உள்ளடக்கத்துக்குச் செல்

இரேணாடு ஏழாயிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரேணாடு ஏழாயிரம் என்பது சாளுக்கிய நாட்டிற்கும், பல்லவ நாட்டிற்கும் இடையே அமைந்திருந்த சிறு இராச்சியமாகும். இது இன்றைய கடப்பை கர்னூல் மாவட்டங்களை உள்ளடக்கிய சோழர் அரசாகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரேணாடு ஏழாயிரத்தை ஆண்ட சோழர், இரேணாட்டுச் சோழர் என்றும் தெலுங்குச் சோழர் என்றும் பெயர் பெற்றிருந்தனர். பிற்காலத்தில் சோழர் என்னும் பெயர் சோடர் என்று திரிந்துவிட்டது. அவர்கள் பிற்காலத்தில் ரேணாட்டுச் சோடர் என்றும் தெலுங்குச் சோடர்கள் என்றும் கூறப்பட்டனர். இரேணாட்டு சோழர்கள் களப்பிரர் தமிழ்நாட்டை ஆண்ட போது வடக்கே தப்பிச்சென்று கடப்பை கர்னூல் மாவட்டங்களை ஆட்சிப்பகுதியாக கொண்டு இரேணாடு ஏழாயிரம் சிற்றரசை ஆண்டனர்.[1]

பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் காலத்தில் இந் நாட்டை சோழர் வம்சத்தைச் சேர்ந்த புண்ணிய குமாரன் என்பவன் ஆட்சி செய்திருந்தான். இவன் தன்னை கரிகாற்சோழன் வழிவந்தவன் என்றும், நான்கு தலைமுறையாக இவன் முன்னோர் இந்த ரேணாட்டை ஆண்டு வந்திருந்தனர் என்றும் மலெபாடு செப்புப் பட்டயத்தில் கூறிக் கொள்கின்றான்.[2]

இரேணாடு ஏழாயிரம் சோழர்களின் ஆட்சியில் இருந்தபடியால் அந்த நாடு சோழ நாடு என்றும் கூறப்பட்டது. சீன தேசத்திலிருந்து இந்திய துணைக்கண்டத்துக்கு வந்து பல நாடுகளைச் சுற்றிப் பார்த்த யுவான் சுவாங் என்னும் பௌத்த பயணி தன்னுடைய பயணக்குறிப்பில் இரேணாட்டை சுலிய என்று எழுதியுள்ளார். சுலிய என்பது சோழிய அல்லது சோழ என்னும் சொல்லின் திரிபு. இந்தியாவில் பயணம் செய்த யுவான் சுவாங் ஆந்திர நாட்டில் அமராவதி நகரத்தில் சில காலம் தங்கியிருந்து, பிறகு தெற்கே பயணம் செய்து தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுரத்துக்கு வந்து தங்கினார். கி. பி. 639-40ஆம் ஆண்டில் இவர் அமராவதியிலும் காஞ்சியிலும் தங்கியிருந்தார். அமராவதியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்த போது இடைவழியில் சுலிய (சோழ) நாடு இருந்தது என்று இவர் தம்முடைய பயணக்குறிப்பில் எழுதியுள்ளார்.[1]

தொண்டை நாட்டுக்குத் தெற்கே காவிரியாறு பாய்கிற சோழ நாடு இருக்கிறது என்பதை அறிவோம். ஆனால், சீனராகிய யுவான் சுவாங், தொண்டை நாட்டுக்கு வடக்கே சோழ நாடு இருந்தது என்று எழுதி யுள்ளார். இவர் கூறுவது தவறாக இருக்குமோ என்னும் ஐயம் இருந்தது. ஆனால், அண்மைக் காலத்தில் தெலுங்கு நாட்டில் கடப்பை மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அந்தப் பகுதி நாட்டைச் சோழ குலத்து மன்னர் அரசாண்டனர் என்னும் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன. எனவே, தொண்டை நாட்டுக்கு வடக்கே சோழ நாடு இருந்தது என்று யுவான் சுவாங் கூறியுள்ளது தவறு அன்று என்பதும் உண்மையான செய்தி என்றும் தெரிகின்றது. அவர் சு-லி-ய என்று கூறுவது இரேணாட்டையாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 மயிலை சீனி. வேங்கடசாமி (1975). களப்பிரர் காலத்து இரேணாட்டுச் சோழர். இளங்கணி பதிப்பகம். pp. 42 - 49 CC-BY-SA 4.0.
  2. மயிலை சீனி. வேங்கடசாமி. (2005). நரசிம்மவர்மன். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். ப:19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேணாடு_ஏழாயிரம்&oldid=3504455" இலிருந்து மீள்விக்கப்பட்டது