இந்திரா தேவி சௌதுராணி
இந்திரா தேவி சௌதுராணி | |
---|---|
இரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்திரா தேவி, 1881 | |
பிறப்பு | கொல்கத்தா, இந்தியா | 29 திசம்பர் 1873
இறப்பு | 12 ஆகத்து 1960 கொல்கத்தா, இந்தியா | (அகவை 86)
தேசியம் | இந்தியன் |
பணி | இசைக்கலைஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் |
வாழ்க்கைத் துணை | பிரமாதா சௌத்ரி |
இந்திரா தேவி சௌதுராணி (Indira Devi Chaudhurani) ( 1873 திசம்பர் 29 - 1960 ஆகத்து 12) இவர் ஓர் இந்திய இலக்கிய பிரமுகரும், எழுத்தாளரும் மற்றும் இசைக்கலைஞருமாவார். தாகூர் குடும்பத்தில் பிறந்த இந்திரா, சத்யேந்திரநாத் தாகூர் மற்றும் ஞானதாநந்தினி தேவி ஆகியோரின் இளைய குழந்தையும் மற்றும் சுரேந்திரநாத் தாகூரின் தங்கையுமாவார். இவரது மாமா இரவீந்திரநாத் தாகூரின் பல பாடல்களுக்கு இசையமைத்தற்காக இவர் குறிப்பிடப்படுகிறார். இவரது இலக்கியப் படைப்புகளுக்கு இரவீந்திரநாத் தாகூர் மிகவும் உதவியாக இருந்தார். இந்திரா தேவி சௌதுராணி 1960இல் இறந்தார். [1]
சுயசரிதை
[தொகு]இந்திரா தேவி 1873 திசம்பர் 29 அன்று சத்யேந்திரநாத் தாகூர் மற்றும் ஞானதாநந்தினி தேவி ஆகியோருக்கு பிஜாப்பூரில் பிறந்தார் . இவர் தனது குழந்தைப் பருவத்தை இங்கிலாந்தில், பிரைட்டனில் கழித்தார். இந்த காலத்தில் இவரும் இவரது சகோதரர் சுரேந்திரநாத்தும் ஒரு வருடம் கழித்து இவர்களுடன் இணைந்த மாமா இரவீந்திரநாத் தாகூருடன் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இவரது ஆரம்பக் கல்வி இந்தியாவில், சிம்லாவில் உள்ள ஆக்லாந்து மாளிகையிலும், கொல்கத்தாவில் உள்ள லோரெட்டோ கான்வென்ட்டிலும் இருந்தது. 1892ஆம் ஆண்டில், இந்திரா கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியில் முதல் வகுப்பு கௌரவத்துடன் பட்டம் பெற்றார்.
படைப்புகள்
[தொகு]இந்திரா பெங்காலி மொழியில் ஜான் ரஸ்கின் படைப்புகளையும், பிரெஞ்சு இலக்கியத்தையும் மொழிபெயர்த்தார். மேலும் இரவீந்திரநாத்தின் படைப்புகளின் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்புகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்திரா பெண்கள் பிரச்சினைகளுக்கு வலுவான ஆதரவாளராக இருந்தார். மேலும் இந்தியாவில் பெண்களின் நிலைப்பாடு குறித்து பல படைப்புகளை எழுதியுள்ளார்.
இசை ஆர்வம்
[தொகு]இந்திரா ஆரம்பகாலத்தில் இசையில் ஆர்வம் காட்டினார். கின்னரப்பெட்டி(பியானோ), வயலின்மற்றும் சித்தாரில் தேர்ச்சி பெற்றார். மேலும் இந்தியப் பாரம்பரிய இசை மற்றும் மேற்கத்திய செந்நெறி இசை ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்றார். பின்னர் டிரினிட்டி இசைக் கல்லூரியில் சான்றிதழ் பெற்றார். தாகூரின் கிட்டத்தட்ட இருநூறு பாடல்களுக்கு இவர் இசை அமைத்ததாக குறிப்பிடப்படுகிறது. இவர் பிரம்மசங்கீதத்தின் இசையமைப்பாளராக இருந்தார். மேலும் இசை குறித்த பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பிற்கால வாழ்க்கையில், விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தில் சங்கீத பாவனையை நிறுவுவதில் இந்திரா தேவி முக்கிய பங்கு வகித்தார். மேலும் சிறுகு காலத்திற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றினார்.
கௌரவம்
[தொகு]இந்திராவுக்கு 1944இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புவனமோகினி தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் 1957ஆம் ஆண்டில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் தேசிகோட்டம் (டி.லிட்.) பட்டம் பெற்றார்., 1959இல் ரவீந்திர விருதுக்கான தொடக்க விருதும் பெற்றார். இந்திரா 1899இல் பிரமாதா சவுத்ரி என்பவரை மணந்தார்.