இந்து சமயத்தில் நேர்த்திக்கடன்
இந்து சமயத்தில் நேர்த்திக்கடன் என்பது பக்தர்கள், இறைவனிடன் வேண்டிக்கொண்ட வேண்டுதல்கள் நிறைவேறிய பின் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். இந்த நேர்த்திக்கடனானது பொருள்களைக் காணிக்கையாக செலுத்துவது, நிலங்களை இறைவன் பெயருக்கு எழுதிதருவது, ஆபரணங்களை செய்து தருவது, கால்நடைகளை கோயிலுக்கு தருவது எனப் பல்வேறு வடிவங்களில் செலுத்தப்படுகிறது.
பூ மிதித்தல், அக்னிச்சட்டி, எடுத்தல், அலகு குத்துதல், தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற தங்களை வருத்திக்கொள்ளும் சடங்குகளையும் நேர்த்திக்கடனாக செய்கின்றனர்.
பெரு தெய்வ வழிபாட்டில் நேர்த்திக்கடன்
[தொகு]பெரு தெய்வ வழிபாட்டில் நேர்த்திக் கடன்கள் பெரும்பாலும் உடல் துயருரா நிலையில் இருக்கின்றன. திருக்கல்யாணம் செய்வித்தல், அபிசேக ஆராதனை செய்வித்தல், ஆடை ஆபரணங்களை வணங்குதல், தங்க வெள்ளி கவசங்களை அணிவித்தல், வடைமாலை சாற்றதல் போன்ற பல நேர்த்திக்கடன்கள் உடல் துயருராத வண்ணம் உள்ளன.
பெரு தெய்வ நேர்த்திக்கடன்களில் பிரதட்சணம் செய்தல், கிரிவலம் வருதல், தேர் இழுத்தல் போன்ற சில நேர்த்திக்கடன்கள் உடலை வருத்தக்கூடியவையாக உள்ளன.
- காவடி எடுத்தல்
- கிரிவலம் வருதல்
- தங்கத் தேர் இழுத்தல்,
- திருக்கல்யாணம் செய்வித்தல் - இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்வித்தல்
- துலாபாரம் செலுத்துதல்
- பால்குடம் எடுத்தல்
- மடிப்பிச்சை ஏந்துதல்
- மாவிளக்கு எடுத்தல்
- முளைப்பாரி எடுத்தல்
வகைகள்
[தொகு]இவ்வகையான நேர்த்திக் கடன்களை மூன்றாக பிரித்துக் கொள்கின்றனர்.[1]
- உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள்
- பொருளாக அளி்க்கப்படும் நேர்த்திக் கடன்கள்
- உயிர்ப்பலியாக அளிக்கப்படும் நேர்த்திக் கடன்கள்
உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள்
[தொகு]சிறு தெய்வ வழிபாட்டிற்கென உள்ள சில நேர்த்திக் கடன்கள் உடலை வருத்தி செய்யப்படுபவனவாகும். சிறு மற்றும் பெரு தெய்வ வழிபாட்டிற்கு பொதுவான நேர்த்திக் கடன்களும் உள்ளன. மண்சோறு சாப்பிடுதல், அலகு குத்துதல், பால்குடம், காவடி எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன.[1]
- அரிவாளின் மேல் நடத்தல்
- அலகு குத்துதல்
- ஆணிச் செருப்பு அணிதல்
- முள் படுக்கை
- மார்பில் கத்தி போடுதல்
- தீச்சட்டி எடுத்தல்
பொருளாக அளி்க்கப்படும் நேர்த்திக் கடன்கள்
[தொகு]- அங்கமளித்தல் - கண்மலர், கை, கால் போன்ற உலோக அங்கங்களை செலுத்துதல்
- கால்நடை அளித்தல் - ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை கோயிலுக்கு அளித்தல்
- கோவில் மணி கட்டுதல் - வேண்டுதலுக்கு தக்கபடி சிறிய, பெரிய மணிகளை கோவிலில் கட்டுதல்
- வேல் வாங்கி செலுத்துதல் - வேல், அரிவாள் போன்ற ஆயுதங்களை கோயிலுக்கு அளித்தல்
- தொட்டில் கட்டுதல் - குழந்தை வரம் வேண்டி பால் மரங்களில் தொட்டில் கட்டுதல்.
- மண்பொம்மை செலுத்துதல் - மண்குதிரை, கன்றுடன் கூடிய பசு போன்ற மண்பொம்மைகளை கோயிலில் வைத்தல்
- உருவ பொம்மை செலுத்துதல் - தவழும் குழந்தை, ஆண்-பெண் பொம்மை போன்றவற்றை கோயிலில் செலுத்துதல்
உயிர்ப்பலியாக அளிக்கப்படும் நேர்த்திக் கடன்கள்
[தொகு]- நரபலி தருதல் - மனிதர்களை பலி தருதல்.
- கன்னிபெண் பலி -
- நவகண்டம் செலுத்துதல்
- சூல்பலி - கருவுற்று இருக்கும் ஆடு, மாடு, பன்றி போன்ற உயிர்களை பலியிடுதல்
- பலியிடுதல் - ஆடு மாடு கோழி போன்ற உயிர்களை வெட்டி பலியிடுதல். சில இடங்களில் பன்றி போன்ற விலங்குகளிலும் பலியிடப்படுகின்றன.
- குருதி கொடுத்தல்
- கோழி குத்துதல் - கோழியை கோயிலின் முன்னுள்ள வேலில் உயிரோடு குத்துதல்.
காலக்கெடு
[தொகு]இந்து சமயத்தில் எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன. இவற்றை நிறைவேற்ற எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படுவதில்லை.[2] கோரிக்கைகள் நிறைவேறியதும் நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.
நேர்த்திக்கடனை மறத்தல்
[தொகு]நேர்த்திக்கடனை வேண்டிக்கொண்டு கோரிக்கை நிறைவேறிய பிறகு அலட்சியம் காரணமாக நேர்த்திக்கடனை செலுத்தாமல் இருந்தாலோ, மறந்து விடுபட்டாலோ துன்பம் நேரும் என நம்புகின்றனர். இவ்வாறு மறந்த நேர்த்திக்கடனால் எதிர்பாராத விபத்துகள் நேரலாம் என்றும், பொருள் தொலைந்து போகலாம் என்றும் நினைக்கிறார்கள். சிலருக்கு மறந்து போன நேர்த்திக்கடனை தெய்வம் கனவில் வந்து நினைவுபடுத்துவதாக நம்புகின்றனர்.
நேர்த்திக் கடன் செய்யத் தவறினால் ஒருவித தோசம் ஏற்படுவதாக சோதிட சாத்திரங்கள் கூறுகின்றது.[3] இந்த தோசம் நீங்க வேண்டியவரின் குலதெய்வம் கோயிலுக்கு ஐந்து பௌர்ணமிக்கு தொடர்ந்து சென்று வழிபட வேண்டும். அவர்களின் குல தெய்வ வழக்கப்படி பட்டு துணிகளை சாமிக்கு தந்து, பொங்கலிட்டு வழிபட்டால் தோசம் நீங்கும் என்கின்றனர்.
வினோதமான வழிபாடுகள்
[தொகு]சில குலதெய்வக் கோயில்களில் தலையில் தேங்காய் உடைத்தல், சவுக்கடி வாங்குதல் போன்ற விநோதமான சடங்குகளும் நேர்த்திக் கடனாகச் செய்யப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள பக்தர்கள் மேற்கொள்ளும் சில வினோதமான மற்றும் ஆச்சரியமூட்டும் நேர்த்திக்கடன்கள் பின்வருமாறு:
தலையில் தேங்காய் உடைத்தல்
[தொகு]- இடம்: கரூர் மாவட்டம், மகாலட்சுமி அம்மன் கோவில்.
- வினோதம்: ஆடிப் பெருக்கு திருவிழாவின் போது, பூசாரிகள் வரிசையாக அமர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களின் தலை மண்டை ஓட்டின் மீது தேங்காய்களை நேரடியாக அடித்து உடைப்பார்கள்.
- நம்பிக்கை: காயம் பட்டாலும், கோவில் பிரசாதமான திருநீறு மற்றும் மஞ்சளை பூசிக் கொண்டால் சில நாட்களில் சரியாகிவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது.
செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடி வாங்குதல்
[தொகு]- இடம்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கிராமங்கள்.
- வினோதம்: "சேத்தாண்டி வேடம்" என்ற வழிபாட்டின் கீழ், பக்தர்கள் தங்களது உடலில் சேறு மற்றும் கரியைப் பூசிக் கொள்வார்கள். பின்னர் மாட்டுத் தொட்டியில் உள்ள பழைய சாதத்தைத் துடைப்பத்தில் தொட்டு உறவினர்கள் தலையில் வைப்பதும், செருப்பை வாயில் கவ்வச் செய்வதும், தலையில் கால்களால் மிதிப்பதும் என வினோதமாக நேர்த்திக்கடன் செலுத்துவர்.
- நம்பிக்கை: இவ்வாறு செய்வதன் மூலம் மனிதர்களிடம் சகிப்புத்தன்மை பெருகும், சண்டை சச்சரவுகள் நீங்கும், மற்றும் உஷ்ண நோய்கள் வராது என்று நம்புகிறார்கள்.
சவுக்கடி வாங்குதல்
[தொகு]- இடம்: பெரம்பலூர் மாவட்டம் தேரணி செல்லியம்மன் கோவில் போன்ற கிராமத்து அம்மன் கோவில்கள்.
- வினோதம்: திருவிழா நாட்களில் ஆண்கள், பெண்கள் எனப் பலரும் கோவில் பூசாரி முன்னால் மண்டியிட்டு அமர்வார்கள். பூசாரி தடிமனான சவுக்கால் இவர்களின் முதுகில் பலமாக அடிப்பார்.
- நம்பிக்கை: பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் உடலை விட்டு நீங்கவும், நாள்பட்ட நோய்கள் குணமாகவும் சவுக்கடி வாங்குகிறார்கள்.
மிளகாய் பொடி அபிஷேகம்
[தொகு]- இடம்: விழுப்புரம் மாவட்டம் தென்பசியார் கோவில் மற்றும் சில காளியம்மன் கோவில்கள்.
- வினோதம்: காளி அல்லது அம்மன் வேடமிடும் சாமியாடிகளுக்கு மற்றும் கடுமையான நேர்த்திக்கடன் வேண்டுபவர்களுக்குத் தலை முதல் கால் வரை காரசாரமான மிளகாய் அரைத்த சாறு அல்லது மிளகாய் பொடியை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.
- ஆச்சரியம்: இவ்வளவு காரமான மிளகாய் உடலில் பட்டாலும், பக்தர்களின் கண்களிலோ அல்லது உடலிலோ எந்தவொரு எரிச்சலோ பாதிப்போ ஏற்படுவதில்லை என்பது வியப்பிற்குரியது.
மயானக் கொள்ளை / சுடுகாட்டில் உணவு
[தொகு]- இடம்: வட ஆற்காடு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட அங்காள பரமேஸ்வரி கோவில்கள்.
- வினோதம்: மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் பக்தர்கள் கொடூரமான காளி, சுடுகாட்டு சாம்பல் பூசிய அகோரிகள் போல வேடமிட்டு நள்ளிரவில் மயானத்திற்கு (சுடுகாட்டிற்கு) ஓடுவார்கள். அங்கு சுடுகாட்டு மண்ணில் அல்லது எரியும் பிணங்களின் சாம்பல் அருகே உணவுப் பொருட்களைப் படைத்து, அதனை அங்கேயே சாப்பிட்டு நேர்த்திக்கடனை முடிப்பார்கள்.
மிளகாய் பொடி கரைசலை உடலில் ஊற்றுதல்
[தொகு]- இடம்: சென்னை, கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில்.
- வினோதம்: ஆடி திருவிழா அன்று தீவினை அகழ்வதற்காக விரதம் இருந்த பக்தர்கள் மிளகாய் பொடி கரைசலை உடலில் ஊற்றி நிறுத்திக் கடன் செலுத்துகின்றனர்.[4]
கூவாகம் அரவான் திருவிழா
[தொகு]- இடம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவில்.
- வினோதம்: மகாபாரதக் கதையின் அடிப்படையில், அரவான் என்ற தெய்வத்திற்குப் பலியாகப் போகும் ஒரு இரவிற்காக, தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகள் அனைவரும் அரவானைத் தங்கள் கணவனாக ஏற்று தாலி கட்டிக் கொள்கிறார்கள். அடுத்த நாள் அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும், அவர்கள் தங்கள் தாலியை அறுத்து, வளையல்களை உடைத்து விதவைக் கோலம் பூணுகிறார்கள்.
ஆதாரங்கள்
[தொகு]- 1 2 சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் தமிழாய்வு தளம்
- ↑ "நேர்த்திக் கடனை எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்?". தினமலர்.
- ↑ "நேர்த்திக் கடன் செய்ய மறந்தவர்களா நீங்கள்?". Dinamani.
- ↑ தினமலர் நாளிதழ்- திருச்சி பதிப்பு- 27.07.2026, பக்கம் - 12.