இரண்டாம் நிலை புள்ளிவிவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் நிலை தரவு (Secondary data) என்பது முதன்மைப் பயனரைத் தவிர வேறு ஒருவரால் சேகரிக்கப்பட்ட தரவைக் குறிக்கிறது.[1] சமூக அறிவியலுக்கான இரண்டாம் நிலை தரவுகளின் பொதுவான ஆதாரங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புகள், அரசாங்கத் துறைகளால் சேகரிக்கப்பட்ட தகவல்கள், நிறுவன பதிவுகள் மற்றும் பிற ஆராய்ச்சி நோக்கங்களுக்காக முதலில் சேகரிக்கப்பட்ட தரவு ஆகியவை அடங்கும்.[2] முதன்மை தரவு என்பது ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஆய்வாளரால் சேகரிக்கப்படுகிறது.

இரண்டாம் நிலை தரவு பகுப்பாய்வு நேரத்தைச் சேமிக்கும் வகையில் உள்ளது. தரவுகளைச் சேகரிப்பதில் செலவழிக்கப்படும், குறிப்பாகத் தரவுகளின் அளவு விடயத்தில், எந்தவொரு தனிப்பட்ட ஆராய்ச்சியாளரும் தாங்களாகவே சேகரிக்க முடியாத பெரிய மற்றும் உயர்தர தரவுத்தளங்களை வழங்க முடியும். கூடுதலாக, சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தின் ஆய்வாளர்கள் இரண்டாம் நிலைத் தரவை இன்றியமையாததாகக் கருதுகின்றனர். ஏனெனில் கடந்த கால மாற்றம் மற்றும்/அல்லது முன்னேற்றங்களை போதுமான அளவில் கணக்கிடக்கூடிய புதிய கணக்கெடுப்பை நடத்துவது சாத்தியமில்லை. இருப்பினும், சந்தைப்படுத்தல் ஆராய்ச்சியில் இரண்டாம் நிலை தரவு பகுப்பாய்வு குறைவாகப் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் தரவு காலாவதியானதாகவோ அல்லது துல்லியமாகவோ இல்லாமல் இருக்கலாம்.[1]

இரண்டாம் நிலை புள்ளிவிவரம்  மூலங்கள்[தொகு]

இரண்டாம் நிலைத் தரவை பல ஆதாரங்களிலிருந்து பெறலாம்:

  • மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வீட்டுவசதி, சமூகப் பாதுகாப்பு, தேர்தல் புள்ளிவிவரங்கள், வரி பதிவுகள் போன்ற அரசுத் துறைகள்
  • இணையத் தேடல்கள் மற்றும் நூலகங்கள்
  • புவியிடங்காட்டி மற்றும் தொலையுணர்வு தரவுகள்
  • நிறுவன முன்னேற்ற அறிக்கைகள்
  • பத்திரிகைகள், செய்தித்தாள்கள் மற்றும் ஆய்விதழ்கள்

நிர்வாக தரவு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு[தொகு]

அரசாங்கத் துறைகளும் நிறுவனங்களும் பதிவு செய்துள்ள மக்களிடம் அல்லது பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போதும் அல்லது பதிவேடு வைப்பதற்காக - வழக்கமாக ஒரு சேவையை வழங்கும்போது தகவல்களைச் சேகரிப்பது வழக்கம். இந்தத் தகவல் நிர்வாகத் தரவு என்று அழைக்கப்படுகிறது.[3]

இதில்,

  • பெயர்கள், பிறந்த தேதிகள், முகவரிகள் போன்ற தனிப்பட்ட தகவல்கள்
  • பள்ளிகள் மற்றும் கல்வி சாதனைகள் பற்றிய தகவல்கள்
  • உடல்நலம் பற்றிய தகவல்கள்
  • குற்றவியல் தண்டனைகள் அல்லது சிறைத் தண்டனைகள் பற்றிய தகவல்கள்
  • வருமானம் போன்ற வரி பதிவுகள்

அடங்கும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு குறிப்பிட்டதிடத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களைப் பற்றிய தகவல்களை முறையாகப் பெறுதல் மற்றும் பதிவு செய்யும் செயல்முறையாகும். இது ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையின் வழக்கமாக நிகழும் மற்றும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையாகும். இது ஒரு வகையான நிர்வாகத் தரவு. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் இத்தகவல்கள் ஆராய்ச்சி நோக்கத்திற்காகச் சேகரிக்கப்படுகிறது. பெரும்பாலான நிர்வாக தரவுகள் தொடர்ச்சியாகச் சேகரிக்கப்பட்டு மக்களுக்குச் சேவையை வழங்குவதற்காக அரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]