெலுங்குச் செட்டிபலிஜா குடும்பத்தில் இவர் பிறந்தார். காக்கிநாடாவில் வளர்ந்தார். இவர் ஒரு தொழில்முறை ஹரிகதாக் கலைஞராகவும், ஆர்மோனியக் கலைஞராகவும் இருந்தார். [6] நடிப்பு மீதான ஆர்வம் காரணமாக கல்வியில் ஆர்வம் காட்டவில்லை.

தொழில்[தொகு]

இரேலங்கி தனது ஆரம்ப வாழ்க்கையை மேடை மற்றும் நாட்டுப்புற நாடகங்களில் தொடங்கினார். மேலும் மேடை நாடகத்திலும் பெண் வேடங்களில் நடித்தார். சி. புல்லையா இயக்கத்தில் 1935ஆம் ஆண்டில் வெளியான முதல் தெலுங்குத் திரைப்படமான சிறீகிருஷ்ண துலாபாரம் படத்தில் விதூசகன் வேடத்தில் நடித்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இவர் 1947இல் வெளியான கொல்லபாமா படத்துடன் ஒரு பெரிய வெற்றி கிடைக்கும் வரை புல்லையாவிடம் தயாரிப்பு மேலாளராக இருந்தார். அதைத் தொடர்ந்து, விந்தியா ராணி படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இது பெரிய வெற்றியைப் பெற்றது. 1950 முதல் விஜயா திரைப்பட நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களிலும் இவர் வழக்கமான முகமாக இருந்தார். இவர் மிகவும் பிரபலமடைந்து 1953ஆம் ஆண்டில் புல்லையா இயக்கத்தில் அஞ்சலிதேவிக்கு இணையாக பக்கிண்டி அம்மாயி படத்தில் நகைச்சுவை நாயகன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. [7]

நகைச்சுவை நடிகராக, நடிகை கிரிஜா, நடிகை சூரியகாந்தம், மற்றொரு நகைச்சுவை நடிகர் இரமண ரெட்டி ஆகியோருடன் கூட்டுசேர்ந்தபோது இவர் மிகவும் பிரபலமாக இருந்தார். இந்த சேர்க்கைகள் தெலுங்கில் பல வெற்றி திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்தது.

விருதுகள்[தொகு]

1970 ஆம் ஆண்டில், இவருக்கு இந்திய அரசின் குடிமை விருதான பத்மசிறீ வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேலங்கி_(நடிகர்)&oldid=3105364" இருந்து மீள்விக்கப்பட்டது