இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956
இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956
சான்றுAct 30 of 1956
இயற்றியதுஇந்திய நாடாளுமன்றம்

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 (Hindu Succession Act, 1956) என்பது இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கிய சமூகத்தில் வாரிசுரிமை தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட்ட சட்டமாகும்.[1][2] இச்சட்டம் 17 சூன் 1956 அன்று நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் ஒரு சீரான மற்றும் விரிவான பரம்பரை மற்றும் வாரிசுரிமை முறையை வகுத்துள்ளது. இந்த சட்டத்தால் ஒரு இந்துப் பெண் வைத்திருக்கும் எந்தவொரு சொத்தும் அவளது முழுமையான சொத்துக்களாக இருக்க வேண்டும். மேலும் அதைப் பராமரிக்கவும் அப்பெண்ணின் விருப்பத்தின்படி அச்சொத்தை நிர்வகிக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் சில பகுதிகள் டிசம்பர் 2005 இல் இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம் திருத்தப்பட்டது.[3]

பொருந்தக்கூடிய தன்மை[தொகு]

இந்து சமயத்தின்படி இந்த சட்டம் பின்வருவனவற்றிற்கு பொருந்தும்: இந்து சமயத்தின் அனைத்துப் பிரிவினர் உள்ளிட்ட சமண, பௌத்த, சீக்கிய சமயத்தைச் சார்ந்த அனைவருக்கும் இந்து வாரிசுரிமைச் சட்டம் பொருந்தும்.

இந்து, பௌத்த, சமணம் அல்லது சீக்கிய சமயத்தின் கலப்பின பெற்றோர்களுக்கு, சட்டப்பூர்வமாக அல்லது சட்டவிரோதமாகப் பிறந்த குழந்தைகளுக்குப் பொருந்தும்

மேலும் இந்து சமயத்தைப் பின்பற்றும் பழங்குடி சமூகம் அல்லது இனக்குழுவினருக்கு இச்சட்டம் பொருந்தும்.

இந்து, பௌத்தம், சமணம் அல்லது சீக்கிய மதத்திற்கு மாற்றப்பட்ட அல்லது மீண்டும் தாய் மதம் மாறிய எந்தவொரு நபரும், இந்தச் சட்டத்தின் கீழ் இந்துவாகக் கருதப்படுவார். இருப்பினும் அவர் மதத்தால் இந்துவாக இல்லாவிட்டாலும், இந்தப் பிரிவில் உள்ள விதிகளின் கீழ் இந்தச் சட்டம் பொருந்தக்கூடிய ஒரு நபராக இருப்பர்.

பழங்குடியினர்[தொகு]

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 366, விதி 25இன், மேலே குறிப்பிட்டுள்ளபடி எந்தவொரு நபரின் மதம் இருந்தபோதிலும், எந்தவொரு பழங்குடியினருக்கும் இந்த சட்டம் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆண்களின் விஷயத்தில்[தொகு]

மரணமடையும் இந்து ஆணின் உயில் எழுதப்படாத சொத்து, முதலாம் வகுப்பிற்குள் உள்ள வாரிசுகளுக்கு முதலில் வழங்கப்படும். வகுப்பு I என வகைப்படுத்தப்பட்ட வாரிசுகள் இல்லை என்றால், இரண்டாம் வகுப்புக்குள் உள்ள வாரிசுகளுக்கு சொத்து வழங்கப்படும். இரண்டாம் வகுப்பில் வாரிசுகள் இல்லை என்றால், ஆணின் பரம்பரை உறவினர்களுக்கு சொத்து வழங்கப்படும். ஆணின் பரம்பரை மூலம் உறவினர்கள் இல்லை என்றால், அந்த சொத்து மனைவியின் பரம்பரை வழி உறவினர்களுக்கு வழங்கப்படும்.

சட்டத்தால் வரையறுக்கப்பட்ட இரண்டு வகை வாரிசுகள்[தொகு]

முதல் வகுப்பு வாரிசுகள்[தொகு]

  • மகன்கள், மகள்கள், விதவை மகள்/மருமகள், தாய் மற்றும் பேரக்குழந்தைகள்

ஒன்றுக்கு மேற்பட்ட உயிருடன் இருக்கும் பல மகன்கள் அல்லது மற்ற வாரிசுகள் இருந்தால், இறந்தவரின் சொத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு வழங்கப்படும். மேலும் விதவை மருமகள் மறுமணம் செய்து கொண்டால், அவள் வாரிசுரிமையைப் பெறத் தகுதியற்றவள்.

இரண்டாம் வகுப்பு வாரிசுகள்[தொகு]

இறந்தவரின் சொத்து பின்வரும் வரிசையில் வழங்கப்படுகிறது:

  • தந்தை
  • மகனின் மகன்
  • மகளின் மகள்
  • சகோதரன்
  • சகோதரி
  • அண்ணன் மகன்
  • சகோதரியின் மகன்
  • அண்ணன் மகள்

பெண்கள் சொத்தில்[தொகு]

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 இயற்றப்படுவதற்கு முன் அல்லது இயற்றிய பின்னர் கையகப்படுத்தப்பட்ட அனைத்து சொத்துக்களுக்கும் பெண்களுக்கு உரிமை அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு "வரையறுக்கப்பட்ட உரிமையாளர்" தகுதி நீக்கப்படுகிறது. இருப்பினும், 1956 இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்படும் வரை, மகள்களுக்கு, மகன்களுடன் சமமாக சொத்து பெற அனுமதிக்கப்படவில்லை. 2005ம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்துரிமை சமமாக வழங்குகிறது.

உயில் இல்லாத சொத்துகளின் வாரிசுகள்[தொகு]

உயில் எழுதாமல் இறந்தவரின் சொத்தை பெறுவதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் பெற்றவர்கள் விவரம். இறந்தவரின்:

  • மகன்கள் மற்றும் மகள்கள் (ஏற்கனவே இறந்தபோன மகன்கள்/மகள்களின் குழந்தைகள் உட்பட) மற்றும் கணவர்
  • தந்தை மற்றும் தாய்
  • தந்தையின் வாரிசுகள்
  • தாயின் வாரிசுகள்

சில விதிவிலக்குகள்[தொகு]

  • கொலை செய்த எந்தவொரு நபரும் பாதிக்கப்பட்டவரிடமிருந்து எந்தவொரு மரபுரிமை அல்லது சொத்துரிமை பெறத் தகுதியற்றவர்.
  • ஒருவர் இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலும் அவர் வாரிசுரிமைக்கு தகுதியுடையவர். இருப்பினும் மதம் மாறியவரின் சந்ததியினர், அந்த உறவினர் இறப்பதற்கு முன் இந்து மதத்திற்கு மாறாத வரை, அவர்கள் இந்து உறவினர்களிடமிருந்து வாரிசுரிமை பெற தகுதியற்றவர்கள்.

இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தம்[தொகு]

2005ஆம் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 திருத்தப்பட்டது. 2005 இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தத்தின்படி[3], ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் முன்னோர் சொத்தில் சம உரிமை பாகம் கிடைத்தது.

பெண்களுக்கான சொத்துரிமையில் தமிழகம் முன்னோடி[தொகு]

1989ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. இச்சட்டத் திருத்தமானது 26 மார்ச் 1989 அன்று முதல் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்குண்டு கூறியது. இருப்பினும் 26 மார்ச் 1989 அன்றைய நாளுக்கு முன்னர் திருமணமான பெண்களுக்கு பொருந்தாது எனக்கூறியது.[4]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "HINDU SUCCESSION ACT, 1956" (PDF). Archived from the original (PDF) on 1 August 2014. பார்க்கப்பட்ட நாள் 23 September 2014.
  2. இந்து இறங்குரிமைச் சட்டம், 1956
  3. 3.0 3.1 "THE HINDU SUCCESSION (AMENDMENT) ACT, 2005" (PDF). Archived from the original (PDF) on 19 March 2015. பார்க்கப்பட்ட நாள் 23 September 2014.
  4. குடும்பச் சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டு