இனப்பாகுபாட்டுக் குற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1973 ஆம் ஆண்டின் இனப்பாகுபாட்டுக் குற்றத்தை அடக்குவதற்கும் தண்டனை அளிப்பதற்குமான பன்னாட்டு மரபொழுங்குக்கு ஆதரவாகக் கையெழுத்து இட்டோர்: பங்காளர்கள் கடும் பச்சை நிறம், கையெழுத்து இட்டும் ஏற்புறுதி செய்யாதோர் இளம் பச்சை நிறம், உறுப்பினர் அல்லாதோர் சாம்பல் நிறம்.

இனப்பாகுபாட்டுக் குற்றம் என்பது, "ஆட்சி அதிகாரத்தைப் பேணிக்கொள்ளும் நோக்குடன், ஒரு இனக் குழுவினரால், பிற இனக் குழுவிற்கு அல்லது இனக் குழுக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் அடக்குமுறை, மேலாதிக்கம் என்பவை சார்ந்த நிறுவனமயப்படுத்திய ஆட்சிச் சூழலில் இழைக்கப்படும்", மனித குலத்துக்கு எதிரான பிற குற்றங்களை ஒத்த மனிதாபிமானம் அற்ற செயல்கள் என 2002 ஆம் ஆண்டின் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உரோம் சட்டம் வரைவிலக்கணம் கூறுகிறது. இது பொதுவாக 1948 ஆம் ஆண்டுக்குப் பின் தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனப்பாகுபாடு சார்ந்தது.

வரலாறு[தொகு]

இந்த இனப்பாகுபாட்டு முறைமை குறித்த குற்றச் சாட்டுகள் 1948 ஆம் ஆண்டு யூலை 12 ஆம் தேதியே ஐக்கிய நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இந்திய இனத்தவர் நடத்தப்படும் முறை குறித்துக் கவலை தெரிவித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலருக்கு எழுதிய கடிதம் ஒன்றை அப்போதைய இந்தியப் பேராளர் முனைவர். பத்மநாபபிள்ளை வெளியிட்டார்.[1] இந்த நீதியற்றதும் இனவாதம் சார்ந்ததுமான இந்த முறைமைக்குப் பன்னாட்டு அளவில் கண்டனங்கள் எழுந்ததுடன், தென்னாப்பிரிக்க அரசின் மீது அழுத்தங்களைக் கொண்டுவருவதற்கு, முறையான சட்டக் கட்டமைப்பு ஒன்று அவசியம் எனப் பலரும் வலியுறுத்தினர்.

1971 ஆம் ஆண்டில், இனப்பாகுபாட்டை ஒடுக்குவதற்கும், அதற்குத் தண்டனை அளிப்பதற்குமான ஒழுக்காற்று வரைவு ஒன்றை சோவியத் ஒன்றியமும், கினியாவும் கூட்டாகச் சமர்ப்பித்தன.[2] 1973 ஆம் ஆண்டில் இனப்பாகுபாட்டுக் குற்றத்தை அடக்குவதற்கும் தண்டனை அளிப்பதற்குமான பன்னாட்டு மரபொழுங்குக்கான உரையை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.[3] இதற்கு 31 நாடுகள் கையொப்பம் இட்டதுடன், 107 நாடுகள் பங்காளர்களாகவும் இருந்தனர்.

இவ்வாறாக, இனப்பாகுபாடு மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என ஏற்றுக்கொண்டபோது அதன் செயற்பாட்டு எல்லை தென்னாப்பிரிக்காவையும் தாண்டி விரிந்ததாக இருந்தது. பொதுவாக இனப்பாகுபாட்டுக் குற்றம் என்னும் தொடர் தென்னாப்பிரிக்காவுடன் தொடர்புடையதாக எண்ணப்பட்டபோதும், இத்தொடர் எந்த நாட்டிலும் இருக்கக்கூடிய இனப்பாகுபாட்டுக் கொள்கைகளைக் குறிக்கும்[4]

பின்னர் மேலும் எழுபத்தாறு நாடுகள் இந்த மரபொழுங்குக்கு ஆதரவாகக் கையொப்பம் இட்டன. ஆனாலும் பல நாடுகள் இதில் கையொப்பம் இடவோ அதனை ஏற்றுக்கொள்ளவோ இல்லை. கனடா, பிரான்சு, செருமனி, இசுரேல், இத்தாலி, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா என்பவை கையொப்பம் இடாத நாடுகளுள் அடங்குவன.[5] தாம் இதற்கு எதிராக வாக்களித்தது குறித்து விளக்கம் அளித்த ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதியான இளைய கிளரென்சு கிளைய்ட் பெர்கூசன், இந்த முறையில் இனப்பாகுபாடு மனித குலத்துக்கு எதிரான ஒரு குற்றமாக்கப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மோசமானவை, அதனால் மிகக் கவனமாக அவை விவரிக்கப்படுவதுடன், ஏற்கெனவே இருக்கும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் பொருள் கொள்ளப்பட வேண்டியன என்றும் கூறினார்[6]

குறிப்புகள்[தொகு]

  1. Pillai, Padmanabha (12 July 1948). "Letter from the representative of India to the Secretary-General concerning the treatment of Indians in South Africa". பார்த்த நாள் 10 October 2011.
  2. Olav Stokke and Carl Widstrand, தொகுப்பாசிரியர் (1973). Southern Africa Vol. 1: United Nations-Organization of African Unity Conference Oslo 9–14 April 1973. Scandinavian Institute of African Studies. 
  3. International Convention on the Suppression and Punishment of the Crime of Apartheid, retrieved on 10 October 2011.
  4. Morton, Jeffrey S. (2000). The International Law Commission of the United Nations. University of South Carolina Press. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57003-170-3. 
  5. List of signatories to the ICSPCA
  6. Statement by Ambassador Clarence Clyde Ferguson Jr. before General Assembly in explanation of vote on Apartheid Convention, 30 November 1973. Review of the U.N. Commission on Human Rights: Hearings before the Subcommittee on International Organizations and Movements of the House Foreign Affairs Committee (1974) p.58