இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். இவர் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் நூலைப் பாடியவர்.

செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியுள்ளார்.

பாடல் சொல்லும் செய்திகள்[தொகு]

பாணர் சுமந்துசெல்லும் இசைக்கருவிகள்[தொகு]

பேரியாழ் மீட்டும் பாணர் கூட்டம் இசைக்கருவிகளை கலப்பையில் போட்டுச் சுமந்துகொண்டு செல்கிறது.

 • (கலம் = இசைக்கருவி) (கலப்பை = இசைக் கருவி போடும் பை)
 • முழவு = மத்தளம்,
 • ஆகுளி = சிறுபறை,
 • பாண்டில் = தாளம்,
 • உயிர்தூம்பு = மயில் திரும்பிப் பார்ப்பது போல் வளைந்திருக்கும். யானை பிளிறுவது போல ஒலி எழுப்பும்,
 • குறுந்தூம்பு = மெல்லிய ஒலி எழுப்பும் ஊதுகொம்பு,
 • குழல் - புல்லாங்குழல் (புல் = மூங்கில்),
 • தட்டை = இரு பிளவுகளைத் தட்ட ஒலிக்கும் கருவி,
 • எல்லரி = மோத ஒலிக்கும் பெரிய தாளவகை,
 • பதலை = பானை (கடம்)
இவற்றுடன் செல்லும்போது கானவர் காவலாளிகளாக அவர்களுக்குத் துணை வருவர்.

பேரியாழ் அமைந்திருக்கும் அழகு[தொகு]

 • திவவு - முறுக்கிய வளையல் போல் இருக்கும்.
 • கேள்வி-யாழ் - கடுயப்படும் பகை நரம்புகளில் விர் போகாது இசைத்துப் பழக்கப்பட்டது.
 • நரம்பு - நல்ல முறுக்குடன் இன்னொலி எழுப்ப வல்லது.
 • அரலை - அரற்றும் அழுகை ஒலி தராதது.
 • துளை - வரகு அரிசி போன்ற துளைகளில் நரம்பு போத்துக் கட்டப்பட்டிருக்கும்.
 • பத்தல் - யாழின் இசை எதிரொலிக்கும் இடம்.
 • ஆணி - புதிய வெண்ணரம்புகள் கட்டப்பட்டிருக்கும்.
 • பச்சை - பத்தலுக்குத் தீட்டப்பட்டிருக்கும் வண்ணம்.
 • உந்தி - மகளிர் கூந்தல் இரு பிளவாய் வயிற்றில் தொங்குவது போன்ற அமைப்பினைக் கொண்டது யாழின் வயிறு.
 • மாமை - பருவப் பெண்ணின் பொன்னிற மேனியழகு போல் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்.
 • உரு - அழகியைப் போல ஆனால் களாப்பழம் போன்ற புள்ளிகளுடன் தோற்றமளிக்கும். வளைந்து நிமிர்ந்த கொம்பு போல் இருக்கும்.
 • உயிர்ப்பு - எழுப்பும் ஓசை இன்பத்தில் ஆழ்த்தும்.

மலை ஏறுதல்[தொகு]

 • பாணரின் குடும்பக் குழுமம் மலையில் ஏறுகிறது.
 • விறலியர் சூழ்ந்துவரத் தலைவன் செல்கிறான்.
 • நிழலில் இளைப்பாறுகின்றனர்.

புலவர் வழிகாட்டுகிறார்[தொகு]

 • புலவர் இந்தக் கூத்தர் கூட்டத்தை ஆற்றுப்படுத்துகிறார். (இந்த இடத்துக்கு இந்த வழியில் சென்றால் இன்னது பெறலாம் என்று கூறுகிறார்.)

நன்னனின் நல்லியல்புகள்[தொகு]

 • அவர்கள் நன்னனை நாடிச் செல்லும் நசைஏர் உழவர்கள்.
 • நன்னன் நற்செயல்களை உணர்ந்து நல்கும் பாங்குடையவன்.
 • நன்னன் தன் நாள்கமிழ் இருக்கையில் இருந்துகொண்டு அனைவருக்கும் வழங்கிக்கொண்டேயிருப்பான்.
 • அவையில் உள்ள அவனது அரசியல் சுற்றம் வந்திருப்போரின் திறமைகளைப் பாராட்டிச் சொல்லிக்கொண்டேயிருக்கும்.
 • நவிரமலைச் சிவன்கோயில் அங்கு இருக்கிறது.
 • நன்னனின் முன்னோரும் கொடையாளிகள்.

செல்லும் வழி[தொகு]

 • பருவ-மழை பொய்க்காததால் அவன் நாட்டில் முசுண்டை, எள், தினை, அவரை, வரகு, கரும்பு, துவரை, ஐயவி என்னும் வெண்சிறு கடுகு, இஞ்சி, வள்ளிக் கிழங்கு, வாழை, இறுகு, உந்தூழ் என்னும் உழுந்து, நாவல்பழம், உயவை என்றும், கருவிளை என்றும் சொல்லப்படும் காக்கட்டான், கூவைப்பழம், இனிக்கும் மாம்பழம், ஆசினி எனப்படும் சிறுபலா - ஆகியவை செழித்திருக்கும்.
 • ஆந்தை ஒலிக்கும் மரங்கள் பழங்களைத் தாங்கமாட்டாமல் வளைந்திருக்கும்.

படுகர் குடில்களில் விருந்து[தொகு]

 • வழியில் பாணர் வாழும் சிறுகுடில்கள் இருக்கும்.
 • ஆரிப் படுகர் இருப்பிடத்தில் உங்கள் வீடு போல் தங்கலாம். அவர்களோடு அளவளாவலாம். நெய் ஊற்றிச் சமைத்த சினையரிசிப் பொங்கல் விருந்தாகப் பெறலாம்.
 • அவர்களின் வீடுகளில் தேன், தேறல், நறவு, தேங்காய், கடம்பு மான் கறி, முள்ளம்பன்றிக் கறி, அந்தக் கறிகளை நெருப்பில் வாட்டிய புழன், மாங்காய் போட்ட மோர்க்குழம்பு, நெல்லரிசிச் சோறு முதலானவை மலிந்து கிடக்கும். அவற்றை விருப்பம் போல் பெறலாம்.

எப்படிச் செல்லவேண்டும்[தொகு]

 • அவர்கள் தரும் விருந்தில் மயங்கிவிடாதீர்கள். செங்கண்மா நகருக்குச் செல்லுங்கள்.
 • விடிந்தபின் செல்லுங்கள்.
 • மரத்தைக் கல்லால் கொட்டி அடையாளம் செய்துகொண்டு செல்லுங்கள். (பிற்காலத்தில் வருபவர்களுக்கு அது வழிகாட்டியாக இருக்கும்)
 • யானைகளை ஓட்டக் கவண் எறிவர். அந்தக் கல் படாமல் இருக்க மரங்களில் பதுங்கிச் செல்லுங்கள்.
 • ஒருவர்பின் ஒருவராகச் செல்லுங்கள்.
 • குழந்தைகளை நடக்க விடாமல் தூக்கிச் செல்லுங்கள்.
 • வழுக்கும் பகுதியில் கோல் ஊன்றிச் செல்லுங்கள்.
 • சுனையின் ஓரங்களில் கற்பாறைகளை மதிலாக அடுக்கிக் கட்டிய கோயில்கள் இருக்கும். அங்கு இசைக் கருவிளை முழக்காமல் நிறுத்திவிட்டுக் கடவுளை வணங்கிய பின் செல்லுங்கள்.
 • வழியிலுள்ள தேன் கூடுகளையும், மூங்கிலில் குரங்கு தாவுவதையும் வேடிக்கை பார்க்காதீர்கள். வழியில் கவனம் வையுங்கள்.
 • மூங்கில் உரசுவதால் பற்றி எரியும் தீயில் வெந்துகிடக்கும் பன்றி இறைச்சியைத் தூய்மைப்படுத்தி உண்ணுங்கள்.
 • தெளிந்த நீரைப் பருகுங்கள்.
 • மீதமுள்ள கறியைப் பொதிமூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.
 • குழந்தைகளோடு வெளியில் தங்காதீர்கள். கல்லுக் குகையில் தங்குங்கள்.
 • இரவில் உறங்குங்கள்.
 • மாசுணம் என்னும் மலைப்பாம்பு இருக்கும் . கவனமாகப் பார்த்துக்கொண்டு செல்லுங்கள்.

மலைபடு கடாம் (கடம் போன்று மலையில் கேட்கும் ஓசைகள்)[தொகு]

 1. பலாப்பழ மணம் கமழும் அருவி ஒலி
 2. வான் அரமகளிர் அருவியாடும் ஒலி
 3. கானவர் ஓட்டுவதைப் பொருட்படுத்தாமல் வயலில் மேயும் யானைகள் தன் இனத்தை அழைக்கும் ஒலி
 4. குகையில் படுத்துறங்கும் கானவன் பாறைமேல் வைத்திருந்த தன் அம்பு நழுவி விழ, வலி பொறுக்கமுடியாமல் அழும் ஒலி
 5. மலைமக்களாகிய கொடிச்சியர் அவனுக்குப் பட்ட காயத்தை ஆற்ற ஊசியால் தைக்கும்போது அவனுக்கு வலி தெரியாமல் இருக்கப் பாடும் பாடல் ஒலி
 6. வேங்கை பூவை மாலையாகக் கட்டும்போது பாடும் பாடல் ஒலி
 7. யானைக் கன்றைப் புலி பிடித்துவிட்டதால் யானைக் கூட்டமே ஒன்று சேர்ந்து முழங்கும் ஒலி
 8. தாய் தாவும்போது நழுவி விழுந்த குட்டியின் துடிப்பதைக் கண்டு மந்தி செய்யும் பூசல்
 9. கானவர் கயிற்றின் வழியாக இறங்கித் தேனை எடுக்கும் கொள்ளை-ஒலி
 10. அரசன் ஆணைப்படி சிற்றூர்களை வென்று அதனைச் சூரையாடும் கானவர் உவகை-ஒலி
 11. சூரையாடிய பொருளை அரசனுக்குப் போதுமளவு தந்தபின் எஞ்சியதைக் குறப்பெண்களுக்குத் தந்து அவர்களோடு கானவர் ஆடும் குரவை-ஒலி
 12. பாறையில் மோதி இறங்கும் ஆற்றின் இரங்கல்-ஒலி
 13. யானையைக் குழியில் விழச்செய்து, கயிறால் கட்டி அதனைப் பழக்க எழுப்பும் தமிழொடு கலந்த மொழியொலி
 14. மூங்கிலைப் பிளந்து செய்த தட்டையை முழக்கிக்கொண்டு தினைப்புனத்தில் கிளியோட்ட மகளிர் பாடும் பாட்டொலி
 15. வரையாட்டுக் கடாய்கள் இனத்தலைமைக்காகப் போரிடும் மோதல்-ஒலி
 16. உண்டது போக எஞ்சிய பலாச்சுளைகளில் உள்ள கொட்டைகளை எடுப்பதற்காகச் சிறுவர் கன்றுகளைப் பிணையல் கட்டி காந்தள் பூத்த கொடிகளால் மெல்லத் தட்டி ஓட்டும் ஆரவார ஒலி
 17. கரும்பின் கண்ணை உடைக்கும் கரும்பாலை ஒலி
 18. தினை குற்றும் பெண்களின் வளையல்-தாள வள்ளைப்பாட்டொலி
 19. நிலத்தைக் கிண்டி மஞ்சளையும் சேம்பினையும் வீணாக்கும் காட்டுப்பன்றிகளை ஓட்ட அடிக்கும் பறையொலி
 20. இந்த எல்லா ஒலிகளையும் எதிரொலிக்கும் குன்றகச் சிலம்பு

இப்படிப் பல ஒலிகளைக் கேட்டுக்கொண்டே (மலைபடு கடாம் கேட்டுக்கொண்டே பாணர் கூட்டம் மலையேறலாம்.

மேலும் செல்லல்[தொகு]

கண் குளிரக் கண்டுகொண்டும், காது குளிரக் கேட்டுக்கொண்டும் மேலும் செல்லலாம்.

 • குறிஞ்சிப்பண் பாடும் குறத்தியரின் இனிய குரலைக் கேட்டுக்கொண்டே செல்லலாம்.
 • மேகம் மேயும் மலையழகை முருகன் என்று வாழ்த்திக்கொண்டே செல்லலாம்.
 • படர்ந்திருக்கும் மாசி-ஈரத்தில் இசைக்கருவிகளை இசைக்க முடியாது. எனவே பாறைக் குகைகளில் தங்கி இசை எழுப்புங்கள்.
 • உருண்டுவிழும் பாறைகளை உற்று நோக்காதீர்கள். கண் கலங்கும்.
 • தண்டுகால் என்னும் ஊன்றுகோலை ஊன்றிக்கொண்டு செல்லுங்கள்.
 • பரல்-கற்கள் பகலில் பரல்-காலை உருத்தும். வெயில்-சூடு தணிந்த மாலையில் செல்லுங்கள்.
 • கொடிகள் பின்னிக் கிடக்கும் பிணங்கரில் செல்லும்போது கைகோத்துக்கொண்டு செல்லுங்கள்.
 • முன்னே செல்பவர் வழி செய்துகொண்டே செல்லுங்கள்.
 • நடுகல் இருக்கும் கல்லேசு கவலை இடங்களைத் தொழுது செல்லுங்கள்.
 • பின் வருவோருக்கு வழி தெரிவதற்காகப் புல்லை முடிந்து அதன்மேல் கல்லை வைத்து அடையாளம் செய்துகொண்டு செல்லுங்கள்.
 • வழிகாட்டும் பெயர் எழுதியிருக்கும் மரங்களைப் பார்த்து வழி தெரிந்துகொள்ளுங்கள்.
 • கடவுள் உருவம் எழுதிய மரங்களைத் தொழுது செல்லுங்கள்.

நன்னன் கொடை[தொகு]

 • நன்னன் தன் தலையில் பூமாலை சுற்றியிருந்தான்.
 • அவனது கைகள் தேர்களைப் பரிசிலாக வழங்கிக்கொண்டிருந்தன. அவன் தனக்கென்று எதையும் வைத்துக்கொள்வதில்லை.
 • அவனது முன்னோரும் கொடையாளிகள்.
 • ஊர்மக்களும் கொடையாளிகள்.

கவலை போக்கும் விருந்து[தொகு]

 • பெண்மானைப் புலி தாக்கிக் கொன்றுவிட்டது. ஆண்மான் தன் பெண்மானை நினைத்துக்கொண்டே தவித்தது. இது ஒரு கவலை தரும் காட்சி.
 • கானவன் அம்பு எய்யத் தன் வில்லின் நாணைத் தெறித்துச் சரிபார்த்துக்கொண்டிருந்தான். அந்த ஒலியைக் கேட்ட காட்டாட்டுக் கடா தன் கூட்டத்தை அழைத்துக்கொண்டு வேறு காட்டுக்குச் சென்றது. இதுவம் ஒரு கவலை தரும் காட்சி.
 • இந்தக் கவலைகளைப் போக்க உதவியது கோவலின் விருந்துதான். கோவலன் ஆமான் பாலைக் கறந்து மனைவியின் கலத்தில் ஊற்றுவான். அதனை அவள் உங்களுக்கு விருந்தாகப் படைப்பாள்.
 • அங்கு மான் தோலில் அன்னத்தூவி மெத்தையில் உறங்குவது போல உறங்கலாம்.

தப்பிக்க வழி[தொகு]

 • கூளியர் அம்பு விட்டால் கூப்பிடு தூரம் சென்று இலக்கைத் தாக்கும். எனவே அவர்களைக் கண்டால் நன்னனிடம் செல்கிறோம் என்று சொல்லிவிடுங்கள். அவர்கள் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள். சமைத்த கிழங்கும், புலால் உணவும் எல்லாருடைய வீட்டிலிருந்தும் கொண்டுவந்து தருவார்கள்.
 • முருகனுக்குச் சூட்டும் வெண்கடம்பு மலர்களைத் தளிர்களோடு சேர்த்துக் கட்டி மாலையாக அணிந்துகொள்ளுங்கள்.
 • முரம்புநிலம் உடைந்து பாயும் நீரில் விளையாடுங்கள். அதன் ஊற்றுநீரைப் பருகுங்கள்.

வழியில் பெறும் விருந்து[தொகு]

 • மூங்கில் கழியும் புல்லும் கொண்டு வேய்ந்த குடில்.
 • மூங்கில்-அரிசி அல்லது செந்நெல்-அரிசிச் சோற்றுடன் அவரைக்காய்ப் புளிக்குழம்பு.
 • அசதிக்குத் தங்கும் இடங்களில் எல்லாம் வெண்ணெயும் சோறும்.
 • விசயம் கொழித்த பூழி (பலகாரமாக உப்பிய பூரி)
 • நுண்ணிடி நுவணை (நுண்மையாக இடிமாவில் செய்த அல்வா)

காடாயிருந்தாலும், பள்ளியாயிருந்தாலும் (உறங்குகிடம் கொண்ட ஊராயிருந்தாலும் யாழிசைத்துப் பண் பாடுங்கள்.

 • பகன்றை சூடிய பழையர் மகளிர் (உழத்தியர்) நெல்லஞ்சோறும் நண்டுக் குழம்பும் தருவார்கள்.

நெற்களத்தில் யாழில் மருதப்பண் இசைத்துப் பாடுங்கள்.

செங்கண்மா நகரம்[தொகு]

சேயாற்றின் கரையில் இருந்த ஊர் செங்கண்மா. அங்கு நிதியம் பயன்படுத்தப்படாமல் உறங்கிக் கிடக்கும். அவ்வூர் மக்கள் பிழைப்புக்காக அயலூர் செல்வதில்லை. ஆறு போல் அகன்ற தெருக்கள். திருவிழாக் காலம் போல் ஆரவாரம். மலை போல் ஓங்கிய மாடங்கள். ஊர் நீரால் சூழப்பட்டிருக்கும்.

அரண்மனை[தொகு]

மறவர் காக்கும் வாயில் கொண்டது. அதனுள் தயங்காமல் நீங்கள் நுழைந்து செல்லலாம். அங்கு உங்களைக் கண்டோர் அனைவரும் விருந்து படைப்பர். அரசனுக்குத் திறை தருவது போல விருந்து படைப்பர்.

அரண்மனை அருகில் விலங்கியல் பூங்கா[தொகு]

அந்தப் பூங்காவில் மரா மரங்கள் ஓங்கியிருக்கும். ஆமான் (காட்டுப்பசு), யானைக்குட்டி, கரடிக்குட்டி, வருடை(காட்டாடு), பருந்து, உடும்பு, மயில், காட்டுக்கோழி, முதலானவற்றைக் கண்டு களிக்கலாம். பலாப்பழமும், மாம்பழமும் உண்டு மகிழலாம்.

அரண்மனை அருகில் அருங்காட்சியகம்[தொகு]

அந்த அருங்காட்சியகத்தில் வகை வகையான நூறை என்னும் வள்ளிக்கிழங்கு, மணி, புலியோடு போரிட்டு மாண்ட யானைத்தந்தம், முதலானவை வைக்கப்பட்டிருந்தன. காந்தள், நாகம், திலகம், சந்தனம், மிளகு முதலான செடிகொடிகள் இருந்தன. மூங்கிலில் விளைந்த தேறல்-கள், எருமைத்தயிர், குரங்கு பாய்ந்ததால் ஒழுகும் தேன், ஆசினிப்பலா முதலானவை காவிரி கடலில் கலக்குமிடத்தில் (புகார் நகரில்) இருப்பது போல் வாங்கி உண்ண வைக்கப்பட்டிருந்தன்.

யானை முற்றம்[தொகு]

இதனை அடுத்துப் போர்யானைகள் கட்டப்பட்டிருக்கும் முற்றம் இருந்தது.

அரசனை வாழ்த்திப் பாடல்[தொகு]

யானை-முற்றத்தை அடுத்து அரண்மனை இருந்தது. அரண்மனை முற்றத்துக்குச் சென்றதும் பாடுங்கள். விறலியர் தொன்றுதொட்டு வந்த தம் மரபுப்படி முதலில் கடவுளை வாழ்த்தி மருதப்பண்ணில் இசை எழுப்பிப் பாடவேண்டும். பின்னர் அரசனை வாழ்த்திப் பாடவேண்டும்.

பாடலில் இடம்பெறவேண்டிய செய்தி[தொகு]

தன் புகழ் தனக்குப் பயன்படவேண்டும் என்று வாழ்ந்த (வெற்றிப் புகழ்) மன்னர் இங்கு ஓடும் சேயாற்று மணலினும் பலர். தன் புகழ் பிறருக்குப் பயன்பட வேண்டும் என்று வாழ்பவன் நன்னன் என்னும் உண்மையைச் சொல்லிப் பாடவேண்டும்.

பலநாள் விருந்து[தொகு]

நன்னன் அழைத்துச் செல்வான். நூல் தெரியாமல் நெருக்கமாக நெய்யப்பட்ட கலிங்கம் தந்து உடுத்திக்கொள்ளச் செய்வான். வேட்டையாடித் தான் கொண்டுவந்த கறிக்குழம்பும், வெண்ணெல் அரிசியில் சமைத்த சோறும் உண்ணும்படி செய்வான். பலநாள் தங்கினாலும் முதல்நாளில் தந்தது போலவே தருவான். நாங்கள் எங்கள் இல்லம் செல்கிறோம் என்று மெல்லச் செய்தி அனுப்பினால் பரிசில் நல்குவான்.

நன்னன் நல்கும் பரிசில்[தொகு]

தலைவன் அணியத் தங்கத்தாலான தாமரை, விறலியர் அணிய விளங்கிழை (ஒளி பொருந்திய அணிகலன்), தண்ணீரில் செல்வது போல ஆடாமல் செல்லும் தேர், வாரிக்கொள்ள முடியாத யானைகள், மணிகள் கட்டிய காளைமாட்டுடன் கூடிய பசுவினம், பொன்தகடு பூட்டிய குதிரை, துய்க்கத் துய்க்க மாளாத நிதிச்செல்வம் முதலானவற்றை நல்குவான். அவன் கைகள் கொடுப்பதற்கென்றே கவிழ்ந்திருக்கும். இல்லாத புலவர்கள் ஏற்ற கை நிறைய நல்குவான். நவிர-மலையில் திடீரென மழை பொழிவது போல வழங்குவான்.

சென்று பெற்றுக்கொள்ளுங்கள் - என்கிறார் பாடல் பாடிய புலவர் பெருங்கௌசிகனார்.

வெளியிணைப்புகள்[தொகு]