இரத்தினச் சுருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரத்தினச் சுருக்கம் என்பது மகளிர் பற்றிய செய்திகளை இலக்கணமாகச் சொல்லும் தமிழ் நூல். மகளிர் உறுப்புகள், மகளிர் விளையாட்டு, மகளிரோடு இன்பம் காணும் வாழ்க்கை முதலான செய்திகள் பண்டைய தமிழ் மக்களால் எவ்வாறெல்லாம் சொல்லப்பட்டன என்பதை இந்த இலக்கணம் தொகுத்துக் காட்டுகிறது. இதன் காலம் 16-ஆம் நூற்றாண்டு ஆகும்.

இந்த நூலின் ஆசிரியரான புகழேந்திப் புலவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நளவெண்பா படைத்த புகழேந்திப் புலவர், ஒட்டக்கூத்தரோடு வாதிட்டுப் புறத்திரட்டுப் பாடல்கள் பாடிய புகழேந்திப் புலவர், அம்மானைப் பாடல்களை இயற்றிய 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழேந்திப் புலவர் ஆகியோருக்கெல்லாம் காலத்தால் பிற்பட்டவர்.

உவமான சங்கிரகம்

தொல்காப்பியத்தில் உவம இயல் என ஒரு பகுதி உண்டு. பெண்ணோடு தொடர்புடைய உவமைகளை மட்டும் விளக்கும் இலக்கண நூல் 15-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது. இந்த நூல்களை உவமான சங்கிரகம் என வழங்கினர். உவமான சங்கிரக நூல்கள் நான்கு. அவற்றில் இது இரண்டாவது நூல்.

இந்த நூலின் முதல் பதிப்பில் (1874) 28 பாடல்கள் இருந்தன. கால-ரத்நாகரம் வெளியிட்ட ஐந்தாம் பதிப்பில் 71 பாடல்கள் உள்ளன. முதல் மூன்று பாடல்கள் கட்டளைக்கலித்துறை யாப்பிலும், அடுத்து 30-வரை உள்ள பாடல்கள் வெண்பா யாப்பிலும், அடுத்து வரும் பாடல்கள் முந்தைய இரண்டோடு விருத்த யாப்பும் விரவிய நிலையிலும் நூல் அமைந்துள்ளது.

நூலின் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. நூலின் இறுதியும் முதலும் மண்டலிக்கவில்லை. எனவே மேலும் சில பாடல்கள் காணாமல் போயின எனத் தெரிகிறது.

மகளிரின் விளையாட்டுக்கு உரியனவாக மலர், வாவி, ஊசல், செய்குன்று, அமுதபானம், கிளி, பூவை, பந்து, கழங்கு, அன்னம், மயில், முல்லைப்பந்தல் ஆகியவை இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன (29)

முத்து பிறக்கும் இடம் என்று இந்த நூல் தொகுத்துக் காட்டும் 20 பொருள்கள்:

1.யானைதந்தம், 2.பன்றித்தந்தம், 3.கிளிஞ்சல், 4.பாக்குமரம், 5.வாழைமரம், 6.நத்தை, 7.சங்கு, 8.கொக்கு, 9.பனி-நளினம், 10.மின்-நார், 11.கந்தரம், 12.சாலி-நெல், 13.மூங்கில், 14.கரும்பு, 15.ஆவின்-பல், 16.நாகம், 17.கார்மேகம், 18.நிலா, 19.வடும்பு, 20.கராம்-முதலை ஆகியவை.

இந்த முத்தங்களை விட மகளிர் தரும் முத்தம் மேலானது என்று புலவர் பாடுவர். (35)

மகளிரின் 7 பருவம் எப்படிப்பட்டது என்னும் விளக்கம் சிறப்பாக உள்ளது.

பேதை 7 அகவை வரை – வாரி போன்றவள்
பெதும்பை 11 அகவை வரை – மணி போன்றவள்
மங்கை 19 அகவை வரை – வெய்யோன் போன்றவள்
மடந்தை 25 அகவை வரை – மதி போன்றவள்
அரிவை 30 அகவை வரை – பா(கு) போன்றவள்
தெரிவை 40 அகவை வரை – தேர் போன்றவள்
பேரிளம்பெண் 40 அகவைக்கு மேல் – வள்ளல் போன்றவள்

கருவிநூல்[தொகு]

  • உவமான சங்கிரகம் – அணி இலக்கண ஆராய்ச்சி, தொகுப்பாய்வு டாக்டர் இ.சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக் கழகம், வெளியீடு - தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1981 – நூலின் பகுதி.
  • தமிழ் இலக்கண நூல்கள், பதிப்பாசிரியர் முனைவர் ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பக வெளியீடு, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினச்_சுருக்கம்&oldid=1412989" இலிருந்து மீள்விக்கப்பட்டது