உள்ளடக்கத்துக்குச் செல்

இயற்கை யுரேனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்கை யுரேனியம் (Natural uranium) NU, NU, Unat[1] என்ற குறியீடுகளால் அடையாளப்படுத்தப்படுகிறது. இயற்கையில் கிடைக்கின்ற யுரேனியத்தில் காணப்படும் ஐசோடோப்புகள் அதே விகிதாச்சாரத்தில் கலந்திருப்பின் அதை இயற்கை யுரேனியம் என்கிறோம். 0.711 சதவீதம் யுரேனியம்-235, 99.284 சதவீதம் யுரேனியம்-238, சுவடு அளவு (எடையளவில் 0.0055%) யுரேனியம்-234 என்ற விகிதாச்சார அளவுகளில் இயற்கை யுரேனியத்தில் ஐசோடோப்புகள் கலந்துள்ளன. தோராயமாக யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்து 2.2% கதிரியக்கமும், யுரேனியம்-238 ஐசோடோப்பிலிருந்து 48.6% மற்றும் யுரேனியம்-234 ஐசோடோப்பிலிருந்து 49.2 சதவீத கதிரியக்கமும் வெளிப்படுகிறது.

தாழ் மற்றும் உயர் ஆற்றல் அணுக்கரு உலைகள் இரண்டிலும் இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்த இயலும். வரலாற்றில், கிராபைட்டு நடுநிலை அணு உலை மற்றும் கனநீர் நடுநிலை அணு உலை இரண்டிலும் இயற்கை யுரேனியம் எரிபொருளாகப் பயன்பட்டிருக்கிறது. தூயநிலையில் உள்ள யுரேனிய உலோகம் அல்லது யுரேனியம் டை ஆக்சைடு (UO2) பீங்கான் வடிவங்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் யுரேனியம் டிரை ஆக்சைடு (UO3), டிரை யுரேனியம் ஆக்டாக்சைடு (U3O8) போன்றவை சோதனை முறை எரிபொருள்களாக பயன்படுத்தப்பட்டு நம்பிக்கையளித்தன[2].

0.72% அளவு யுரேனியம்-235 ஐசோடோப்பு மென்னீர் அணு உலைகளில் அல்லது அணுக்கரு ஆயுதங்களில் தன்னிறைவு பெற்ற நீடித்த சங்கிலி வினைகளை உருவாக்க போதுமானதாக இல்லை இத்தகைய பயன்பாடுகளுக்கு செறிவூட்டிய யுரேனியத்தை பயன்படுத்துவது கட்டாயமாகும்.

90% செறிவூட்டப்பட்ட யுரேனியம்-235 ஐசோடோப்பு அணு ஆயுதங்கள் தயாரிக்க பயனாகிறது. மென்னீர் அணு உலைகளுக்கு தோராயமாக 3% செறிவூட்டப்பட்ட யுரேனியம்-235 ஐசோடோப்பு பயன்படுகிறது[3]. காண்டு அணு உலை எனப்படும் கனடா டியூட்ரியம் அணு உலை போன்ற கனநீர் அணு உலையில் செறிவூட்டப்படாத இயற்கை யுரேனியம் ஒரு பொருத்தமான எரிபொருளாகப் பயன்படுகிறது.

யுரேனியம் -235 மிக அதிகமாக இருந்தபோது, யுரேனிய வரலாற்றின் அரிதான நிகழ்வுகளில் யுரேனியம் தாது இயற்கையாகவே அணுக்கரு பிளப்பில் ஈடுபட்டு இயற்கையான அணுக்கரு பிளவு உலைகளாக உருவாகியுள்ளது. யுரேனியம்-235 ஐசோடோப்பானது யுரேனியம்-238 ஐசோடோப்புடன் ஒப்பிடும்போது விரைவாக (அரை ஆயுள் காலம் 700 மில்லியன் ஆண்டுகள்) கதிரியக்கச் சிதைவை அடைகிறது. யுரேனியம்-238 ஐசோடோப்பு குறைவான (அரை ஆயுள் காலம் 4.5 பில்லியன் ஆண்டுகள்) என்ற சிதைவை அடைகிறது. எனவே, ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது காணப்படும் யுரேனியம்-235 ஐசோடோப்பின் அளவுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாக யுரேனியம்-235 ஐசோடோப்பு இருந்திருக்கும்.

மன்காட்டன் திட்டத்தின்போது சுத்திகரிக்கப்பட்ட நிலை இயற்கை யுரேனியமானது துபல்லாய் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இச்சொல் இன்னமும் கூட அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரின்போது "எக்சு-மெட்டல்" என்ற குறியீட்டுப் பெயரால் யுரேனியம் அழைக்கப்பட்ட்து.

இதேபோல், செறிவான யுரேனியம் ஒராலாய் எனவும் செறிவு குறைந்த யுரேனியம் தெப்லீட்டலாய் என்றும் குறிப்பிடப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nuclear Fuel Cycle Overview". World Nuclear Association. October 2014. Archived from the original on 2016-01-30. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  2. Oak Ridge National Laboratory (ed.). "Design Parameters for a Natural Uranium UO3- or U3O8-Fueled Nuclear Reactor" (PDF).
  3. Loveland, W.; Morrissey, D.J.; Seaborg, G.T. (2006). "Chapter 16 Nuclear Reactor Chemistry". Modern Nuclear Chemistry (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_யுரேனியம்&oldid=3441668" இலிருந்து மீள்விக்கப்பட்டது