உள்ளடக்கத்துக்குச் செல்

இராம் தயாள் முண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் தயாள் முண்டா
Ram Dayal Munda
பிறப்பு(1939-08-23)23 ஆகத்து 1939
துரி கிராமம், ராஞ்சி, பீகார், (சார்க்கண்டு)
இறப்பு30 செப்டம்பர் 2011(2011-09-30) (அகவை 72)
துரி கிராமம், தாமர், ராஞ்சி, சார்க்கண்டு
கல்லறைதுரி கிராமம், தாமர், ராஞ்சி, சார்க்கண்டு
23.046 N, 85.680 E
தேசியம்இந்தியர்
கல்வி
  • ராஞ்சி பல்கலைக்கழகம், ராஞ்சி, 1957–63, முதுகலை (மானுடவியல்)
  • சிக்காகோ பல்கலைக்கழகம், 1963–70, முனைவர் (மொழியியல்)
படித்த கல்வி நிறுவனங்கள்ராஞ்சி பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம்
பணிமானுடவியலாளர், மொழியியலாளர், நாட்டுப்புறவியலாளர், இசை விரிவுரையாளர், கல்வியாளர், வேளாண்மையாளர், துணைவேந்தர்,
அமைப்பு(கள்)பழங்குடியினர் மற்றும் பழங்குடியின மக்களின் இந்திய கூட்டமைப்பு
அறியப்படுவதுஇந்திய மொழிகள் மற்றும் இலக்கியப் பணி
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • ஆதி-தரம்: இந்தியாவின் ஆதிவாசிகளின் மத நம்பிக்கைகள்
  • முண்டாரி வினையின் அம்சங்கள்
  • முண்டரி வியாகரன் (முண்டரி இலக்கணம்)
  • ஸ்ரீ புடு பாபு அவுர் உங்கி ரச்னே
  • தி சன் சாரியோடியர், ராம்தாரியின் ஆங்கில மொழிபெயர்ப்பு
  • சிங் தின்கரின் ராஷ்மிரதி (பால் உடன் ஸ்டேன்ஸ்லோ மற்றும் டேவிட் நெல்சன்)
  • கவிதை மொழி
அரசியல் இயக்கம்
  • ஜார்கண்ட் இயக்கம்
  • கலாச்சார மறுமலர்ச்சி இயக்கம்
விருதுகள்பத்மசிறீ, சங்கீத நாடக அகாதமி விருது
கையொப்பம்

இராம் தயாள் முண்டா (Ram Dayal Munda)(23 ஆகத்து 1939 - 30 செப்டம்பர் 2011),[1] என்பவர் ஆர். டி. முண்டா என்று அழைக்கப்படுபவர், இந்திய அறிஞரும் பிராந்திய இசை வல்லுநரும் ஆவார். இவரின் கலைத்துறை பங்களிப்பிற்காக 2010ஆம் ஆண்டுக்கான பத்மசிறீ விருது இவருக்கு இந்திய அரசால் வழங்கப்பட்டது.[1]

இவர் ராஞ்சி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்[1] இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2] 2007-ல், முண்டா சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். இவர் 30 செப்டம்பர் 2011[1] ராஞ்சியில் இறந்தார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இராம் தயாள் முண்டா இந்தியாவின் பீகார் (இப்போது சார்க்கண்டு) ராஞ்சி மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமமான தையூரியில் பிறந்தார்.[1] இராம் தயாள் முண்டா தனது ஆரம்பக் கல்வியை அம்லேசாவில் உள்ள லூதரினியம் சேவைப் பள்ளியில் பயின்றார். இவர் தனது இடைநிலைக் கல்வியைத் துணைப் பிரதேச நகரமான குந்தியில் கற்றார்.[1] பிரித்தானியப் பேரரசின் சுயாட்சிக்கான வரலாற்று பிர்சா முண்டா இயக்கத்தின் மையப்பகுதியாக, குந்தி பகுதி உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக மானுடவியல் துறையிலிருந்து அறிஞர்களை ஈர்த்தது. முண்டா, இவரது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து, வழிகாட்டியாகச் செயல்பட்டார். இது இவரது அனுபவ உலகத்தை வளர்ப்பதற்கு அடிப்படையாக அமைந்தது. மொழியியலில் கவனம் செலுத்தி உயர்கல்விக்கான மானுடவியலைத் தனது பாடமாகத் தேர்ந்தெடுத்தது முற்றிலும் புதிய உலகத்தைத் திறந்தது.[1]

கல்வி மற்றும் தொழில்

[தொகு]

நார்மன் ஜைடின் வழிகாட்டுதலின் கீழ், சிக்காகோ பல்கலைக்கழகத்தின் லட்சிய ஆராய்ச்சித் திட்டத்தில், ஆஸ்திரேசியாடிக் மொழிகளின் இந்தியக் குழுவிலிருந்து, ஒரு இடைநிலை சூழலில் மொழியியலில் உயர்கல்வி பெற முண்டாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. முண்டா சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[3] பின்னர் தெற்கு ஆசிய ஆய்வுகள் துறையின் பீடத்தில் நியமிக்கப்பட்டார். பின்னர், அப்போதைய துணைவேந்தர் குமார் சுரேஷ் சிங்கின் வேண்டுகோளின் பேரில், பழங்குடியினர் மற்றும் பிராந்திய மொழிகள் துறையைத் தொடங்கினார். சார்க்கண்டு மக்கள் எதிர்கொண்டுள்ள உள் காலனித்துவ சூழ்நிலையை மாற்றுவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து சமூக அரசியல் ஆர்வலர்களுக்கும் இந்தத் துறை இணைப்பாக இருந்தது. இத்துறையில் பயின்ற பல மாணவர்கள் " அனைத்து சார்க்கண்டு மாணவர் சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கி, சார்க்கண்டு இயக்கத்தைப் பராமரிப்பதற்காக ஒரு அறிவுசார் தளத்தை உருவாக்க முன்வந்தனர். இது 1985-ல் ராஞ்சி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முண்டா நியமிக்கப்பட்டதற்கு மறைமுகமாகப் பங்களித்தது. இதன் விளைவாக, இவர் அரசுக்கும் மக்கள் இயக்கத்திற்கும் இடையிலான அரசியல் உரையாடலின் ஊடகமாக மாறினார். எனவே, சார்க்கண்டு மாநிலத்தை உருவாக்குவதற்கு சார்க்கண்டு விவகாரங்களுக்கான குழு உருவாக்கப்பட்டது.[2]

ஓய்வும் ஓய்விற்கு பிந்தைய பணியும்

[தொகு]

முண்டா 1999-ல் வயது மூப்பின் காரணமாக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[2] ஆனால் மக்களின் கலாச்சார அணிதிரட்டலில் தனது ஈடுபாட்டைத் தொடர்ந்தார். முண்டா ஜெனீவாவில் உள்ள பழங்குடி மக்கள் மீதான ஐ. நா. செயற்குழுவிலும், நியூயார்க்கில் உள்ள ஐ. நா. பூர்வீக பிரச்சினைகளுக்கான ஐ.நா மன்றத்திலும், ஐ. சி. ஐ. டி. பி.யின் மூத்த அதிகாரியாக, அகில இந்தியப் பழங்குடியினர் இயக்கத்தை வழிநடத்தி நிர்வகிக்கும் கொள்கை வகுப்பாளராகவும் செயல்பட்டார்.[2]

முண்டா பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். நாட்டின் ஆதிவாசி மக்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஆலோசகராகவும் பங்கேற்பாளராகவும் இருந்தார்.[2] சோவியத் ஒன்றியத்தில் நடந்த இந்திய திருவிழாவிலும், சீனா, சப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நடந்த பிற கலாச்சார நிகழ்வுகளிலும் இவர் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]

விருதுகள்

[தொகு]

முண்டாவுக்கு 2007ல் சங்கீத நாடக அகாதமியும், 2010ல் பத்மசீறீ விருதினை இந்திய அரசும் இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கியது.[1][2]

சிறப்பு

[தொகு]
  • சமர் பாசு முல்லிக் எழுதிய சில்வன் கதைகள்: முண்டா நாட்டிலிருந்து கதைகள் புத்தகத்தில் உள்ள கதைகளில் இவர் இடம்பெற்றுள்ளார்.[4]
  • இவரது நண்பர் பி. பி. கேசரியுடன் சார்க்கண்டிற்கு இவர் மேற்கொண்ட விசையுந்து சுற்றுப்பயணம், மெயின் ஜார்கண்ட் மெய்ன் ஹூன் என்ற பயணக் குறிப்புகளில் நேர்த்தியாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
  • 2017ஆம் ஆண்டில், ஆவணப்பட தயாரிப்பாளர்களான பிஜு டோப்போ மற்றும் மேக்நாத், முனைவர் இராம் தயாள் முண்டாவின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய ஆவணத் திரைப்படமான 'நாச்சி சே பாஞ்சி- நடனம் ஆடுபவர்கள் பிழைப்பார்கள்' என்ற ஆவணப்படத்தை வெளியிட்டனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "A life dedicated to preserving tribal culture". The Hindu.com. 3 October 2011. பார்க்கப்பட்ட நாள் 26 February 2012.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Dr Ram Dayal Munda, Member NAC". Nac.Nic.com. Archived from the original on 15 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்பிரவரி 2012.
  3. "educationist Ram Dayal Munda and theatre personality". News.Rediff.com. 19 March 2010. http://news.rediff.com/report/2010/mar/19/president-appoints-5-new-members-to-rajya-sabha.htm. 
  4. "adivaani's new imprint One of Us brings out Sylvan Tales: Stories from the Munda country". adivaani. 2015-10-26. பார்க்கப்பட்ட நாள் 2017-02-04.
  5. "Reel tribute to Ram Dayal". https://www.telegraphindia.com/1170105/jsp/jharkhand/story_128518.jsp#.WJYhz1f-s8o. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • 2010 பத்ம விருது பெற்றவர்களின் பட்டியல் தி இந்து, பத்ம விருது பெற்றவர்களின் முழு பட்டியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_தயாள்_முண்டா&oldid=3652831" இலிருந்து மீள்விக்கப்பட்டது