உள்ளடக்கத்துக்குச் செல்

இரிச்சர்டு ஸ்மாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிச்சர்டு எர்ரெட் ஸ்மாலி
இரிச்சர்டு எர்ரெட் ஸ்மாலி
பிறப்பு(1943-06-06)சூன் 6, 1943
ஏக்ரன் (ஒகைய்யோ), ஒகையோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புஅக்டோபர் 28, 2005(2005-10-28) (அகவை 62)
ஹியூஸ்டன், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பணியிடங்கள்ரைஸ் பல்கலைக்கழகம்
சிக்காகோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஹோப் கல்லூரி
மிச்சிகன் பல்கலைக்கழகம்
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆய்வேடு1,3,5சமச்சீர்டிரையசீனின் தாழ்நிலை எலக்ட்ரான் அமைப்பு (1974)
ஆய்வு நெறியாளர்Elliot R. Bernstein
அறியப்படுவதுபக்மின்ஸ்டர்ஃபுலரின்
விருதுகள்இர்விங் லாங்மூர் விருது (1991)
எர்னஸ்ட் ஆர்லான்டோ லாரன்சு விருது(1991)
ஈபிஎஸ் யூரோஇயற்பியல் விருது(1994)
வேதியியலுக்கான நோபல் பரிசு (1996)

இரிச்சர்டு எர்ரெட் ஸ்மாலி (Richard Errett Smalley) (சூன் 6,1943-அக்டோபர் 28,2005) என்பவர் ஓர் அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் ரைஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியல், இயற்பியல் மற்றும் வானியல் ஆகியவற்றின் பேராசிரியராக இருந்தார். 1996 ஆம் ஆண்டில், ரைஸ் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரான ராபர்ட் கர்ல் மற்றும் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஹரோல்ட் க்ரோட்டோ ஆகியோருடன் சேர்ந்து, பக்கிபால்ஸ் என்றழைக்கப்படும் கார்பனின் புதிய புறவேற்றுமை வடிவமான பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் என்பதைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நானோ தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளின் பொதுவாக்கத்தை ஆதரிப்பவராக இருந்தார்.

தொடக்க கால வாழ்க்கை, கல்வி

[தொகு]

தன்னுடன் பிறந்த நால்வரில் இளையவரான ஸ்மாலி, ஜூன் 6,1943 அன்று ஓஹியோ அக்ரோனில் ஃபிராங்க் டட்லி ஸ்மாலி, ஜூனியர் மற்றும் எஸ்தர் வர்ஜீனியா ரோட்ஸ் ஆகியோருக்குப் பிறந்தார்.[1] இவர் மிசோரியின் கன்சாஸ் நகரில் வளர்ந்தார். இரிச்சர்டு ஸ்மாலி தனது தந்தை, தாய், அத்தை ஆகியோரை தொழில்துறை, அறிவியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் ஆக்கபூர்வமான தாக்கங்களை ஏற்படுத்தியதாகப் பாராட்டியுள்ளார். இவரது தந்தை ஃபிராங்க் டட்லி ஸ்மாலி ஜூனியர் இயந்திர, மின் உபகரணங்களுடன் பணியாற்றினார். இறுதியில் இம்ப்லிமென்ட் அண்ட் டிராக்டர் என்ற பண்ணைக் கருவிகளுக்கான வர்த்தக இதழின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார். இவரின் தாயார் எஸ்தர் ரோட்ஸ் ஸ்மாலி, ரிச்சர்ட் ஒரு பதின்பருவ இளைஞனாக இருந்தபோது தனது இளங்கலைப் பட்டத்தை முடித்தார். இயற்பியல் அறிவியலின் அடித்தளங்களை கற்பித்த கணிதவியலாளர் நார்மன் என். ராயல் ஜூனியரால் இவர் ஈர்க்கப்பட்டார், மேலும், நீண்ட உரையாடல்களின் வழியாகவும் இணைந்து செயலாற்றும் நடவடிக்கைகள் மூலமாகவும் தனது மகனிடம் தான் அறிவியல் மீது கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தினார். ஸ்மாலியின் தாய்வழி அத்தை, முன்னோடி பெண் வேதியியலாளர் சாரா ஜேன் ரோட்ஸ், வேதியியல் துறையில் ஸ்மாலிக்கு ஆர்வமூட்டினார், அவரைத் தனது கரிம வேதியியல் ஆய்வகத்தில் வேலை செய்ய அனுமதித்தார், மேலும், ஒரு சிறப்பான வேதியியல் பாடத்திட்டத்தைக் கொண்ட ஹோப் கல்லூரியில் சேருமாறு பரிந்துரைத்தார்.[2]

மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு ஸ்மாலி இரண்டு ஆண்டுகள் ஹோப் கல்லூரியில் பயின்றார், அங்கு ஸ்மாலி 1965 இல் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார், ராவுல் கோபெல்மேனின் ஆய்வகத்தில் இளங்கலைப் படிப்பிற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.[3] தனது படிப்பிற்கு இடையில் கிடைத்த நேரத்தில், தொழில்துறையிலும் பணியாற்றினார், அங்கு இவர் தனக்கான தனித்துவமான நிர்வாக பாணியை உருவாக்கிக் கொண்டார். எலியட் ஆர். பெர்ன்ஸ்டைனின் மேற்பார்வையின் கீழ் "தி லோயர் எலக்ட்ரானிக் ஸ்டேட்ஸ் ஆஃப் 1,3,5 (சமச்சீர்)-ட்ரையசின்" என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையை முடித்த பின்னர் 1973 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[4] 1973 முதல் 1976 வரை சிகாகோ பல்கலைக்கழகத்தில் டொனால்ட் லெவி மற்றும் லெனார்ட் வார்டன் ஆகியோருடன் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுப் பணியை மேற்கொண்டார், அங்கு இவர் மீயொலிவேக சீரொளிக்கற்றை நிறமாலையியல் வளர்ச்சியில் முன்னோடியாக இருந்தார்.[5]

தொழில் வாழ்க்கை

[தொகு]

1976 ஆம் ஆண்டில், ஸ்மாலி ரைஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1982 ஆம் ஆண்டில், ரைஸில் வேதியியலில் ஜீன், நார்மன் ஹேக்கர்மேன் இருக்கைக்கு நியமிக்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டில் ரைஸ் குவாண்டம் நிறுவனத்தை நிறுவ உதவினார், 1986 முதல் 1996 வரை வேதியியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார். 1990இல் இயற்பியல் துறையில் பேராசிரியராகவும் ஆனார். 1990 ஆம் ஆண்டில், நானோ அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை நிறுவ உதவினார். 1996ஆம் ஆண்டில், அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1990இல் தேசிய அறிவியல் அகாதெமி 1991 இல் அமெரிக்கன் அகாதெமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸிலும் உறுப்பினராக ஆனார்.[6]

புல்லரீன்கள்

[தொகு]

இயற்பிய வேதியியலில் ஸ்மாலியின் ஆராய்ச்சி, துடிக்கும் மூலக்கூற்றுக் கற்றைகள் மற்றும் பறக்கும் நேர பொருண்மை நிறமாலை ஆகியவற்றைப் பயன்படுத்தி கனிம, குறைக்கடத்தி கொத்துக்கள் உருவாக்கம் குறித்து ஆய்வு செய்தது. இந்த அனுபவத்தின் விளைவாக, வானியல் தூசி கூறுகள் குறித்த கேள்வியை ஆராய்வதற்காக ராபர்ட் கர்ல் அவரை ஹாரி க்ரோட்டோவுக்கு அறிமுகப்படுத்தினார். இவை ஆர் கொரோனா போராலிஸ் போன்ற பழைய நட்சத்திரங்களால் வெளியேற்றப்பட்ட கார்பன் நிறைந்த துகள்கள் ஆகும். ராபர்ட் கர்ல் , ஹாரி க்ரோட்டோ, ரிச்சர்டு ஸ்மாலி ஆகியோரின் கூட்டுழைப்பின் விளைவாக C60 (பக்கிபால்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் கார்பனின் மூன்றாவது தனிமப் புறவேற்றுரு வடிவமாக ஃபுல்லரீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.[4]

20 அறுகோணங்களையும் 12 ஐங்கோணங்களையும் பயன்படுத்தி முப்பரிமாண முறையில் அறுகோணங்களை ஒன்றாகத் தட்டி ஒட்டியதன் பின்னர் C60 இன் அமைப்பு ஒரு கால்பபந்தைப் போன்றது என்பதை ஸ்மாலி உணர்ந்தார். C60 என்ற பெயருக்கு இவரே பொறுப்பாக இருந்தார், தனது வடிவமைப்புகளில் புவியியல் குவிமாடங்களைப் பயன்படுத்தியதற்காக அறியப்பட்ட ஒரு அமெரிக்க கட்டிடக் கலைஞரான பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் பெயரால் இந்தப் புறவேற்றுருவிற்குப் பெயரிட்டார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dr. Richard Errett Smalley". Legacy.com. Retrieved July 18, 2016.
  2. "Richard E. Smalley – Biographical". Nobelprize.org. Retrieved July 19, 2016.
  3. Hafner, Jason H. (May 2006). "Obituary: Richard Errett Smalley". Physics Today 59 (5): 71–72. doi:10.1063/1.2216973. Bibcode: 2006PhT....59e..71H. 
  4. 4.0 4.1 4.2 Smalley, Richard Errett (1974). The lower electronic states of 1,3,5 (sym)-triazine (in ஆங்கிலம்).
  5. Hargittai, István; Hargittai, Magdolna (2000). Candid science. London: Imperial College Press. pp. 363–373. ISBN 978-1-86094-151-1. Retrieved July 18, 2016.
  6. "Richard E. Smalley". Franklin Institute. January 15, 2014. Retrieved July 19, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிச்சர்டு_ஸ்மாலி&oldid=4459934" இலிருந்து மீள்விக்கப்பட்டது