உள்ளடக்கத்துக்குச் செல்

இராபர்ட் நொக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபர்ட் நொக்சு
ராபர்ட் நொக்சு (பி. திராம்பொன், 1711)
பிறப்புராபர்ட் நொக்ஸ்
Robert Knox

(1641-02-08)8 பெப்ரவரி 1641
டவர் குன்று, இலண்டன்
இறப்பு19 சூன் 1720(1720-06-19) (அகவை 79)
இலண்டன்
கல்லறைபுனித மேரி தேவாலயம், விம்பிள்டன்
தேசியம்பிரித்தானியர்
பணிமீகாமன், வணிகர், எழுத்தாளர்
பணியகம்பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
அறியப்படுவது20 ஆண்டுகள் கண்டியில் சிறையில் வைக்கப்பட்டிருந்தவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்An Historical Relation of the Island Ceylon

ராபர்ட் நொக்சு (Robert Knox. 8 பெப்ரவரி 1641 – 19 யூன் 1720) பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஆங்கிலேயக் கப்பல் மீகாமனும், வணிகரும், எழுத்தாளரும் ஆவார். இவர் ராபர்ட் நொக்சு என்ற அதே பெயரைக் கொண்ட கப்பல் மீகாமனின் மகன் ஆவார்.

இளமைக் காலம்

[தொகு]

இலண்டன் டவர் ஹில் என்ற இடத்தில் பிறந்த நொக்சு தனது தந்தையின் ஆன் என்ற கடற்படைக் கப்பலில் மாலுமியாகச் சேர்ந்து தனது இந்தியாவுக்கான முதலாவது பயணத்தை 1655 ஆம் ஆண்டில் தனது 14 வது அகவையில் மேற்கொண்டு, 1657 இல் நாடு திரும்பினார். அவ்வாண்டில், இங்கிலாந்தின் ஆட்சியாளராக இருந்த ஆலிவர் கிராம்வெல் கீழைத்தேய வணிக நடவடிக்கைகள அனைத்தையும் நிருவகிக்க கிழக்கிந்தியக் கம்பனிக்கு அதிகாரம் வழங்கினார். இதன் மூலம் ராபர்ட் நொக்சும் அவரது மாலுமிகளும் கம்பனியில் இணைக்கப்பட்டனர்.

இலங்கையில் சிறைப்பிடிப்பு

[தொகு]

1658 இல் தந்தை, மகன் இருவரும் அவர்களது மாலுமிகளுடன் ஈரானுக்கு சென்றனர். 1659 நவம்பர் 19 இல் இடம்பெற்ற ஒரு சூறாவளியில் கப்பலின் கொடிக்கம்பம் சேதமடைந்தது. இதனால் அவர்களது கப்பல் இலங்கையில் தரை தட்ட வேண்டி வந்தது. அப்போது கண்டி இராச்சியத்தின் அரசனாக இருந்த இரண்டாம் இராஜசிங்கனின் படையினர் கப்பலைக் கைப்பற்றி கப்பலில் இருந்த அனைவரையும் சிறைப் பிடித்துச் சென்றனர். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இவர்கள் அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். கண்டி இராச்சியத்தை விட்டு வெளியேற அவர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், அவர்கள் ஓரளவு சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டனர். ராபர்ட் நொக்சு வேளாண்மையில் ஈடுபட்டும், வீடு வீடாகச் சென்று சிறு பொருட்கள் விற்பனை செய்தும், தன்னைக் காத்துக் கொண்டார். இருவரும் மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டனர். நீண்ட காலம் சுகவீனமாக இருந்த தந்தை 1661 பெப்ரவரியில் கண்டியில் இறந்தார்.

கண்டியில் இருந்து தப்புதல்

[தொகு]

1680 ஆம் ஆண்டில் ராபர்ட் நொக்சு ஸ்டீவன் ரட்லண்ட் என்ற இன்னுமொரு மாலுமியின் உதவியுடன் கண்டியில் இருந்து தப்ப முடிந்தது. இருவரும் மன்னாரில் டச்சுக்களின் அரிப்புக் கோட்டைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது யாழ்ப்பாணப் பட்டணத்தின் டச்சுத் தளபதியாக இருந்த லாரன்சு வான் பில் ஆளுனராகப் பதவி உயர்வு பெற்று பதவியேற்புக்காகக் கொழும்பு செல்வதற்காக அரிப்புக் கோட்டையில் தங்கியிருந்தார். லாரன்சு பில் ராப்ர்ட் நொக்சை அரிப்பில் இருந்து கொழும்புக்கு அழைத்துச் சென்று,[1] அங்கிருந்து பட்டாவியாவுக்கு (இன்றைய ஜகார்த்தா) அனுப்பி வைத்தார். அங்கிருந்து நொக்சு சீசார் என்ற ஆங்கிலேயக் கப்பலில் ஏறி 1680 செப்டம்பரில் இங்கிலாந்து வந்து சேர்ந்தார்.[2]

தனது பயணக் காலத்தில் நொக்சு தனது இலங்கை அனுபவங்களை எழுதி 1681 ஆம் ஆண்டில் An Historical Relation of the Island Ceylon என்ற நூலாக வெளியிட்டார். இந்நூலில் அவர் கண்டி மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் விவசாய உத்திகளை ஓவியங்களாகவும் வரைந்து சேர்த்திருந்தார். இநூல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நூல் ராபின்சன் குரூசோ புதினத்தை எழுத டானியல் டீஃபோவிற்கு உந்துசக்தியாகவும் இருந்தது.[3]

பிற்காலம்

[தொகு]

நொக்சு கிழக்கிந்தியக் கம்பனியில் தொடர்ந்து பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். இலங்கையில் இருந்து திரும்பிய பின்னர் கிழக்கிற்கு நான்கு தடவைகள் பயணம் செய்தார். இப்பயணங்கள் பெரிதும் வெற்றியளிக்கவில்லை. இறுதியில் கம்பனியுடன் முரண்பட்டு 1694 ஆம் ஆண்டில் அவர் கம்பனியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நான்கு ஆண்டுகளின் பின்னர் மேரி என்ற தனது வணிகக் கப்பலில் மீண்டும் கிழக்கிற்குச் சென்ரார். 1701 இல் இங்கிலாந்துக்குத் திரும்பினார். பிற்காலத்தை அவர் இலங்கையைப் பற்றி எழுதுவதிலும், தனது வாழ்க்கையைப் பற்றி எழுதுவதிலும் கழித்தார். திருமணமாகாமலே அவர் 1720 சூன் மாதத்தில் இலண்டனில் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • Book of the Month – An historical relation of the Island of Ceylon – March 2004 பரணிடப்பட்டது 2010-06-28 at the வந்தவழி இயந்திரம். King's College London.
  • Knox, Robert (1681). An historical relation of the island Ceylon, in the East Indies. Printed by R. Chiswell. LCCN 15012033.
  • I. B. Watson, 'Knox, Robert (1641–1720)', Oxford Dictionary of National Biography, Oxford University Press, Sept 2005
  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 145
  2. Rajpal Kumar De Silva, Willemina G. M. Beumer. Illustrations and Views of Dutch Ceylon, 1602–1796, pp. 351–352. Brill Archive, 1988. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-08979-9
  3. Jardine, Lisa. The Curious Life of Robert Hooke: The Man who Measured London, p. 238. HarperCollins, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-053898-8

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_நொக்சு&oldid=3485047" இலிருந்து மீள்விக்கப்பட்டது