இன்டர்‌ஸ்டெலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்டர்‌ஸ்டெலர்
சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்பு
கதை
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுஹொயிட் வேன் ஹொய்டெமா
படத்தொகுப்புலீ ஸ்மித்
விநியோகம்
வெளியீடுநவம்பர் 6, 2014 (2014-11-06)(ஐக்கிய இராச்சியம்)
நவம்பர் 7, 2014 (அமெரிக்கா)
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$165 மில்லியன்
மொத்த வருவாய்$623.4 மில்லியன்

இன்டர்‌ஸ்டெலர் (ஆங்கில மொழி: Interstellar) 2014ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டுத் அறிபுனைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கிறிஸ்டோபர் நோலன் என்பவர் இயக்க, மேத்திவ் மெக்கானாகே, ஆன் ஹாத்வே, ஜெசிகா சாஸ்டெய்ன், பில் இர்வின், எல்லேன் பூர்ஸ்திய்ன், மைக்கேல் கெய்னே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை எம்மா தாமஸ், கிறிஸ்டோபர் நோலன் மற்றும் லிண்டா ஒப்ஸ்ட் தயாரிக்க, பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனங்கள் விநியோகம் செய்கின்றது. இந்த திரைப்படம் நவம்பர் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு இயற்பியல் மற்றும் அறிவியல் ஆலோசனை வழங்கியவர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கிப் தோர்ன்.

கதைச்சுருக்கம்[தொகு]

2067 ஆண்டில், பயிர் கருகல், புழுதிப்புயல் ஆகியன மனிதகுலத்தின் உயிர்வாழ்வை அச்சுறுத்துகின்றன. ஜோசப் கூப்பர் என்பவர் உழவு செய்துவரும் ஓர் பொறியாளர் மற்றும் முன்னாள் நாசா வலவர், அவரது மாமனார் டொனால்ட், அவரது 15 வயது மகன் டாம் கூப்பர் மற்றும் 10 வயது மகள் மர்ஃப் (எ) மர்ஃபி கூப்பர் ஆகியோருடன் வசிக்கிறார்.

ஒரு நாள் புழுதிப் புயலுக்குப் பிறகு, மர்பியின் படுக்கையறையில் விசித்திரமான தூசி வடிவங்கள் தோன்றுகின்றன; அவள் இவ்வடிவங்களுக்கு ஒரு 'பேய்' தான் காரணம் என கூறுகிறாள். கூப்பர் இறுதியில் அவை புவியீர்ப்பு மாறுபாடுகளால் உருவான வடிவங்களே எனவும் அவை இரட்டை இலக்கக் குறியீட்டில் புவிநிலை ஆள்கூறுகளைக் குறிக்கின்றன என்றும் கண்டறிகிறார். கூப்பர் அக்குறியீடுகளை பின்பற்றி செல்லுகையில், அவை  பேராசிரியர் ஜான் பிராண்ட் தலைமையிலான இரகசிய நாசா தளத்திற்கு கொண்டுசேர்த்தன.

48 ஆண்டுகளுக்கு முன்பு, அறியப்படாத உயிரினங்களால் சனி கோளுக்கு அருகில் ஒரு புழுத்துளை நிலைநிறுத்தப்பட்டு, கார்கஞ்சுவா என்ற கருந்துளைக்கு அருகில் அமைந்துள்ள,  உயிர்கள் வாழ சாத்தியமுள்ள பன்னிரண்டு கோள்களைக் கொண்ட ஓர் தொலைதூர விண்மீன் மண்டலத்திற்கு பாதையைத் திறந்தன. பன்னிரண்டு தன்னார்வலர்கள் புழுத்துளை வழியாக கோள்களை தனித்தனியாக ஆய்வு செய்ய அனுப்பப்பட்டனர்.  அவர்களுள் மூவர் மட்டும் (முனைவர். ஹ்யூக் மான், லாரா மில்லர் மற்றும் வூல்ஃப் எட்மண்ட்ஸ்) நேர்மறையான முடிவுகளை தெரிவித்தனர்.

அவர்களின் தரவுகளின் அடிப்படையில், பேராசிரியர் பிராண்ட் மனிதகுலத்தின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்த இரண்டு திட்டங்களை உருவாக்கினார். திட்டம் அ (Plan A)ல், விண்வெளிக்கு குடியிருப்புகளை செலுத்துவதற்கு ஈர்ப்பு உந்துவிசை கோட்பாட்டை உருவாக்குவதை உள்ளடக்குகிறது, திட்டம் ஆ (Plan B)ல்  5,000 உறைந்த மனித கருக்களை சுமந்து செல்லும் எண்ட்யூரன்ஸ் விண்கலத்தை ஏவுவதை உள்ளடக்கியது. எண்ட்யூரன்ஸ் வலவனாக கூப்பர் நியமிக்கப்படுகிறார். புறப்படுவதற்கு முன், கூப்பர் மனமுடைந்து போன மர்ஃபிக்கு அவர் திரும்பி வரும் காலத்தை ஒப்பிட்டுப் பார்க்க, அவரது கைக்கடிகாரத்தைக் கொடுக்கிறார்

புழுத்துளையைக் கடந்து சென்ற பிறகு, முனைவர் ரோமில்லி கருந்துளையை ஆய்வு செய்கிறார், அதே நேரத்தில் கூப்பர், முனைவர். டாய்ல் மற்றும் முனைவர் அமெலியா பிராண்ட் ஆகியோர் மில்லரின் கோளினை ஆய்வு செய்ய தரையிறங்கியில் சென்று இறங்கினர். மில்லரின் விண்கலத்தின் இடிபாடுகளைக் கண்டறிந்த பிராண்ட், தரையிறங்கிக்கு திரும்ப கூறிய கூப்பரின் கட்டளையை மீறி இடிபாடுகளைச் சரிபார்க்க செல்கிறார். இதனால் அங்கு ஏற்பட்ட  ஒரு இராட்சத அலையில் சிக்கி டாய்ல் உயிரிழக்கிறார். அவர்களது தரையிறங்கியின் பொறியில் நீர் நிரம்புகிறது. கார்காஞசுவாவின் அருகில் அக்கோள் இருந்ததால், அதன் அதி உயர் புவியீர்ப்பின் காரணமாக, காலம் கடுமையாக விரிவடைந்துவிடுகிறது. கூப்பர் மற்றும் பிராண்ட் எண்டியூரன்சுக்கு திரும்பியபோது  பூமியில் 23 ஆண்டுகள் கடந்துவிட்டன. கூப்பர் மீதமுள்ள எரிபொருளைப் பயன்படுத்தி மானின் கோளை அடைய முடிவு செய்கிறார், அங்கு அவர்கள் அவரை அறிதுயிலிலிருந்து எழுப்புகிறார்கள்.

இதேநேரம், தற்போது நாசாவில் பணிபுரியும் அறிவியலாளர் மர்ஃபி, பேராசிரியர் பிராண்ட் இறந்துவிட்டதாக செய்தி அனுப்புகிறார்.  திட்டம் அ (Plan A), ஒருபோதும் சாத்தியமில்லை என்பதை அவள் அறிந்து கொண்டதாகவும். 'பூமியில் எஞ்சியிருப்பவர்கள் அழிந்துவிடுவார்கள்' என்பதை பிராண்ட் மற்றும் கூப்பர் அறிந்தும் அவர்களை விட்டுசென்றதாக மர்பி குற்றம் சாட்டுகிறார். இதைக்கேட்ட  கூப்பர் தான் பூமிக்கு திரும்புவதாக அறிவிக்கிறார், அதே நேரத்தில் பிராண்ட் மற்றும் ரோமிலி நிரந்தரமான வசிப்பிடத்திற்காக மானின் கோளில் தங்கியிருப்பார்கள் என்று முடிவு செய்கிறார்.

மான் மற்றும் கூப்பர் அக்கோளை ஆய்ந்து பார்க்கும்போது, அது உயிர்கள் வாழத் தகுதியற்றது என்பதை மான் வெளிப்படுத்துகிறார். அவர் கூப்பரைக் கொல்ல முயல்கிறார். தான் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக பொய்யான தரவுகளை அனுப்பியதாக கூறுகிறார். பின்னர் அவர் ஒரு தரையிறங்கியை எடுத்துக்கொண்டு எண்டியூரன்சை நோக்கி செல்கிறார். இதற்கிடையில், மான் விட்டுச்சென்ற கண்ணியில் சிக்கி ரோமிலி உயிரிழக்கிறார்.

பிராண்ட் மற்றும் கூப்பர் மற்றொரு தரையிறங்கியில் அவரை பின்தொடர்கின்றனர். எண்டியூரன்சின் உள் செல்ல முயன்ற முனைவர் மான், அம்முயற்சியின் தோல்வியுற்று விபத்தில் கொல்லப்படுகிறார்.  அவ்விபத்து எண்டியூரன்சையும் கடுமையாக சேதப்படுத்துகிறது. ஒரு கடினமான முயற்சிக்கு பின்,  கூப்பர் சேதமடைந்த எண்டியூரன்சின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுகிறார்.

எட்மண்ட்சின் கோளை அடைய போதுமான எரிபொருள் இல்லாததால், அவர்கள் கருந்துளைக்கு மிக அருகில் சென்று, ஒரு  சூழ்ச்சியைப் பயன்படுத்துகிறார்கள், அப்போது கால விரிவால், மேலும் 51 ஆண்டுகள் ஆகிறது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு மற்றும் விநியோகம்[தொகு]

இந்த திரைப்படத்தை எம்மா தாமஸ், கிறிஸ்டோபர் நோலன் மற்றும் லிண்டா ஒப்ஸ்ட் தயாரிக்க, பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனங்கள் விநியோகம் செய்கின்றது.

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் நவம்பர் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நவம்பர் 5ஆம் திகதி பெல்ஜியம், பிரான்சு, மற்றும் சுவிச்சர்லாந்து நாடுகளிலும், நவம்பர் 7ஆம் திகதி ஐக்கிய இராச்சியம் திலும் வெளியிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்டர்‌ஸ்டெலர்&oldid=3604318" இலிருந்து மீள்விக்கப்பட்டது