இரேலங்கி நரசிம்மராவ்
இரேலங்கி நரசிம்மராவ் | |
---|---|
பிறப்பு | 30 செப்டம்பர் 1951 பாலகொல்லு, மேற்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் |
பெற்றோர் | இரேலங்கி சிறீ இரங்கநாயக்கலு இரேலங்கி சிவ இராமாயம்மா |
வாழ்க்கைத் துணை | சாய் இஅல்ட்சுமி இரேலங்கி |
பிள்ளைகள் | கிரண் இரேலங்கி, சதீசு இரேலங்கி |
உறவினர்கள் | இரேலங்கி வெங்கட்ராமையா (உறவினர்) கீதா பல்லவி இரேலங்கி (மருமகள்) சந்தியா நயுடு இரேலங்கி (மருமகள்) |
இரேலங்கி நரசிம்மராவ் (Relangi Narasimha Rao) (30 செப்டம்பர் 1951) ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமாவார். முக்கியமாக தெலுங்குத் திரையுலகில் பணிபுரிந்து வருகிறார். இவர் நகைச்சுவை படங்களுக்காக நன்கு அறியப்பட்டவர். குறிப்பாக நடிகர்கள் சந்திர மோகன் மற்றும் இராஜேந்திர பிரசாத் ஆகியோருடனான இவரது படங்களான இத்தரு பெல்லலா முத்துலா போலீஸ், எதிரின்ட்டி மொகுடு பக்கென்ட்டி பெல்லம், போலீஸ் பார்யா, சின்னோடு பெத்தோடு, தப்பேவாரிகி சேட்டு, சம்சாரம், மாமா அல்லுடு, குண்டம்மகாரி கிருஷ்ணாலு போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் அடங்கும்.
இவர் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். [1] பெரும்பாலும் தெலுங்கிலும், மற்றவை கன்னடத்திலும், அதே போல் தமிழிலும் ஒரு படம் இயக்கியிருந்தார். தெலுங்கில் இரண்டு தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய சுந்தரி சுப்பராவ் படத்திற்காக திரைக்கதைக்காக நந்தி விருதை வென்றார் [2] . இவர் திவாகர் பாபு [3] , சங்கரமஞ்சி பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். தெலுங்கு நடிகர்களான சுமன், ரேவதி, கின்னெரா ஆகியோரையும் இவர் அறிமுகப்படுத்தினார்.
இவரது சமீபத்திய 75 வது படம் எலுகா மஜாகா 26 பிப்ரவரி 2016 அன்று ஆந்திரா, தெலங்காணா மாநிலங்களில் வெளியிடப்பட்டது.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலகொல்லுவில் இரேலங்கி இரங்கநாயக்கலு, சிவ இராமாயம்மா ஆகியோருக்கு செப்டம்பர் 10 ஆம் தேதி பிறந்தார்.
தொழில்
[தொகு]இவர், முகமது பின் துக்ளக் என்ற படத்திற்காக இயக்குனர் பி. வி. பிரசாத்தின் உதவியாளராக 1971இல் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். 1972 ஆம் ஆண்டில் ஊரிக்கி உபகாரி திரைப்படத்திற்காக இயக்குநர் கே. எஸ். ஆர். தாசிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் 1973ஆம் ஆண்டில் சம்சாரம் சாகரம் படத்திற்காக தாசரி நாராயண ராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். 1980 ஆம் ஆண்டு வரை இவர், அவரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பின்னர் இயக்குநரானார்.
நகைச்சுவை படங்களின் இயக்குனர்
[தொகு]1980இல் வெளியான தெலுங்கு படமான சந்தமாமா மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது ஒரு குடும்ப நாடகம். ஆனால் படத்தின் வெளியீடு தாமதமானது. [4] 1982 ஆம் ஆண்டு வரை திரையிடப்படவில்லை. இவரது, அடுத்தடுத்த படங்கள், நேனு மா ஆவிட, ஏவண்டோய் ஸ்ரீமதிகாரு, இல்லந்த்தா சந்தடி ஆகிய அனைத்துமே வெற்றிகரமான நகைச்சுவையாகவும், குறைந்த செலவிலும் எடுக்கப்பட்டது. இந்த படங்கள் தற்செயலாக நடிகர் சந்திர மோகனுடன் ஒரு வெற்றிகரமான ஒத்துழைப்பைத் தொடங்கின. அவருடன் மொத்தம் 18 படங்களை இயக்கியுள்ளார். அக்கினேனி நாகேஸ்வர ராவ் ( தாகுதுமுதலா தாம்பத்தியம், 1990), சோபன் பாபு ( சம்சாரம், 1988), கிருஷ்ணம் ராஜூ ( யமதர்ம ராஜு, 1990) போன்ற நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார்.
கன்னடம், தமிழ் திரையுலகில் நுழைதல்
[தொகு]1991இல் வெளியான இவரது மிகப்பெரிய வெற்றி பெற்ற நகைச்சுவைப் படங்களான இத்தரு பெல்லாலு முத்துலா போலீஸ், எதிரிண்டி மொகுடு பக்கிண்டி பெல்லம் ஆகிய இரண்டும் கன்னடம், தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு வழி வகுத்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கினார். [4] இரண்டு தெலுங்கு வெற்றிகளையும் கன்னடத்தில் 1992இல் மறு ஆக்கம் செய்ய அழைக்கப்பட்டார். கன்னட நடிகர் சசி குமார் நடித்த இரண்டு படங்களும் கன்னடத்தில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. அவர் மேலும் இரண்டு கன்னட திரைப்படங்களை இயக்கினார். இவரது மற்றொரு கன்னடப் படத்தில் புகழ்பெற்ற கன்னட நடிகர் ராஜ்குமாரின் இரண்டாவது மகன் ராகவேந்திரா ராஜ்குமார் நடித்திருந்தார். ராஜ்குமாரின் மூத்த மகன் சிவ ராஜ்குமாருடனும் ஒரு படமும் இயக்கினார்.
இவர், இரெண்டு பொண்டாட்டி காவல்காரன் என்ற தமிழ் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். [4] 1992இல், வெளிவந்த தனது தெலுங்கு திரைப்படமான இத்தரு பெல்லாலு முத்துலா போலிஸ் படத்தின் மறு ஆக்கமாகும். இதில் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வெற்றிகரமான படைப்புகள்
[தொகு]நகைச்சுவை நடிகர் இராஜேந்திர பிரசாத்துடன் 32 படங்களில் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார். [4] குண்டம்மகாரி கிருஷ்ணாலு, தப்பேவரிகி சேட்டு, சின்னோடு பெத்தோடு, மாமா அல்லுடு, இத்தரு பெல்லாலு முத்துலா போலிஸ், எதிரிண்டி மொகுடு பக்கிண்டெ பெல்லம் போன்ற படங்கள் இதில் அடங்கும்.
தற்போதைய படைப்புகள்
[தொகு]தற்போது பிரம்மானந்தம், வெண்ணிலா கிசோர், பவானி ஆகியோர் நடித்த தனது 75 வது படமான "எலுகா மஜாகா "வின் தயாரிப்புக்கு பிந்தையப் பணியில் இருக்கிறார். [5]
பிற படைப்புகளும், சாதனைகளும்
[தொகு]சுந்தரி சுப்பாராவ் என்ற படத்திற்காக எழுத்தாளர் ஆதி விஷ்ணுவுடன் இணைந்து இவருக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான நந்தி விருது வழங்கப்பட்டது. [2] இப்படத்தில் சந்திர மோகன், விஜயசாந்தி ஆகியோர் நடித்திருந்தனர். இதை "உஷாகிரன் மூவிஸ்" என்ற பதாகையின் கீழ் இராமோசி ராவ் தயாரித்திருந்தார்.
புதுதில்லி தெலுங்கு அகாதமியால் 1991ஆம் ஆண்டில் சிறந்த குறைந்தசெலவில் படமெடுக்கும் இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] 2007 ஆம் ஆண்டில் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் நடத்திய 15வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் ஆசிய பனோரமா நடுவர் உறுப்பினராக செயல்பட்டார். [7] 2005-2006 ஆண்டுகளுக்கான நந்தி தொலைக்காட்சி விருதுகளுக்கான தலைவராகவும் [8] இருந்தார்.
2008 ஆம் ஆண்டில் ஈடிவிக்கு புஜ்ஜி புஜ்ஜிபாபு [1] உட்பட தெலுங்கில் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர், சாய்லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிரண் இரேலங்கி, சதீஷ் இல்ரேலங்கி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 A legacy of humour, The Hindu.
- ↑ 2.0 2.1 Nandi Awards List (pp 15), Nandi Awards pdf file.
- ↑ ‘No greater school than a film studio’, The Hindu.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Comedy is his forte, The Hindu.
- ↑ The Mouse Game, The Hindu.
- ↑ Delhi Telugu Academy Award Winners 1991 பரணிடப்பட்டது 2016-08-26 at the வந்தவழி இயந்திரம், Delhi Telugu Academy.
- ↑ Child jury to feature at Hyderabad Film Festival, The Indian Express.
- ↑ Nandi TV awards for ‘Asha’, ‘Padalani Vundi’, The Hindu.