இந்திரகாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

Old book bindings.jpg

இந்திரகாளி[1] என்பது தமிழிலுள்ள பாட்டியல் நூல்களுள் பழமையானதாகிய பன்னிரு பாட்டியல் என்னும் நூல் இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலினைச் சுட்டி அதிலிருந்து பல நூற்பாக்களைத் தொகுத்துள்ளது. வச்சணந்திமாலை என்னும் பாட்டியல் நூலின் உரை இந்திரகாளி என்னும் ஒரு பாட்டியல் நூலைக் குறிப்பிடுகிறது. நவநீதப்பாட்டியல் உரையும் இந்நூலைக் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர்[தொகு]

இலக்கண நூலிலும் இலக்கண உரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்திரகாளியம், இந்திரகாளி எனப்படும் நூலைச் சேர்ந்தனவாக அமைந்துள்ள நூற்பாக்களின் இயல்பையும், பொருளமைதியையும் நன்கு ஆராய்வோர் இவ்விரு பெயர்களும் ஒருவர் செய்த பாட்டியல் நூலையே குறிக்கும் எனக் கருதுகின்றனர். இதன் ஆசிரியர் இந்திரகாளியார் எனப்படுவார். நவநீதப்பாட்டியல் உரையில் அமைந்துள்ள "இந்திரகாளியனார் உரைத்தபடி" என்னுந்தொடர்கொண்டு இந்நூலாசிரியர் இந்திரகாளியனார் என்று வழங்கப்பட்டமையினை உணரலாம். இந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.

சிறப்பு[தொகு]

பன்னிரு பாட்டியலில் 34 நூற்பாக்களும், வெண்பாப் பாட்டியல் உரையில் 6 நூற்பாக்களும், நவநீதப் பாட்டியல் உரையில் 5 நூற்பாக்களும் இடம்பெற்றுள்ளன. அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் குறிப்பிடும் இந்திரகாளியமும் இந்நூலும் வேறெனக் கருதுவோர் இந்நூலாசிரியர் சமணம் என்று கூறுகின்றனர். தமிழில் பாட்டியல் நூல்கள் தோற்றங்கொண்டபின் அவை இரு பிரிவுகளாகப் பிரிந்த மையலாயின. அவற்றுள் ஒரு பிரிவு அகத்தியர் நெறி என்றும், மற்றொரு பிரிவு இந்திரகாளியார் நெும் வழங்கப்பட்டன.

நவநீதப் பாட்டியல், சிதம்பரப்பாட்டியல் ஆகிய பாட்டியல் நூல்கள் அகத்தியர் நெறியையும், வச்சணந்திமாலை இந்திரகாளியார் நெறியையும் பின்பற்றி அமைந்தன. இந்நூல் பாட்டியல் நூல்கள் வரிசையில் முற்பட்டதன்றாயினும், பாட்டியலில் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்து, அந்நெறியில் வச்சணந்திமாலை என்னும் பிறிதொரு பாட்டியல் நூல் வழிநூலாகத் தோன்றுவதற்குக் காரணமாக விளங்கியுள்ளது. இந்நூலாசிரியர் பெயரிலுள்ள இந்திரர் என்னும் பெயர் கொண்டும், இந்நூல் வச்சணந்தி மாலை என்னும் நூலுக்கு முதல் நூலாக இருப்பதுகொண்டும் இவர் சமணராவார் என்று சிலர் கருதுகின்றனர். அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் இந்திரகாளியமும் இந்நூலும் ஒருவரே செய்தன எனக் கருதுவோர் இவற்றின் ஆசிரியர் சமணர் என்னும் கருத்தை உடன்படாமல், இவர் வைதிக நெறியினராவார் என்று கருதுகின்றனர். யாமளேந்திரர் என்னும் பெயர் இந்திரயாமளர் என்னும் தொடர் முன் பின்னாக மாறி அமைந்தது என்றும், இச்சொல்லின் தமிழ்வடிவமே இந்திரகாளி என்பதாகுமென்றும், யாமளை காளியின் பெயர்களுள் ஒன்றாகும் என்றும், இத்தமிழ்ப் பெயரால் நூல் இந்திரகாளி எனப்பட்டது என்றும் கூறுகின்றனர். இந்நூல் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்று கருதப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி மூன்று தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு : 53-3 திருவள்ளுவராண்டு 2017 மார்கழி - சனவரி 1987 பக்கம் - 657
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரகாளி&oldid=2322024" இருந்து மீள்விக்கப்பட்டது