உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டைக் கருவுறுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலரின் அங்கங்கள்
இரட்டைக்கருவுறுதல்
அரபிடோப்சிஸ் தாவரத்தில் இரட்டைக்கருவுறுதல் நிகழ்வு

இரட்டைக் கருவுறுதல் என்பது பூக்கும் தாவரங்களின் (angiosperms) சிக்கலான கருவுறுதல் இயங்கு முறையாகும். பெண் பாலணுவுடன் இரண்டு ஆண் பாலணுக்கள் (விந்தணு) இணையும் நிகழ்வுகள் இரட்டைக்கருவுறுதலில் நடைபெறுகிறது. மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பான சூலகத்தின் சூழ்முடியில் மகரந்தத் தூள்கள் ஒட்டிக்கொள்வதன் மூலம் இச்செயல்முறை துவங்குகிறது. மகரந்தத்தூள் தகுந்த ஈரப்பதத்தை அடைந்தவுடன் முளைக்கத் துவங்கி மகரந்தக் குழல் மூலம் கீழாக சூழ்தண்டினுள் சூற்பையை நோக்கிச் செல்கிறது. பின்னர் மகரந்த குழலின் நுனியானது சூலகத்தை அடைந்தவுடன் சூழ் துளையைத் துளைத்துக்கொண்டு சூற்பைக்குள் நுழைகிறது. அங்கு மகரந்தக்குழலானது வெடித்து தான் சுமந்து சென்ற இரண்டு ஆண் பாலணுக்களை விடுவிக்கின்றது.

இரட்டைக் கருவுறுதல்

[தொகு]

தனித்து விடப்பட்ட இரண்டு ஆண் பாலணுக்களில் ஒன்று ஒருமடிய பெண் பாலணுவுடன் (n) இணைத்து இருமய கருவினை (2n) உருவாக்குகிறது. மற்றொரு ஆண் இனச்செல்லானது சூற்பையின் மையத்திலுள்ள இரண்டு துருவ உயிரணுக்களுடன் இணைகிறது. இவ்வாறு இரண்டு ஆண் இனச்செல்களில் ஒன்று கருமுட்டையுடனும் (அண்டம்) மற்றொன்று துருவ உயிரணுக்களுடன் (Polar Nuclei) இணையும் மொத்த நிகழ்வும் இரட்டைக் கருவுருதல் (Double Fertilization) என்றழைக்கப்படுகிறது.

மூவிணைவு

[தொகு]

இரண்டாவது ஆண் பாலணு (n) மேலும் நகர்ந்து இரண்டு ஒற்றை மய (ஹப்ளாய்டு அல்லது மோனோபியாள்டு) துருவ உயிரணுக்கள் அல்லது இரண்டாம் நிலை உயிரணுக்களுடன் (n)+(n) இணைந்து மும்மடி அல்லத மும்மய (3n) (டிரிப்பிளாய்டு) முதல்நிலைக் கருவூண் உயிரணுவை தோற்றுவிக்கிறது. இவ்வாறு இந்த மூன்று உயிரணுக்களை உள்ளடக்கிய இணைதல் நிகழ்ச்சிக்கு மூவிணைவு என்று பெயர். இந்நிகழ்விற்கு உடல் கருவுருதல் எனவும் அழைக்கப்படுகிறது. சில தாவரங்களில் இந்த உயிரணு பண்மயத்தன்மையுடன் காணப்படலாம். இவ்வாறு உருவான கருவூண் உயிரணு ஊட்டத்திசுவாக வளர்ந்து வித்தகவிழையத்தை தோற்றுவிக்கிறது. இந்த ஊட்டச்சத்துள்ள திசுவானது வளரும் கருவுக்கு உணவூட்டத்தை அளிக்கிறது. கருவுற்ற பெண் முட்டையைச் சூழ்ந்துள்ள சூற்பை கனியாக மாறி விதையைப் பாதுகாக்கிறது. [1]

விரிவான வரலாறு

[தொகு]

இரட்டைக் கருவுறுதலானது நூற்றாண்டுகளுக்கு முன்னர் ரசியப் பேரரசின் கீவ் என்ற இடத்தைச் சார்ந்த செர்கெய் நவாசின் (1898),[2] மற்றும் பிரான்சு நாட்டைச் சார்ந்த லியயோன் கிக்னாடு என்பாரால் தனித்தனியாக கண்டறியப்பட்டது. பிரிட்லேரியா மற்றும் லிலியம் தாவரங்களில் பழங்கால ஒளி நுண்ணோக்கி கொண்டு இரட்டைக்கருவுறுதல் செயல்முறை முதன் முதலாக உற்றுநோக்கப்பட்டது. இருப்பினும் ஒளி நுண்ணோக்கியின் குறைவான பெருக்கத்திறன் காரணமாக இரட்டைக் கருவுறுதலின் செயல்முறையை அறுதியிட்டுக்கூற இயலவில்லை. பின்னர் இலத்திரன் நுண்நோக்கி வளர்ச்சி காரணமாக பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. குறிப்பிடத்தக்க விடயமாக, W.ஜென்சென் என்பாரால் மகரந்தத் தூளினுள் ஆண் பாலணுக்கள் எத்தகைய உயிரணுச் சுவர்களையும் கொண்டிருக்கவில்லை என்பதும் அவற்றின் கொழுமிய சவ்வு மட்டுமே கொண்டுள்ளதாகவும் விளக்கப்பட்டது.[3].

சோதனைமுறையில் இரட்டைக்கருவுறுதல்

[தொகு]

பூக்கும் தாவரங்களில் பாலணுக்களின் இணைவுகளின் மற்ற நோக்கங்களையும் இரட்டைக் கருவுறுதலின் மூலக்கூறு இடைவினைகளைக் கண்டறியவும் பலமுறை சோதனைக்குழாய் இரட்டைக்கருவுறுதல் நிகழ்த்தி பார்க்கப்படுகிறது. இதில் ஆண் இனச்செல்லை மகரந்தக் குழலிலும், பெண் இனச்செல்லை சூற்பையிலும் நுழைப்பதில் தடைகள் ஏற்பட்டன. கட்டுப்படுத்தப்பட்ட இணைவானது ஏற்கனவே பாப்பி தாவரத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.[4] மகரந்த முளைப்பு, மகரந்தக் குழல் நுழைவு,மற்றும் இரட்டைக்கருவுறுதல் உள்ளிட்ட செயல்முறைகள் அனைத்தும் இதில் வழக்கமானதாக இருந்தது. சோதனைக் குழாய் கருவுறுதல் என்ற பெயரில் இத்தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே பல தாவரங்களில் விதைகளும் எடுக்கப்பட்டுள்ளன.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Berger, F. (January 2008). "Double-fertilization, from myths to reality". Sexual Plant Reproduction 21 (1): 3–5. doi:10.1007/s00497-007-0066-4. 
  2. Kordium EL (2008). "[Double fertilization in flowering plants: 1898-2008]" (in Russian). Tsitol. Genet. 42 (3): 12–26. பப்மெட்:18822860. 
  3. Dumas, C.; Rogowsky, P. (August 2008). "Fertilization and Early Seed Formation". Comptes Rendus Biologies 331 (10): 715–725. doi:10.1016/j.crvi.2008.07.013. பப்மெட்:18926485. 
  4. Zenkteler, M. (1990). "In vitro fertilization and wide hybridization in higher plants". Crit Rev Plant Sci 9 (3): 267–279. doi:10.1080/07352689009382290. 
  5. Raghavan, V. (2005). Double fertilization: embryo and endosperm development in flowering plants (illustrated ed.). Birkhäuser. pp. 17–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-27791-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைக்_கருவுறுதல்&oldid=3922058" இலிருந்து மீள்விக்கப்பட்டது