இரஞ்சன் மத்தாயி
இரஞ்சன் மத்தாயி Ranjan Mathai | |
|---|---|
| ஐக்கிய இராச்சியத்திற்கான இந்தியத் தூதரகம் | |
| பதவியில் 9 திசம்பர் 2013 – 31 அக்டோபர் 2015 | |
| முன்னையவர் | செய்மினி பகவதி |
| பின்னவர் | நவ்தேச்சு சர்னா |
| 29 ஆவது இந்திய வெளியுறவு செயலாளர் | |
| பதவியில் 1 ஆகத்து 2011 – 1 ஆகத்து 2013 | |
| முன்னையவர் | நிருபமா ராவ் |
| பின்னவர் | சுஜாதா சிங் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 24 மே 1952 திருவல்லா, கேரளம், இந்தியா |
| பணி | இந்திய வெளியுறவுப் பணி |
| தொழில் | குடிமைப் பணியாளர் |
இரஞ்சன் மத்தாயி (Ranjan Mathai) இந்திய வெளியுறவுப் பணித் தொகுதியைச் சேர்ந்த ஓர் இந்திய குடிமைப் பணியாளர் ஆவார். 1952 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் மற்றும் இங்கிலாந்துக்கான இந்திய உயர் தூதராக இருந்தார்.[1] இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியில் தொடங்கி 2013 ஆம் ஆண்டு சூலை மாதம் 31 ஆம் தேதி வரை இவர் இந்தியாவின் வெளியுறவு செயலாளராகப் பணியாற்றினார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]இரஞ்சன் மத்தாயி இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவல்லா நகராட்சியில் பிறந்தார். புனே பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] தந்தை தாமசு மத்தாயி தேசிய பாதுகாப்பு அகாடமியின் மூத்த ஆசிரிய உறுப்பினராக இருந்தார். இவரது தாயார் சாரா புனே கடக்வாசுலாவில் ஆசிரியராக இருந்தார்.
தொழில்
[தொகு]இரஞ்சன் மத்தாயி 1974 ஆம் ஆண்டுத் தொகுதி இந்திய வெளியுறவு சேவை அதிகாரி ஆவார். பூனா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். வியன்னா, கொழும்பு, வாசிங்டன், தெகரான் மற்றும் பிரசல்சில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.
புதுதில்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளராக 1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வங்காளதேசம் , இலங்கை, மியான்மர் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் இந்தியாவின் உறவுகளைக் கையாளும் பிரிவின் தலைவராக இருந்தார். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2001 ஆம் ஆண்டு சூன் மாதம் வரை இசுரேலுக்கான இந்திய தூதராகவும், 2001 ஆம் ஆண்டு ஆகத்து முதல் 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் வரை கத்தாரில் இந்திய தூதராக இருந்துள்ளார். 2005 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் வரை இலண்டனில் இங்கிலாந்துக்கான இந்திய துணை உயர் தூதராக பதவியை வகித்தார்.
2007 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் பிரான்சுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். இரஞ்சன் மத்தாயி 2013 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கான இந்திய உயர் தூதராகப் பொறுப்பேற்றார். செய்மினி பகவதியை தொடர்ந்து இவர் இப்பொறுப்புக்கு வந்தார். இதற்கு முன்பு இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக இருந்தார். 2013 ஆம் ஆண்டு சூலை மாதம் 31 ஆம் தேதியன்று பதவியில் இருந்து விலகினார், சுஜாதா சிங் புதிய வெளியுறவு செயலாளராக பொறுப்பேற்றார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இரஞ்சன் மத்தாயி கீதா மத்தாயி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ PTI (10 December 2013). "Ranjan Mathai takes over as Indian envoy to UK". Times of India. https://timesofindia.indiatimes.com/india/Ranjan-Mathai-takes-over-as-Indian-envoy-to-UK/articleshow/27168063.cms.
- ↑ "Foreign Secretary Ranjan Mathai hands over charge to Sujatha Singh". ndtv. 31 July 2013. http://www.ndtv.com/article/india/foreign-secretary-ranjan-mathai-hands-over-charge-to-sujatha-singh-399631.
- ↑ "Ranjan Mathai to be India's next foreign secretary". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-09-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120916210157/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-27/india/29708637_1_indian-ambassador-ministry-of-external-affairs-foreign-secretary.
- ↑ Ranjan Mathai assumes charge as Foreign Secretary
