இந்திய செய்தித்தாள் பதிவாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் போன்றவற்றிற்கான பதிவுகளை இந்திய செய்தித்தாள் பதிவாளர் செய்து தருகிறார். மேலும் இதழ்களின் மேலான கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் புதிதாக செய்தித்தாள், கால இதழ்கள் தொடங்க விரும்புபவர்கள் அவற்றைப் பதிவு செய்து முன்னுரிமை பெற வேண்டும்.

தலைப்பு பெயர் தேர்வு[தொகு]

புதிய இதழ்களைத் தொடங்க விரும்புபவர்கள் இதழுக்கு வைக்க விரும்புகின்ற பெயருடன் சில மாற்றுப் பெயர்களையும் குறிப்பிட்டு குறைந்தது ஐந்து பெயர்களை வரிசைப்படி தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

பின் அதற்கான விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பதாரர், உரிமையாளர், முகவரி, கல்வித்தகுதி, தொழில் , வருமானம் , தேர்வு செய்த இதழின் பெயர்கள், மொழி, வெளிவரும் கால அளவு (நாள், வாரம் , வாரமிருமுறை, மாதமிருமுறை, மாதம் , காலாண்டு), வெளியீட்டு முகவரி, அச்சிடுபவர், அச்சக முகவரி, தொடர்பு தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்தை வெளியீட்டாளர் சார்ந்துள்ள மாவட்ட நீதிபதி, துணை வட்டார நீதிபதி, பெருநகர நீதிபதி என அந்தப் பகுதிக்கு ஏற்புடைய ஒருவரிடம் கொடுக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட நீதிபதி அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து அதற்கான அனுமதி அளிக்கப்படுவதற்கு முன்பு புதிதாக வெளியிட விரும்பும் இதழின் பெயரில் அதே மொழியில் அல்லது வேறு மொழியில் இதழ் பதிவு செய்யப்பட்டு வெளிவருகிறதா என்பதை அறிய அந்தப் படிவத்தைக் கையெழுத்திட்டு புதுடெல்லியிலிருக்கும் இந்திய செய்தித்தாள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.

இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இந்திய செய்தித்தாள் பதிவாளர் அலுவலகம் வெளியீட்டாளர் குறிப்பிட்டுள்ள இதழ்களின் பெயர்களை ஆய்வு செய்து, அந்தப் பெயர்களில் வேறு இதழ்கள் இல்லை என்றால் அனுமதியளிக்கலாம் என பரிந்துரை செய்கிறார். விண்ணப்பதாரர் அளித்த ஐந்து பெயர்களும் முன்பே பதிவு செய்யப்பட்டிருந்தால் மாற்றுப் பெயர்களைத் தரும்படி கோருகிறார்.

உறுதிமொழிப் படிவம்[தொகு]

இந்திய செய்தித்தாள் பதிவாளர் அலுவல்கத்தில் இருந்து பெயர் சரிபார்த்துப் பெற்ற தேர்வின்படி இதழ் தொடங்க மாவட்ட நீதிபதி அனுமதி அளிக்கிறார். இந்த அனுமதியை வழங்குவதற்கு முன்பாக இதழ் வெளியிட விரும்பும் உரிமையாளரிடம் உறுதிமொழிப் படிவம் ஒன்றைக் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்கிறார்.

வெளியீட்டு விதிமுறை[தொகு]

மாவட்ட நீதிபதியின் அனுமதியைப் பெற்ற இதழின் வெளியீட்டாளர் குறிப்பிட்ட காலத்திற்குள் இதழை அச்சிட்டு வெளியிட வேண்டும். நாளிதழ்கள் , வார இதழ்கள், வாரம் இருமுறை மற்றும் வாரம் மும்முறை போன்ற கால அளவுகளுடைய இதழ்கள் அனுமதி பெற்று ஆறு வார காலத்திற்குள்ளும், மற்ற கால இதழ்களுக்கு மூன்று மாதங்களுக்குள்ளும் அச்சிட்டு வெளியிடப்பட வேண்டும்.

அச்சிடுபவர், வெளியிடுபவர், வெளியிடும் காலம், அச்சிடும் இடம், வெளியிடும் இடம் ஆகியவற்றில் மாற்றமிருந்தால் மாவட்ட நீதிபதியிடம் புதிய உறுதிமொழி அளிக்க வேண்டும்.

விவரக்குறிப்பு[தொகு]

ஒவ்வொரு இதழிலும் இதழ் குறித்த விபரக் குறிப்புகளை வெளியிட வேண்டும். அதாவது, வெளியீட்டாளர், அச்சிடுபவர், ஆசிரியர், அச்சிட்ட இடம், வெளியிட்ட இடம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு இதழும் வெளியிட்ட 48 மணி நேரத்திற்குள் இந்திய செய்தித்தாள் பதிவாளர் அல்லது அவரால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

பதிவுக்கு விண்ணப்பித்தல்[தொகு]

முதல் இதழ் வெளியிட்ட பின்பு அந்த இதழைப் பதிவு செய்து கொள்ள அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்காணும் விபரங்களுடன் இந்திய செய்தித்தாள் பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  • இதழின் பெயர் சரிபார்ப்புக் கடித நகல்
  • அரசு பதிவு பெற்ற அதிகாரி ஒருவரால் சான்றளிக்கப்பட்ட மாவட்ட நீதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட உறுதிமொழிப்படிவ நகல்
  • வெளியிடப்பட்ட முதல் இதழ். அந்த இதழில் தொகுதி-1 இதழ்-1 என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • இதழுக்கு "அயல்நாட்டு கூட்டுறவு எதுவுமில்லை" என்று உறுதியளித்து அதில் அரசு ஒப்புதல் பெற்ற பொது வழக்கறிஞர் (Notary Public) ஒருவரிடம் கையொப்பம் பெற்ற படிவம்

குறிப்பு:

அச்சிடுபவர், அச்சிடுமிடம் மற்றும் வெளியிடுபவர் மற்றும் வெளியிடும் இடம் போன்றவை இருவேறு மாவட்டங்களாயிருப்பின் அந்த மாவட்டங்களின் நீதிபதியிடன் தனித்தனியாக உறுதிமொழி அளிக்கப்பட வேண்டும்.)

இவை அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் அந்த இதழைப் பதிவு செய்து அதற்கான பதிவு எண் ஒன்றையும் இந்திய செய்தித்தாள் பதிவாளர் வழக்குவார்.

மண்டல அலுவலகங்கள்[தொகு]

இந்திய செய்தித்தாள் பதிவாளர் அலுவலகத்தின் மண்டல அலுவலகங்கள் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]