இரண்டாம் இராஜசிங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் இராஜசிங்கன்
கண்டி மன்னன்
ரொபர்ட் நொக்சின் இலங்கைத் தீவின் ஒரு வரலாற்றுத்தொடர்பு (1693) நூலில் இராஜசிங்கனின் வரிப்படம்
ஆட்சி1635 – 6 டிசம்பர் 1687
முடிசூட்டு விழா1635
முன்னிருந்தவர்செனரத்
பின்வந்தவர்விமலதர்மசூரியன் II
வாரிசு(கள்)விமலதர்மசூரியன் II
மரபுதினராஜ வம்சம்
தந்தைசெனரத்
தாய்தொன் கதரீனா
பிறப்பு1608
இலங்கை
இறப்பு6 டிசம்பர் 1687
இலங்கை
அடக்கம்இலங்கை

இரண்டாம் இராஜசிங்கன் (முடிசூட்டலுக்கு முன் இளவரசன் மகாஸ்தானன், விந்தனைத் தெய்வம்) 1629 முதல் 6 டிசம்பர் 1687 வரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட சிங்கள மன்னன் ஆவான். இலங்கையிலிருந்து போர்த்துக்கேயரை வெளியேற்றுவதற்காக இடச்சு (ஒல்லாந்து) அரசை உதவிக்கழைத்து, அதில் 1656இல் வெற்றி கண்டவன் இவன்.[1] எனினும், போர்த்துக்கேயரை வெளியேற்றி, தம்மை ஒரு பலமிக்க காலனித்துவ சக்தியாக நிலைநிறுத்துவதே ஒல்லாந்தரின் திட்டம் என்பதை அவனால் சற்று தாமதமாகவே புரிந்துகொள்ள முடிந்தது.

இளமைக்காலம்[தொகு]

கண்டி அரசின் இரண்டாவது மன்னனான செனரத்தின் மகன் மகாஸ்தானன். இலங்கைத்தீவின் கரையோரம் முழுக்க போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தில் இருக்க, மத்தியில் தன்னாட்சி அலகாக கண்டி அரசு மட்டுமே எஞ்சியிருந்தது. அதையும் கைப்பற்ற போர்த்துக்கேயர் முழுமுயற்சி எடுத்துக்கொண்டிருந்த காலத்தில், 1612இல், கண்டிக்குள் நுழைந்த போர்த்துக்கேயரை புறமுதுகிடு ஓடவைத்தான் இளம்வீரன் மகாஸ்தானன். தந்தையை அடுத்து 1629இல் ஆட்சியில் அமர்ந்த மகாஸ்தானன், 1634இல் இரண்டாம் இராஜசிங்கன் என்ற பெயரில் முடிசூடிக்கொண்டான்.[2]

ஒல்லாந்தர் வருகை[தொகு]

செங்கடகலைக் கண்டி அரசைச் சூழ்ந்திருந்த கரடுமுரடான மலைப்பள்ளத்தாக்குகள், அதற்கு இயற்கைப் பாதுகாப்பை வழங்கின.

போர்த்துக்கேயரிடமிருந்து கண்டியைக் காப்பாற்றுவதற்காக, ஒல்லாந்தரின் உதவியை நாடி, செனரத் எடுத்த முயற்சிகளை இராஜசிங்கனும் தொடர்ந்தான். கண்டிக்கும் ஒல்லாந்துத் தூதர், மார்செலிஸ் போஸ்சோவருக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்தானாலும், அது நடைமுறையில் இருக்கவில்லை. கிழக்கே பத்தேவியாவில் தீவிரமாக நிலைநிறுத்தப்பட்ட ஒல்லாந்தர், கோவாவையும் முற்றுகையிட்டிருந்தனர். 1638 மார்ச் 28இல் நிகழ்ந்த கன்னொருவைப் போரில் இராஜசிங்கனும் போர்த்துக்கேயரை வெற்றிகண்டிருந்தான். இதையடுத்து, மே 23இல், இடச்சு கடற்படைத் தலைவன் ஆதம் வெஸ்டர்வோல்டுடன் உதவிகோரி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டான்.[3][4]

இறுதியாக, கண்டி - இடச்சு இணைப்படையொன்று 1639 மே 18இல், கண்டியின் நீணாள் ஆட்சிப்பரப்பான மட்டக்களப்பு மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றியிருந்த போர்த்துக்கேயரை ஓட ஓட விரட்டியது. 1640 மார்ச் 13இல் இக்கூட்டுப்படை காலியைக் கைப்பற்றியதுடன், 1641இல் மேற்கிலங்கையில் போர்த்துக்கேயரின் ஆதிக்கம் பெருமளவு நீங்கியது. 1649 வரை, கிழக்கிலங்கையில் போர்த்துக்கேயரின் ஆதரவாளர்களுக்கான தன் பழைய பழிக்கணக்குகளைத் தீர்க்கும் நடவடிக்கைகளிலேயே கண்டி அரசு ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. நிலங்களை எரிப்பதும், கிராமங்களை இடம்பெயரச் செய்வதும், கீழை இலங்கையைத் தம் கைக்குள் வைத்திருந்த இடச்சுக்கும் பெரும் தலையிடியாக இருந்ததால், அவர்கள் கண்டியுடன் சமாதானத்துக்கு வந்தனர். 1649இல், கண்டி - இடச்சு நல்லுறவு புத்துயிர்ப்படைந்ததாகத் தெரிகின்றது.[3]

பிற்கால ஆட்சி[தொகு]

போர்த்துக்கீசரிடமிருந்து இடச்சுக்களின் வசப்பட்ட மட்டக்களப்புக் கோட்டை, 1672இல்.

தொடர்ச்சியான போர்களால் கண்டி அரசு பலமிழந்திருந்தது. உட்கலவரங்களும், கரையோரங்களைப் பிடித்திருந்த ஒல்லாந்தரும், மட்டுப்பட்ட வளங்களுடன் கண்டி அரசைத் திண்டாட வைத்திருந்தன. இந்நிலையில் 1652இல் போர்த்துக்கேயருக்கு எதிராக இறுதிப்போரை ஆரம்பித்திருந்த கண்டி - இடச்சு கூட்டுப்படை, ஆகஸ்டு 1655இல் ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் தலைமையில், படையெடுத்துச்சென்று, போர்த்துக்கேயரின் தலைநகர் [[கொழும்பு]|கொழும்பைத்]] தாக்க ஆரம்பித்திருந்தது. இடச்சு அரசு மீது நம்பிக்கை இழந்திருந்த இராஜசிங்கன், 1656இல் கொழும்பைக் கைப்பற்றிய இடச்சுப்படை, கண்டிப்படையை வெளியே விட்டுவிட்டு, கோட்டையை ஆக்கிரமித்துக்கொண்டதுடன் சீற்றமுற்று, 40களில் கீழைநாட்டில் தான் ஆட்டிய வெறியாட்டத்தை கொழும்புப்பகுதியிலும் தொடர்ந்துவிட்டு, படைகளை மீள அழைத்துக்கொண்டான். பெருந்துரோகம் இழைத்ததன் மூலம், அன்றிலிருந்து கண்டியின் எதிரி என்ற பதவியைப் போர்த்துக்கேயரிடமிருந்து பறித்து, தன்வசம் தக்கவைத்துக்கொண்டது, இடச்சுப்படை.[5]

இத்தகைய குழப்பங்களாலும், இராஜசிங்கனுக்கெதிராக கண்டியில் எழுந்த கிளர்ச்சிகள் தீவிரமடைந்திருந்தன. இத்தனைக்கும் மத்தியில் அவனால் தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது என்பதுடன், தலதா மாளிகையின் ஒரு மாடியும் அவனால் திருப்பணி செய்யப்பட்டது.[6]

ஆளுமை[தொகு]

இராஜசிங்கனின் திருவோலக்கத்துக்கு ஹல்ஃப்ட் வருகை. 1672)

இராஜசிங்கனின் மிகப்பெரிய சாதனையே இலங்கையிலிருந்து போர்த்துக்கேயரை அகற்றியது தான். அதன் எதிர்விளைவாக, இலங்கையில் ஒல்லாந்தர் குடியேறினாலும், போர்த்துக்கேயருடன் ஒப்பிடும்போது, மத-பண்பாட்டுகளிலான தலையீடு, ஒல்லாந்தரால் குறைவாகவே இருந்தது. கண்டிக்குள் ஏற்பட்ட குழப்பநிலை, இராஜசிங்கனின் ஆட்சிக்கு பலதடவைகள் அச்சுறுத்தலாக மாறினாலும், அவை எல்லாவற்றையும் அவன் தன் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். பிற்காலத்தில், கண்டி அரசியலில் மாபெரும் சக்திகளாக மாறிய பல குடும்பங்கள், இவன் காலத்தில் தலையெடுத்தவைதான். இவன் ஆட்சிக்காலத்திலேயே, 1640இல் இடச்சுக்களின் வசமிருந்த திருகோணமலை கோட்டை பகுதியில் உலவிய கண்டிப்படை, ரொபர்ட் நொக்சை சிறைப்பிடித்ததுடன், இலங்கையின் பண்டைச்சிறப்பைக் கூறும் புகழ்பெற்ற நூலொன்றை எழுதுவதற்கு, அச்சிறைவாசம் மூலம் வாய்ப்பளித்தது.[7]

மேலும் காண[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இரண்டாம் இராஜசிங்கன்
பிறப்பு: 1608 இறப்பு: 25 நவம்பர் / 6 டிசம்பர் 1687
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
செனரத்
கண்டி மன்னன்
1635–25 நவம்பர் 1687
பின்னர்
விமலதர்மசூரியன் II