இம்மானுவேல் தோங்கலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 ஆம் ஆண்டு செனீவா புத்தகக் கண்காட்சியில் இம்மானுவேல் தோங்கலா

இம்மானுவேல் பவுண்ட்சாகி தோங்கலா (Emmanuel Boundzéki Dongala) என்பவர் கொங்கோ குடியரசைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் நாவல் ஆசிரியர் ஆவார். 1941 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு வரை சிமன்சு ராக்கிலுள்ள பார்டு கல்லூரியில், இயற்கை அறிவியல் துறையில் ரிச்சர்ட் பி. பிசர் இருக்கை தலைவராக இருந்தார்[1].

1997 ஆம் ஆண்டு பிராசாவில்லேவிலுள்ள மேரியன் நிகவுவபி பல்கலைக்கழகத்தின் கல்வித் தலைவராக இருந்தபோது கொங்கோ குடியரசில் போர் வெடித்தது. பார்து கல்லூரியின் தலைவர் லியோன் போட்சுடின் அகதிகளாக வந்த பல பேராசிரியர்களுக்கு உதவி செய்தார். தோங்கலாவிற்கு அமெரிக்கன் கல்லூரியில் வேதியியல் கற்பிக்கும் வேலையை வழங்கினார். முப்பரிமாண வேதியியல், சமச்சீரற்ற வேதித் தொகுப்பு வினைகள், சுற்றுச்சுழல் நச்சுயியல் போன்ற பாடங்களில் ஒரு வேதியியலாளராக தோங்கலா நிபுணத்துவம் கொண்டவராக இருந்தார்.

யான்னி மேடு டாக் (Johnny Mad Dog), லிட்டில் பாய்சு கம் பிரம் தி சிடார்சு (Little Boys Come from the Stars) போன்ற விருது பெற்ற நாவல்களை இவர் எழுதியுள்ளார். நவீன ஆப்பிரிக்க கவிதைகளுக்கான பென்குயின் புத்தகத்தில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. கலைத்துறையில் சிறந்த பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் கக்கென்யெய்ம் உறுப்பினர் விருதை இவர் பெற்றார். யான்னி மேடு டாக் என்ற இவரது நாவலை அடிப்படையாகக் கொண்டு யீன்-சிடீபன் சவைர் 2008 ஆம் ஆண்டு பிரெஞ்சு-லைபீரிய திரைப்படம் ஒன்றை இயக்கினார். கிறிசுடோபர் மைனி, டெய்சி விக்டோரியா வேண்டி, தேக்பெக் டிவெக், பேரி செர்னோ, முகமது செசாய், யோசப் துவோ ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

பிரான்சு நாட்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் செசாம் பிரிக்சு இலக்கிய விருது 2004 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது[2]. 2017 ஆம் ஆண்டு பித்தோவானுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வயலின் வித்தகர் ரோடோல்ப் கிருட்சரின் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்ட நூல் ஒன்றை வெளியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://simons-rock.edu/_documents/sr-2014-spring-magazine.pdf
  2. "Cezam Prix Littéraire Inter CE". பார்க்கப்பட்ட நாள் 2011-07-11.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்மானுவேல்_தோங்கலா&oldid=2944807" இலிருந்து மீள்விக்கப்பட்டது