இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (பொட்டிச்செல்லி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
The Annunciation
ஓவியர்சாண்ட்ரோ பொட்டிச்செல்லி
Sandro Botticelli
ஆண்டு1489-1490
வகைபலகைமேல் பசைக்கலவை ஓவியம்
இடம்உஃப்ஃபீசி (Uffizi), புளோரன்சு, இத்தாலியா

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (The Annunciation) என்பது சாண்ட்ரோ பொட்டிச்செல்லி என்னும் இத்தாலிய ஓவியரால் 1489-1490 ஆண்டுகளில் வரையப்பட்ட பசைக்கலவை ஓவியம் ஆகும். இது 1978இல் பழுதுபார்க்கப்பட்டு, தற்போது இத்தாலியின் புளோரன்சு நகரத்தில் உஃப்ஃபீசி (Uffici) கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பொட்டிச்செல்லி (சுமார் 1445-1510) கிறித்தவ சமயம் சார்ந்த பல ஓவியங்களையும் பிற பொருள்கள் பற்றிய ஓவியங்களையும் வரைந்து புகழ்பெற்றுள்ளார்[1]

இதன் சிறப்புக் கூறுகள்:

  • ஓவியத்தில் சித்தரிக்கப்படும் தளம் விரிந்துசெல்லும் கோணத்தில் அமைந்துள்ளது.
  • ஓவியத்தின் பின்புல நிலக்காட்சியின் எழில்.
  • ஓவியத்தில் சித்தரிக்கப்படுகின்ற நபர்களின் தனிச்சிறப்பான உடல் நிலையமைப்பு.

வரலாறு[தொகு]

இந்த ஓவியத்தை வரைவதற்கு ஏற்பாடு செய்தவர் பெனெதெத்தோ குவார்தி என்பவர். இவர், புளோரன்சு நகர் சிஸ்தேர்சிய மடத்தின் சிற்றாலயத்தில் வைப்பதற்காக இந்த ஓவியத்தை வரையுமாறு பொட்டிச்செல்லியைக் கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த ஓவியம் ஃபியோசொலே புனித மார்ட்டின் கோவிலுக்கு மாற்றப்பட்டது.

ஓவியத்தின் கருப்பொருள்[தொகு]

இந்த ஓவியம் "இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு" என்று அழைக்கப்படுகிறது. வானதூதர் கபிரியேல் கடவுளால் அனுப்பப்பட்டு நாசரேத்து ஊரில் வாழ்ந்த மரியா என்னும் பெண்ணிடம் சென்று, மரியா கடவுளின் வல்லமையால் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பார் என்றும், அக்குழந்தை இறைமகன் என்று அழைக்கப்படும் என்றும் அறிவிக்கின்ற நிகழ்ச்சியைச் சித்தரிக்கிறது.

இந்த நிகழ்ச்சி லூக்கா நற்செய்தியில் கீழ்வருமாறு விவரிக்கப்படுகிறது:

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக்


கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த
ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
அவர் தாவீது குடும்பத்தினராகிய
யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர்.
அவர் பெயர் மரியா.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி,
"அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி,
இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து,
"மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்;
அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.
அவர் பெரியவராயிருப்பார்;
உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை
ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்.
அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம்,
"இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்.
வானதூதர் அவரிடம்,
"தூய ஆவி உம்மீது வரும்.
உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்.
ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது.
அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
உம் உறவினராகிய எலிசபெத்தும்
தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்.
கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.
ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.
பின்னர் மரியா,
"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார். (லூக்கா 1:26-38)

பின்புல நிலக்காட்சி (தனிப்பகுதி)

ஓவியத்தின் அமைப்பு[தொகு]

பொட்டிச்செல்லி வரைந்த ஓவியத்தில் "இயேசு பிறப்பு முன்னறிவிப்பு" என்னும் பொருளுக்கே உரித்தான பல குறியீடுகள் காணப்படுகின்றன:

  • கபிரியேல் வானதூதர் மரியாவிடம் வந்தபோது மரியா திருநூலைப் படித்துக்கொண்டிருந்தார். எசாயா இறைவாக்கினர் "கன்னி ஒரு மகவைப் பெற்றெடுப்பார்" என்று முன்னறிவித்த செய்தியை (காண்க: எசாயா 7:14-15) மரியா அறிந்திருந்தார்.
  • ஒரு சிற்றில்லத்தில் இடது புறம் கபிரியேல் வானதூதர், வலப்புறம் மரியா சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர்.
  • அடையாள முறையில் அமைந்துள்ள பார்வைக் கோணம்: இங்கு ஓவியக் கட்டமைப்பின் முன்தளத்தில் தரை கலையழகோடு உள்ளது. ஓர் உயர்ந்த சாளரம் அமைந்துள்ளது. மரியாவின் அருகே மரத்தால் ஆன வாசக மேடையும் அதில் திருநூலும் உள்ளன. ஓவியத்தின் பின்புலத்தில் "அடைபட்ட ஒரு தோட்டம்" சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • படத்தின் பின்புலத்தில் அடைபட்ட தோட்டத்திற்கு அப்பால் குன்றுகளும், நடுக்காலக் கோட்டைகளும், விரிந்துசெல்லும் நிலக்காட்சியும் உள்ளன. இது உலகின் தொடக்கத்தில் முதல் பெற்றோர் வாழ்ந்த இன்பவனத்தைச் சுட்டுகிறது. பாவத்தால் இழந்துபோன இன்பவனத்தை மரியாவின் வயிற்றில் பிறக்கவிருக்கும் இயேசு மீண்டும் பெற்றுத்தருவார் என்னும் கருத்து அடையாளமாகக் காட்டப்படுகிறது.
  • ஓவியத்தின் நடுப்பகுதியில் கபிரியேல் வானதூதரும் மரியாவும் உள்ளனர். இருவருடைய கைகளும் ஒன்றையொன்று சந்திப்பதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் கடவுளிடமிருந்து வருகின்ற கொடையாகிய "அறிவிப்பு"; மறுபுறம், அக்கொடையை முழு உள்ளத்தோடு "ஏற்கின்ற" மனநிலை.

ஓவியத்தின் விளக்கம்[தொகு]

  • மரியா வசிக்கின்ற சிற்றில்லத்தில் இந்நிகழ்ச்சி நடக்கிறது. கபிரியேல் வானதூதர் இடது புறத்திலும் மரியா வலது புறத்திலும், பின்புலத்தில் மனிதகுலம் இழந்துபோன இன்பவனமும் காட்டப்படுகின்றன.
  • உயர்ந்து எழுகின்ற சாளரத்தின் வழியாக அகன்று விரிந்து செல்கின்ற பின்புலம் தெரிகிறது.
  • ஒவியம் முழுவதிலும் நேர்கோடுகள் உள்ளதைக் காணலாம். வீட்டின் தளத்தில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற நேர்கோடுகள்; சாளரத்தின் அமைப்பை எடுத்துக்காட்டும் நேர்கோட்டு அமைப்பு; மரியாவின் அருகே உள்ள வாசக மேடையின் அமைப்பு; சாளரத்துக்கு வெளியே தெரிகின்ற அடைபட்ட தோட்டத்தில் தெரியும் நேர்கோடுகள்.
  • "கூடுமுனை" (vanishing point) அல்லது காட்சிக் கோணத்தில் எல்லா இணைவரைகளும் சென்று மறைவதாகத் தோன்றும் புள்ளி இந்த ஓவியத்தில் பின்புலத்தில் உள்ள தொடுவானத்தின் நடுவில் உள்ளது. தொடுவானம் ஓவியத்தின் நடுவில் சிறிதே மேலுயர்ந்து அமைக்கப்பட்டுள்ளது.
  • ஓவியத்தின் பின்புலத்தில் உள்ள உயர்ந்த சாளரம் சற்றே இடப்புறம் அகற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது பொட்டிச்செல்லி வேண்டுமென்றே செய்ததாகத்தான் தெரிகிறது. ஓவியத்தின் கருப்பொருள் கபிரியேல் வானதூதர் செய்தி அறிவித்தலும் மரியா அச்செய்தியை ஏற்றலும் என்பதால் அவர்களையே ஓவியம் மையப்படுத்துகிறது. எனவே, பின்புல சாளரத்தையும் "கூடுமுனை"யையும் சற்றே அகற்றி வைத்து பார்வைக்கு அதை இரண்டாம் நிலையில் கொணர்கிறது ஓவியம்.
  • இந்த ஓவியத்தில் ஒளியும் வெளிச்சமும் அவ்வளவாக முதன்மை பெறவில்லை. ஓரிடத்திலிருந்து ஒளி வருவதற்குப் பதிலாக அது ஓவியம் முழுவதும் பரவியுள்ளது. இருப்பினும் வீட்டின் தளத்தில் வானதூதர் கபிரியேலின் நிழல் படிவது தெரிகிறது.
  • இந்த ஓவியத்தில் வானதூதர் மரியாவின் முன் முழந்தாட்படியிட்டு நிற்கின்றார். அந்த செயல் மரியாவுக்கு அவர் செலுத்துகின்ற வணக்கத்தைக் காட்டுகிறது. மரியா இறைமகனைப் பெற்றெடுக்கும் தாயாகப் போகிறார் என்பது முன்னுணர்ந்து வானதூதர் வணக்கம் செலுத்துவது தெரிகிறது.
  • ஓவியத்தில் மரியா சிறப்பான விதத்தில் சித்தரிக்கப்படுகிறார். அவருடைய உடல் சைகை நிலை அவர் அதிர்ச்சியடைந்ததைக் காட்டுகிறது. "அருள்மிகப் பெற்றவரே" என்று வானதூதர் கூறும் வாழ்த்துக்கு ஏற்ப, மரியா அருள்சுரக்கும் ஒருவராகத் தோற்றமளிக்கிறார். என்றாலும், வானதூதரின் வாழ்த்து எத்தகையது என்பதை அவரால் முழுதுமாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. எனவே அவருடைய முகத்தில் அதிர்ச்சி தோன்றுகிறது. "இவ்வார்த்தைகளைக் கேட்டு மரியா கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்" (லூக்கா 1:29). ஆனால், வானதூதர் மரியாவைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" (லூக்கா 1:50) என்றார்.
  • மரியாவும் வானதூதரும் ஒருவரை ஒருவர் நோக்கியிருப்பதால் ஓவியத்தில் ஏற்படுகின்ற வளைவும் கவனிக்கத்தக்கது. இணைகோடுகளும் குறுக்குக் கோடுகளும் நிறைந்த அந்த ஓவியத்தில் இந்த வளைவு பளிச்செனத் துலங்கி நிற்கின்றது. வானதூதர் கையை நீட்டி, கடவுளின் செய்தியை எடுத்துக் கூறுகிறார். மரியா கையை நீட்டி, அந்த செய்தியை ஏற்றுக்கொள்ளும் பாணி தெரிகிறது.
  • நீண்டுயர்ந்த சாளரத்தின் வழியே தெரிகின்ற பின்புல நிலக்காட்சி நீண்டுகொண்டே செல்வதுபோன்ற தோற்றத்தை ஓவியம் அளிக்கிறது. மனிதர் தம் பாவத்தின் காரணமாக இழந்துபோன இன்பவனத்தை அந்த நிலக் காட்சி குறிக்கிறது. இழந்ததை மீண்டும் மீட்டுத் தரும் இயேசு பிறக்கப்போவதை ஓவியம் உணர்த்துகிறது.
  • ஓவியத்தின் நடுப்பகுதிக்கும் சற்றே இடதுபுறம் வளர்ந்தோங்குகின்ற கருவாலிமரம் (oak) வானளாவ உயர்கிறது. கிரேக்க-உரோமைக் கலாச்சாரத்தில் கருவாலிமரம் "நிலைவாழ்வுக்கு" அடையாளம். முடிவில்லா காலமும் பேரின்பம் துய்த்திட மனிதர் அழைக்கப்படுகின்றனர் என்பதை அது குறிப்பிடுகிறது. அதுபோலவே, இடத்தைப் பொறுத்த எல்லையிலா விரிவு ஓவியத்தின் பின்புல நிலக்காட்சியால் குறிக்கப்படுகிறது.
  • கபிரியேல் வானதூதரின் கையில் லீலி மலர்த் தண்டு உள்ளது. அம்மலர் மாசற்ற வெண்மை நிறம் கொண்டது. எனவே, மரியாவின் கன்னிமையின் சிறப்பு லீலி மலரால் குறிக்கப்படுகிறது.
  • கண்களைக் கவருகின்ற சிவப்பு மற்றும் நீல நிறம் ஓவியத்தில் பளிச்சிடுகின்றது. மரியாவின் உடையும் வானதூதரின் உடையும் அந்நிறங்களில் ஒளிர்கின்றன.
  • மரியா மற்றும் வானதூதரின் தலைக்குச் சற்று மேலே ஒளிவட்டம் (halo) உள்ளது. அந்த ஒளிவட்டங்கள் தலைக்குப் பின்புறமாக இல்லாமல் சற்றே மேற்பகுதியில் மணிகளால் ஆன அணிகலன்கள் போல் ஒளிவீசுகின்றன. அது அக்காலத்தில் ஒரு புதிய பாணிதான். வானதூதரின் மேலுடை ஒளி ஊடுருவுகின்ற விதத்தில் அமைந்து அவர் கடவுளிடமிருந்து வருவதைக் காட்டுகிறது.
  • "இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு" என்னும் பொருளை மையமாக்கி பொட்டிச்செல்லி வரைந்த ஏழு ஓவியங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் நான்கு ஓவியங்களில் கபிரியேல் வானதூதருக்கும் மரியாவுக்கும் இடையில் ஒரு "தூண்" இருக்கும். அது இயேசு கிறித்துவைக் குறிக்கும் அடையாளம் ஆகும் (காண்க: 1 திமொத்தேயு 3:15). இந்த ஓவியத்திலோ வானதூதருக்கும் மரியாவுக்கும் நடுவே இயேசுவைக் குறிக்கும் தூண் இல்லை; மாறாக உயர்ந்தெழுகின்ற சாளரத்தின் சட்டமே ஒரு தூண்போன்று உள்ளது. அதோடு, வானதூதரின் கையும் நீள்கிறது, மரியாவின் கையும் நீள்கிறது. இரு கைகளும் ஒன்றையொன்று சந்திக்கச் செல்கின்றன. அதன் பொருள், வானதூதர் கடவுளிடமிருந்து கொணர்ந்த செய்தியை மரியா ஏற்று, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார் (லூக்கா 1:38).

குறிப்புகள்[தொகு]

  1. பொட்டிச்செல்லி வரைந்த ஓவியங்கள் பட்டியல்