இந்திய விடுதலை இராணுவ அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய விடுதலை இராணுவ அருங்காட்சியகம் (Swantratata Senani Museum), இந்தியாவின் தில்லி செங்கோட்டை வளாகத்தின் வடகிழக்கில், தில்லி சுல்தான் சேர் சா சூரியின் மகன் இஸ்லாம் ஷா சூரி கட்டிய சலீம்கர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ளது.

இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோட்டையின் ஒரு கட்டிடத்தை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம், 1992ல் கையகப்படுத்தி, இந்திய விடுதலை இயக்க வீரர்கள் மற்றும் இந்தியத் தேசிய இராணுவ வீரர்கள் நினைவாக அருங்காட்சியகத்தை 1995ல் நிறுவியது.

1916ல் பிரித்தானிய இந்திய அரசால் கைது செய்யப்பட்ட இந்திய தேசிய இராணுவ வீரர்களை இவ்வருங்காட்சியகம் அமைந்த கட்டிட சிறையில் காவலில் வைத்து, விசாரணை செய்து தண்டனை வழங்கப்பட்டது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் பொருட்டும், இந்திய தேசிய இராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையிலும், 1995ல் சலீம்கர் கோட்டையில், இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஒரு அருங்காட்சியகத்தை நிறுவியது.

இவ்வருங்காட்சியகத்தில் இந்திய தேசிய இராணுவ உடை அணிந்த சுபாஷ் சந்திர போஸ், கர்ணல் பிரேம் குமார் மற்றும் கர்ணல் குல்பக்ஸ் சிங் தில்லான் போன்ற தலைவர்களின் புகைப்படங்களும், இந்திய தேசிய இராணுவ வீரர்கள் அணிந்த உடைகளும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்குபற்றிய தலைவர்களின் புகைப்படங்களும், இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகளை விளக்கும் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Swantratata Senani Museum, Red Fort (New Delhi)

வெளி இணைப்புகள்[தொகு]