உள்ளடக்கத்துக்குச் செல்

இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமயத்தில் வினை அல்லது கருமம் என்பது தொல்வினை, நுகர்வினை அல்லது ஊழ்வினை, வரும் வினை ஆகிய மூவகைப்பட்டது. இம்மூன்றும் சேர்ந்து ஒன்றாகப் பேசப்படும்பொழுது மூவினைத் தத்துவம் எனப்படும்.

நுகர்வினை[தொகு]

இது பிராரப்த கர்மம் என்று வடமொழியில் சொல்லப்படும் ஊழ்வினை. எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் கருமம் அல்லது வினைப்பயன் என்பர். இம்மூட்டையிலிருந்து ஆண்டவன் திருவருளால் இப்பிறவிக்காக ஒரு பிடியளவு நாம் பிறக்கும்போதே நம் கூட வருகிறது. வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பை அம்பு எய்தியவனே எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படி, நாம் பிறந்தபிறகு அதை அந்த ஆண்டவனும் ஒன்றும் செய்வதில்லையென்று அத்தனை இந்து சமய நூல்களும் கூறுகின்றன. இந்தப் பிடியளவு வினைதான் மாறாத வினை எனப்படுகிறது. இந்து சமய சாத்திரங்களும் புராணங்களும் எங்கெல்லாம் 'விதி வலிது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது' என்று சொல்கின்றனவோ அங்கெல்லாம் இந்த ஊழ்வினையைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பிரம்மாவால் நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்து உலக வழக்கு இவ்வினையைப் பற்றித்தான்.

ஒரு நபருக்கு வாய்க்கும் பெற்றோர், வாய்த்திருக்கும் அல்லது வாய்க்கப்போகும் கணவன்/மனைவி, வாய்க்கப்போகும் வாழ்க்கைச் சூழ்நிலை, பொதுவாக கஷ்ட வாழ்க்கையா சுக வாழ்க்கையா, மற்றும் ஆயுள், இதெல்லாம் ஊழ்வினையைப் பொறுத்தது என்பது இந்து சமய நூல்களின் கூற்று.

'விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது' என்று இராமன் இலக்குவனுக்குச் சொல்வதாக கம்பன் சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். 'ஊழிற்பெருவலி யாவுள' என்று வள்ளுவர் சொல்வதும் இவ்வினையைப்பற்றித்தான்.

தொல் வினை[தொகு]

ஒரு நபரின் முற்பிறப்புகளில் சேகரித்துக்கொண்ட செயல்களின் மூட்டையிலிருந்து ஒரு துளியளவு ஊழ்வினைக்காக இப்போதைய பிறவியில் அனுபவிப்பதற்காக எடுக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ளது இனி வரப்போகும் பிறவிகளுக்காக உள்ளது. இந்த எஞ்சியுள்ள மூட்டை தான் தொல் வினை எனப்படும். வடமொழியில் சஞ்சித கருமம் என்பர். மொத்த வினையின் இப்பகுதிதான் மிக அதிகமான பகுதி. ஆனால் இது மாறக்கூடிய விதி, மாற்றக்கூடிய விதி. 'விதியை மதியால் வெல்லலாம்' எனப் பெரியோர்கள் சொல்வது இத்தொல்வினையையே. காசிக்குப்போய் பாவத்தைத் தொலைக்கலாம் என்றும், கோயில் தரிசனம், தீர்த்த ஸ்நானம், பெரியோர் ஆசிகள் இவைகளால் பாவம் தொலையும் என்றும் இந்து மத நூல்கள் சொல்லும்போது இத்தொல்வினையில் உள்ளடங்கிய பாவத்தைத்தான் சொல்கின்றன. ஊழ்வினை அனுபவிக்கப்பட்டுத்தான் ஒழியும். ஆனால் தொல்வினை என்பது புண்ணியம் செய்வதாலும், ஆண்டவன் திருநாம ஜபத்தாலும் கரையும் என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'லிங்காஷ்டகம்' என்ற சிவபெருமான் தோத்திரத்தில் 'ஸஞ்சித பாப வினாசக லிங்கம்' என்று வெளிப்படையாகவே 'தொல்வினையை அழிக்கக்கூடிய பெருமான்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

'கோயில்களுக்குப்போய் திரும்பும் கடவுள் பக்தர்கள் அவர்கள் பிரயாணம் செய்த பேருந்து கவிழ்ந்ததால் உயிரிழந்தார்கள்' போன்ற சில செய்திகளைக் கேட்கும்போது 'புண்ணியம் செய்தவர்க்கு இதுதான் கைமேல் கண்ட பயனா' என்ற கேள்விகள் அடிக்கடி எழுவதுண்டு. செய்த புண்ணியம் தொல்வினையில்தான் பத்து வரவு செய்யப்படும்; ஊழ்வினையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற கூற்றுதான் இதற்கு பதில்.

வரும் வினை[தொகு]

வடமொழியில் ஆகாமிய கருமம் எனப்படும் வரும் வினை முழுவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்ற திருப்பாவை வரிகளில் தொல்வினையையும் வரும் வினையையும் தான் சொல்கிறாள் ஆண்டாள்.

இலக்கியத்தில் வினை[தொகு]

திருக்குறள்[தொகு]

திருவள்ளுவர் ஊழ்வினை என்று ஒரு அதிகாரமே பாடியுள்ளார்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும் - (திருக்குறள் எண் 380, ஊழ் அதிகாரம், அறத்துப்பால்)

பொருள்: ஊழைப்போல மிகுந்த வலிமையுள்ளவை எவை? ஊழ்வினையிலிருந்து தப்ப வேறு வழியை நாடிச் சென்றாலும் ஊழானது முற்பட்டு வந்து முதலில் நிற்கும் என்கிறார்.

சிலப்பதிகாரம்[தொகு]

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்ற கோட்பாட்டினை வழிமொழிகிறார்.

கம்பராமாயணம்[தொகு]

கம்பராமாயணத்தில் கம்பர் இராமன் வனவாசம் மேற்கொள்ள அவனின் ஊழ்வினையே காரணமென்கிறார்.

துணை நூல்கள்[தொகு]

  • D.S. Sharma. Primer of Hinduism. Reprinted by Bharatiya Vidya Bhavan, Mumbai. 1984
  • Swami Nikhilananda. Hinduism. George Allen and Unwin. London. 1958.

வெளி இணைப்புகள்[தொகு]