இந்திய கருமுதுகு மரங்கொத்தி
இந்திய கருமுதுகு மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Chrysocolaptes festivus festivus) என்பது கருமுதுகு மரங்கொத்தியின் துணையினம் ஆகும்.[1] இப்பறவையானது நடு, தென்னிந்தியாவில் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]இந்திய கருமுதுகு மரங்கொத்தியானது புறாவை விடச் சிறியதாக சுமார் 29 செ.மீ. நீளம் இருக்கும். இதன் உச்சந்தலையும் கொண்டையும் ஆழ்ந்த சிவப்பாக இருக்கும். கழுத்தின் இரு பக்கங்களிலும் காணப்படும் வெண்மை முதுகு நோக்கிச் சென்று மேல் முதுகில் இணைந்து V போன்ற தோற்றம் அளிக்கும். கீழ் முதுகும் வாலும் கருப்பாக இருக்கும். இறக்கைகள் பொன்நிறம் தோய்ந்த ஆலிவ் நிறத்தில் இருக்கும். மார்பும் வயிறும் மஞ்சள் தோய்ந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். மார்பின் தூவிகள் கறுப்பு விளிம்பு பெற்று மார்பில் செதில்கள் அமைந்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும். பெண் பறவை தோற்றத்தில் ஆண் பறவையை ஒத்து உச்சந்தலையும் கொண்டையும் மட்டும் பொன்னிற மஞ்சளாக (ஆழ்ந்த சிவப்பிற்கு பதிலாக) இருக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
[தொகு]இந்திய கருமுதுகு மரங்கொத்தியானது நடு, தென்னிந்தியாவில் காணப்படுகிறது. தென்னிந்தியா முழுவதும் இலையுதிர் காடுகளிலும், புதர்க் காடுகளிலும், மரக் காடுகளிலும் காணப்படுகிறது.[2]
நடத்தை
[தொகு]இந்திய கருமுதுகு மரங்கொத்தியானது தனித்தோ அல்லது இணையாகவோ மரங்களை அலகால் தட்டியும், தரையிலும் இரை தேடித் திரியும். காட்டுத் தீயால் எரிந்த புல்வெளிகளில் இவை விரும்பித் திரிவது அறியப்பட்டுள்ளது. எறும்புகளையும், மரத்தை துளைக்கும் வண்டுகளையும் இது உணவாகக் கொள்கிறது. பொன்முதுகு மரங்கொத்தியைப் போல சிரிக்கும் குரலில் கிறீச் எனக் கத்தக்கூடியது.
இவை நவம்பர் முதல் ஏப்ரல் வரை இனப்பெருகம் செய்கின்றன. மரத்தின் காய்ந்த கிளைகளில் குடைந்த பொந்தில் ஒன்று அல்லது இரண்டு வெள்ளை முட்டைகளை இடும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Woodpeckers". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 11 August 2019.
- ↑ 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 332–333.