உள்ளடக்கத்துக்குச் செல்

இராமர் திருமுடிச்சூட்டு விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமர் பட்டாபிசேக காட்சி

ஸ்ரீராம பட்டாபிஷேகம் (Sri Rama Pattabhishekam), இராமாயண காவியத்தின் யுத்த காண்டம் முடிவில் இலங்கை வேந்தன் இராவணனை அழித்து, சீதையை மீட்ட, இராமன் வீடணனுக்கு இலங்கை வேந்தனாக முடிசூட்டியபின், வீடணன் மற்றும் சுக்ரீவன், அனுமன், அங்கதன் உள்ளிட்ட வானரங்களுடன் புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்தி நகரத்திற்கு திரும்பினார். வானரங்கள், சீதை மற்றும் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் உள்ளிட்ட சகோதரர்கள் புடைசூழ கோசல நாட்டின் அரசனாக வசிட்டரால் முடிசூடப்பட்டார். அன்றிலிருந்து இராமராச்சியம் தொடங்கி பத்தாயிரம் ஆண்டுகள் இராமர் நன்னெறிகளுடன் அயோத்தியை ஆண்டார்.[1]

வரலாறு

[தொகு]

பரதனின் வேண்டுகோளுக்கு இணங்க, 14 ஆண்டு கால வனவாசத்தை முடித்த இராமனை சீதை, இலக்குவணை வீடணன், வானரங்கள் மற்றும் பரதன், சத்துருக்கணன் புடைசூழ அயோத்தி நகரத்திற்கு தேர் மீது ஊர்வலமாக இசைக்கருவிகள் முழங்க அழைத்துச் செல்லப்படுகிறார். இராமன் ஊர்வலமாகச் செல்லும் போது பரதன் தேர்க் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டான். சத்ருக்னன் இராமனின் தலைக்கு மேல் குடையைப் பிடித்தான். இலக்குமணன் சாமரம் வீசிக் கொண்டிருந்தான். வீடணன் மற்றொரு வெண்சாமரத்தைப் பிடித்திருந்தான். அப்போது, ரிஷிகளும், தேவர்களும், மருத்கணங்களும் ஆகாசத்தில் இருந்து ராமனைப் புகழ்ந்து இனிமையான குரலில் வாழ்த்தினர்.

சுக்ரீவனின் ஆணைக்கிணங்க வானரங்கள் கங்கை உள்ளிட்ட புனித ஆறுகளின் நீரைக் கொண்டுவருகிறார்கள். அயோத்தி குடிமக்கள் இராமரை வரவேற்க வீட்டின் முன் பூக்களால் தோரணம் கட்டி அலங்காரங்கள் செய்துள்ளனர்.

வசிட்டர், வாமதேவர், ஜாபாலி, கௌதமர் மற்றும் பிற பிராமணர்கள் பூசாரிகளாக இராமரை புனித நீரால் அபிசேகம் செய்தனர். மேலும் அனைத்து வகையான மூலிகைச் சாறுகள் இராமர் மீது தெளிக்கப்பட்டது. முடிசூட்டு விழாவை நடத்தும் வசிஷ்டர் மற்றும் பிற ரிஷிகள், சீதையுடன் கூடிய இராமனை இரத்னமயமான பீடத்தில் அமரச் செய்து, இராமருக்கு கிரீடத்தை சூட்டினர். அவ்வமயம் இராமருக்கு சத்துருக்கனன் வெண்குடையைப் பிடித்தான். சுக்ரீவன் வெண்சாமரத்தையும், விபீஷணன் மற்றொரு வெண்சாமரத்தையும் வீசினர். அனுமன் இராமரின் பாதுகைகளை பணிந்து அமர்ந்தான். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் இராமருக்கு விலைமதிக்க இயலாத பரிசுகள் வழங்கினர். தேவர்களும், கந்தர்வர்களும் இசையுடன் பாடினர். அரம்பையர்கள் நர்த்தனம் புரிந்தனர்.

முடிசூட்டு விழா முடிந்த பின்னர் இராமர் ரிஷிகள், வீடணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், நீலன் மற்றும் நளனுக்குப் பரிசுகளை வழங்கினார். இராமர் சீதைக்கு ஒரு முத்து மாலையை பரிசாக அளிக்கிறார். சீதை அந்த மாலையை அனுமனுக்கு பரிசாக வழங்கினார். இராமர் பட்டாபிசேகம் விழா முடிந்த பின்னர் வீடணன் மற்றும் வானரங்கள் இராமரிடமிருந்து விடை பெற்று இலங்கை மற்றும் கிட்கிந்தைக்கு திரும்பினர்.

கம்ப இராமாயணத்தில்

[தொகு]
  மாணிக்கப் பலகை தைத்து வயிரத் திண் கால்கள் சேர்த்தி
   ஆணிப்பொன் சுற்றி முற்றி அழகுறச் சமைத்த பீடம்
   ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர் அதனின்மீது
   பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ {10321}
   மங்கல கீதம் பாட மறை ஒலி முழங்க வல் வாய்ச் 
   சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை ஒலிப்ப தா இல்
   பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பூ மழை பொழிய விண்ணோர்
   எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து அபிடேகம் செய்தார்
 - கம்பராமாயணம் 10321. 10322ம் பாடல்கள், யுத்த காண்டம், திருமுடி சூட்டு படலம்.[2]

பொருள்: மாணிக்கத்தால் செய்த பலகையைப் பொருத்தி, வைரத்தின் கால்களைச் சேர்த்து, உயர்ந்த பொன்னால் சுற்றும் முற்றும் முழுமையாக்கி அழகுடன் செய்யப்பட்ட பீடத்தை, பெருமையுடைய பளிங்கு மாடத்தில் இட்டனர். அதன் மீது அணிகலன்களை அணிந்த திரண்ட தோள்களைக் கொண்ட ராமன், சீதையுடன் அழகுற வீற்றிருந்தான். மங்கலப் பாடல்கள் பாடப்பட, வேதவொலி முழங்க, பெரிய வாயைக் கொண்ட சங்குகள் குமுற, தாளமும், மத்தளமும் ஓசை எழுப்ப, குற்றமில்லா பல்வகை இசைக்கருவிகள் மேலெழுந்து ஆரவாரிக்க, பூ மழை பொழிய, விண்ணோர் இராமனைத் தனித்தனியாக சென்று நீராட்டிவிட்டனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]