உள்ளடக்கத்துக்குச் செல்

இரும்புத் திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்புத் திரை கறுப்புக் கோட்டினால் தீட்டப்பட்டுள்ளது. வார்சோ உடன்படிக்கையில் ஒப்பமிட்ட நாடுகள் சிவப்பு நிறத்தினால் நிறந்தீட்டப்பட்டுள்ளன. நேட்டோ அங்கத்தவர்கள் நீல நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. நடுநிலை வகிக்கும் நாடுகள் சாம்பல் நிறமூட்டப்பட்டுள்ளன. கறுப்புப் புள்ளியினால் குறிக்கப்படுவது பெர்லினாகும். பச்சை நிறம் தீட்டப்பட்டுள்ள யூகோஸ்லாவியா சமவுடமைக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும் அது இரு பக்கங்களிலும் தங்கியிருந்தது. சமவுடமைக் கொள்கையுடைய அல்பேனியா சீன சோவியத் பிளவின் பின் 1960களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியத்துடனான தொடர்புகளை முறித்துக்கொண்டு சீனா பக்கம் சேர்ந்துகொண்டது. இது சாம்பல் நிற வரிக்கோடுகள் இடப்பட்டுள்ளது.

இரும்புத் திரை என்பது 1945ல் இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து 1991ல் பனிப்போரின் முடிவு வரை ஐரோப்பாவை இரு பிரிவுகளாகப் பிரித்திருந்த நில எல்லையையும் அவற்றுக்கிடையிலான கொள்கை ரீதியிலான முறுகலையும் குறிப்பிடுகிறது. இரும்பு திரை தொடர்பான சிந்தனை முதன்முதலில் பிரசித்திபெற்ற அப்போதைய ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலால் வெளியிடப்பட்டது. இச்சொல் சோவியத் ஒன்றியத்தால், தன்னையும் அதன் தங்கியிருக்கும் நாடுகளையும் மத்திய ஐரோப்பிய நாடுகளையும், மேற்கு நாடுகள் மற்றும் சமவுடைமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளையும் குறிக்கப் பயன்படுகிறது. இரும்புத் திரையின் கிழக்குப் பகுதியில் சோவியத் ஒன்றியத்துடன் தொடர்புடைய நாடுகள் உள்ளன. இரும்புத் திரையின் இரு பக்கங்களிலும் உள்ள நாடுகள் தமக்கேயுரிய சர்வதேச பொருளாதார மற்றும் இராணுவக் கூட்டுறவுகளை ஏற்படுத்திக்கொண்டன. அவையாவன:

  • சோவியத் ஒன்றியத்தைத் தலைமை நாடாகக் கொண்ட, வார்சோ உடன்படிக்கை மற்றும் பரஸ்பர பொருளாதார உதவிக்கான சங்கம் ஆகியவற்றின் உறுப்பு நாடுகள்.
  • ஐக்கிய அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட, ஐரோப்பிய சமூகம் மற்றும் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு ஆகியவற்றின் உறுப்பு நாடுகள்.

பௌதிக ரீதியில், இரும்புத் திரையானது ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான, கண்டத்தின் நடுவே உள்ள பாதுகாப்பு எல்லைக் கோடாகவே காணப்பட்டது. இவ்வெல்லையின் குறிப்பிடத்தக்க பகுதி பெர்லின் சுவரும் அதன் சார்லி சோதனைச் சாவடியுமாகும். மேலும் இது இரும்புத் திரையின் முழுக் குறியீடாகவே விளங்கியது.[1]

இரும்புத் திரையை இல்லாதொழிக்கும் வகையிலான நிகழ்வுகள் போலந்தில் ஆரம்பமானதோடு,[2][3] ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா, செக்கோசிலோவாக்கியா மற்றும் ரோமானியா ஆகிய இடங்களுக்கும் பரவின. தனது பொதுவுடமை ஆட்சியை வன்முறை மூலம் அகற்றிய ஒரே ஐரோப்பிய நாடு ரோமானியாவாகும்.[4]

தொடர்புடைய வார்த்தைகள்

[தொகு]

பனிப்போர்க் காலப்பகுதி முழுவதும் "திரை" எனும் சொல் சமவுடைமை நாடுகளுக்கும் முதலாளித்துவ நாடுகளுக்கும் இடையிலான பௌதிக மற்றும் கருத்தியல் ரீதியான எல்லைகளைக் குறிக்கும் பொதுவான குறிச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது.

  • இரும்புத் திரை போல, சீனாவின் எல்லையினைக் குறிக்க "மூங்கில் திரை" எனுஞ் சொல் பயன்படுத்தப்படுகிறது. இருதரப்பு நாடுகளுக்கிடையிலான முறுகல்கள் குறைவடைந்ததனை அடுத்து இச்சொற்கள் வழக்கொழியத் துவங்கியுள்ளன.
  • பனிப்போர் காலப்பகுதியில், பேரிங் கடலிலுள்ள ரசியாவுக்கும், அமெரிக்காவின் அலாசுகா மாநிலத்துக்கும் இடையிலான சிறிய தூரம் "பனித்திரை" என அழைக்கப்பட்டது.
  • குவாண்டனாமோ குடா பகுதியிலுள்ள ஐக்கிய அமெரிக்க கடற்படைத் தளத்தைச் சூழ கியூபாவினால் உருவாக்கப்பட்ட கள்ளிச்செடி வலயம் சிலவேளைகளில் "கள்ளித் திரை" என அழைக்கப்படுகிறது.
  • பிரிவினை வாக்கெடுப்பில் இசுக்கொட்லாந்து பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து, "தார்த்தன் திரை" எனும் சொல் இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான எல்லையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[5][6]

நினைவுச் சின்னங்கள்

[தொகு]
புடாபெசுட்டிலுள்ள நினைவுச் சின்னம்

செக் குடியரசின் தென் பகுதியில் அண்ணளவாக 48°52′32″N 15°52′29″E / 48.8755°N 15.87477°E / 48.8755; 15.87477 (Iron Curtain monument) ஆள்கூறுகளில் ஒரு இரும்புத்திரை நினைவுச் சின்னம் காணப்படுகிறது. சில நூறு மீற்றர் நீளமுடைய உண்மையான வேலியும் ஒரு காவற் கோபுரமும் எஞ்சியுள்ளது. இரும்புத் திரையின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் விளக்கும் வகையில் செக் மற்றும் ஆங்கில மொழியிலான விளக்கக் குறிப்புக்களும் அதில் காணப்படுகிறது. செக் குடியரசில் காணப்படும் ஒரேயொரு வேலித் துண்டம் இதுவாகும். எனினும் சில காவற் கோபுரங்களும் பதுங்கு குழிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இவற்றில் சில பொதுவுடமைக் கால பாதுகாப்பு நடவடிக்கையிலும், சில இட்லருக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையிலும் பயன்படுத்தப்பட்டதோடு, சில பகுதிகள் வேட்டையாடும் தளங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அங்கேரியின் பெர்டோராகோசு பகுதியில் அமைந்துள்ள இன்னொரு நினைவிடம் அனைத்து ஐரோப்பிய சுற்றுலா நடைபெற்ற பகுதியில் அமைந்துள்ளது. ஏசுடர் இல் பகுதியில் கபிரியேலா வொன் அப்சுபர்க்கினால் அமைக்கப்பட்ட உலோகச் சிலையொன்று காணப்படுகிறது. இது உலோகத்தாலும் முட்கம்பிகளாலும் அமைக்கப்பட்ட ஒரு தூணாகும். இது அனைத்து ஐரோப்பிய சுற்றுலா நடைபெற்ற வேளை திறந்து வைக்கப்பட்டது. இதில் இச்சுற்றுலாவில் பங்குபற்றியோரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் பீடத்தில் லத்தீன் மொழியிலான வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது:” In necessariis unitas – in dubiis libertas – in omnibus caritas.” (தவிர்க்கமுடியாத விடயங்களில் ஐக்கியம் - சந்தேகத்துக்குரிய விடயங்களில் சுதந்திரம் - எல்லாவற்றிலும் அன்பு.) இந் நினைவிடம் இரும்புத் திரையை பிரதிபலிப்பதோடு 1989ல் இரும்புத்திரையின் வீழ்ச்சியையும் நினைவூட்டுகிறது.

சுலோவாக்கியாவின் பிராடிசுலாவா பகுதியிலுள்ள கிராமமான டெவினில் காணப்படும் இன்னொரு நினைவிடம் டான்யூப் மற்றும் மொராவா ஆற்றுப் படுக்கையில் அமைந்துள்ளது.

பல்வேறு திறந்தவெளி அருங்காட்சியகங்கள் செருமானிய உள் எல்லைப்புறங்களில் காணப்படுகின்றன. அவற்றுள் பெர்லின் மற்றும் பல நூற்றாண்டுகளாக பிரிக்கப்பட்டிருந்த மொட்லாரூத் எனும் கிராமம் போன்றன குறிப்பிடத்தக்கவை. பிரிவினையின் நினைவுப் பதிவுகள் எல்லைப் புறங்களில் உள்ள பல இடங்களில் இன்னமும் உயிர்ப்புடன் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archive: Freedom! The Berlin Wall". Time. 20 November 1989 இம் மூலத்தில் இருந்து 25 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130825012437/http://www.time.com/time/magazine/article/0,9171,959058,00.html. பார்த்த நாள்: 5 May 2010. 
  2. Sorin Antohi and Vladimir Tismăneanu, "Independence Reborn and the Demons of the Velvet Revolution" in Between Past and Future: The Revolutions of 1989 and Their Aftermath, Central European University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 963-9116-71-8. p.85.
  3. Boyes, Roger (2009-06-04). "World Agenda: 20 years later, Poland can lead eastern Europe once again". தி டைம்ஸ். http://www.timesonline.co.uk/tol/news/world/world_agenda/article6430833.ece. பார்த்த நாள்: 2009-06-04. 
  4. Piotr Sztompka, preface to Society in Action: the Theory of Social Becoming, University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-78815-6. p. x.
  5. M. E. Murphy, Rear Admiral, U. S. Navy. "The History of Guantanamo Bay 1494 – 1964: Chapter 18, "Introduction of Part II, 1953 – 1964"". பார்க்கப்பட்ட நாள் 27 March 2008.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. "The Hemisphere: Yankees Besieged". Time. 16 March 1962 இம் மூலத்தில் இருந்து 28 ஆகஸ்ட் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100828155348/http://www.time.com/time/magazine/article/0,9171,940656,00.html. பார்த்த நாள்: 5 May 2010. 

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்புத்_திரை&oldid=3744929" இலிருந்து மீள்விக்கப்பட்டது