இந்திய ரூபாய் உண்மைத் தன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய ரூபாய்த் தாள்கள்

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் இந்திய ரூபாய் தாள்களில் பல பாதுகாப்பு தன்மைகள் உள்ளன. அவற்றுள் நூலிழை, மறைவு எண்கள், செதுக்கு உருவங்கள், பிற தன்மைகள் குறிப்பிடத்தக்கவை.

நூலிழை[தொகு]

  • 5, 10, 20, 50 ஆகிய ரூபாய் தாள்களில் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு சாளரம் உள்ள பாதுகாப்பு இழை பார்க்கக் கூடிய வகையில் இருக்கும்.
  • 100, 500 ரூபாய் தாள்களில் பார்க்கத்தக்க சாளரம் உள்ள பாதுகாப்பு இழையைக் கொண்டிருக்கும். இந்த இழை பாதி வெளியில் தெரிவதாகவும், பாதி உள்ளே பதிக்கப்பட்டதாகவும் உள்ளது. வெளிச்சத்தில் பார்க்கும் பொழுது இந்த இழை தொடர்ச்சியான ஒரு கோடாகத் தெரியும்.
  • 1000 ரூபாய் தாள்களைத் தவிர மற்றவற்றில் இந்த இழையில் “பாரத்” என்பது தேவநாகரி எழுத்து வடிவத்திலும், “ஆர்.பி.ஐ” என்பது மாறி மாறி தோற்றம் அளிக்கும்.
  • 1000 ரூபாய் தாளின் பாதுகாப்பு நூலிழையில் “ஆர்.பி.ஐ” என்பனவும் இருக்கும். இதற்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எழுத்துக்கள் எதுவுமில்லாமல் பார்க்க இயலாத முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு இழைகளைக் கொண்டிருந்தன.

மறைவு எண்கள்[தொகு]

  • மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு வலது பக்கத்தில் உள்ள செங்குப்பட்டைக் கோட்டில் அந்தந்த இலக்க மதிப்பிற்கு ஏற்றவாறு 20, 50, 100, 500, 1000 என்ற எண்கள் மறைந்து இருக்கும். இதை உள்ளங்கையில் பிடித்து அதன் மேல் 45 டிகிரி கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காணமுடியும். இல்லையேல் இந்த தோற்றம் வெறும் செங்குத்துக் கோடாகவே தெரியும். மகாத்மா காந்தி உருவப்படத்திற்கும், செங்குத்துப்பட்டை கோடுகளுக்குமிடையில் இந்த அமசம் இருக்கிறது.
  • 10, 20 ரூபாய் தாள்களில் “ஆர்.பி.ஐ” என்ற எழுத்துக்களும், தாள்களின் இலக்க மதிப்புகளும் உள்ளன. உருவப் பெருக்க கண்ணாடியின் வழியாக மட்டுமே இதைக் காணமுடியும்.

செதுக்கு உருவங்கள்[தொகு]

  • 10 ரூபாய் தாளைத் தவிர மற்றவற்றில் நீர் குறியீட்டுச் சாளரத்துக்கு இடப்புறத்தில் ஒரு செதுக்கு உருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தோற்றம் பல்வேறு இலக்க மதிப்பு தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது. 20 ரூபாய் தாளில் செங்குத்து நீள் சதுரம், 50 ரூபாய் தாளில் சதுரம், 100 ரூபாய் தாளில் முக்கோணம், 500 ரூபாய் தாளில் வட்டம், 1000 ரூபாய் தாளில் சாய் சதுரம் உள்ளது. இவை பார்வையில்லாதவர்கள் அத்தாளின் இலக்க மதிப்பை அறிய உதவுகிறது.
  • மகாத்மா காந்தி உருவப்படம், ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம், இடப்பக்கத்தில் அசோகா சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் ஆகியன செதுக்கு உருவத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அதாவது, தூக்கலான அச்சுக்களில் 20, 50, 100, 500, 1000 ஆகிய ரூபாய் தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன.

பிற தன்மைகள்[தொகு]

  • ரூபாய் தாள்களின் எண்ணிடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது. தாள்களில் ஒளி இழைகளும் உள்ளன. புற ஊதாக்கதிர் விளக்கின் ஒளியில் பார்க்கும் போது இவ்விரண்டையும் காணலாம். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்களில் ரூ.500 மற்றும் ரூ.1000 தாளின் மேல் (இலேசான மஞ்சள், இலேசான ஊதா, பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத் திட்டங்களில் ஆகியவை) பார்வை தோற்றத்தில் மாறுபடும். அதாவது நிறம் மாறித் தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத்தாள்கள் கிடைமட்டமாக பிடித்துப் பார்த்தால் இந்த இலக்கங்களின் வண்ணங்கள் பச்சையாகவும், ஒரு கோணத்தில் பிடித்துப் பார்த்தால் நீல நிறமாகவும் தோன்றும்.

தண்டனை[தொகு]

  • மேல் குறிப்பிட்ட தன்மைகள் இல்லாத ரூபாய் தாள்கள் கள்ள ரூபாய்த் தாள்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவை துல்லியமாகப் பரிசோதிக்கப்படுகின்றன. கள்ள ரூபாய்த் தாள்களை அச்சிடுவதும், புழக்கத்தில் விடுவதும் இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 489-ஏ ல் இருந்து 489-இ வரை உள்ள விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அபராதம், சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

உசாத்துணை[தொகு]