இந்திய கடற்கரைச் சமவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய கடற்கரைச் சமவெளிகள்[தொகு]

தீபகற்ப இந்தியாவின் மேற்குக் கிழக்குப் பகுதிகளில் கடற்கரைச் சமவெளிகள் உள்ளன. கடற்கரைகள் உடைபடாமல் நேராக இருக்கின்றன. கடலின் ஆழம் குறைவு. எனவே இயற்கைத் துறைமுகங்கள் அதிகம் இல்லை. பொதுவாக இச்சமவெளிகள் உயர்த்தப்பட்ட கடற்கரைகளாக உள்ளன. உயர்த்தப்பட்ட கடற்கரைகளும், அரிப்பாலான மேடையும், இக் கருத்தினை விளக்குவதற்கேற்ற சான்றுகளாக உள்ளன.

இந்தியக் கடற்கரை
செயற்கைக்கோள் எடுத்த இந்தியக் கடற்கரை

மேற்குக் கடற்கரைச் சமவெளி[தொகு]

இது அரபிக் கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஒரு குறுகிய நீண்ட சமவெளியாகும். நீண்டகாலமாக மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கும் அயல்நாடுகளுக்கும் இடையே வாணிபத் தொடர்பு இருந்து வந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையி்ன் மேற்குச் சரிவில் உற்பத்தி ஆகும் ஆறுகள் இச்சமவெளியில் பாய்கின்றன. அவற்றின் நீளம் குறைவு ஆனால் வேகம் மிகுதி. பல இடங்களில் நீர் மின் சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறுகள் கடலோடு சேரும் இடங்களில் பொங்கு முகங்கள் அமைந்துள்ளன. மேற்குக் கடற்கரைச் சமவெளிகளை 3 பகுதிகளாகப் பிரிக்கலாம்.

  1. வடக்கில் உள்ள கொங்கன் பகுதி
  2. மத்தியில் உள்ள கனரா பகுதி
  3. தெற்கில் உள்ள கேரளா பகுதி

கேரளா பகுதியில் கடற்கரை ஓரமாக பல உப்பங்கழிகள் உள்ளன.[1] அவற்றைக் காயல்கள் என்றும் கூறுவர். அவை உள்நாட்டுப் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. உப்பங்கழிகளை ஒட்டி மணல்மேடகள் காணப்படுகின்றன. மிகுந்த வெப்பநிலை உயாந்த ஈரப்பதம் இருப்பதால் உருமாறிய பாறைகள் தீவிரமாக வானிலை சிதைவடைகின்றது. இதன் விளைவாக மிகுந்த மணல் காணப்படுகின்றது.

கொங்கன் கடற்கரைப் பகுதி உடைபடாத உறுதியான நீண்ட குறுகிய கடற்கரை பகுதியாக உள்ளது. வடக்கில் நருமதை, தபதி, மாஹி, சபர்மதி போன்ற ஆறுகள் காம்பிய வளைகுடாவில் பொருள்களைப் படிவிக்கின்றன. அதனால் காம்பே வளைகுடாவின் ஆழம் குறைந்து சதுப்பு நிலங்கள் தோன்றியுள்ளன. பல இடங்களில் அகன்ற வண்டல் சமவெளிகள் வெளிப்பட்டுள்ளன. மலைச் சரிவிலிருந்து மிகுந்த வேகத்துடன் வரும் ஆறுகள் வண்டல் விசிறிகளை உருவாக்கியுள்ளன. தென்மேற்குப் பருவக்காற்று கடல் அலைகள் மிகுந்த மணலை கரைஒரங்களில் படிவடையச் செய்துள்ளது. எனினும் வண்டல் படிவுகள் தொடர்ச்சியாக இல்லை ஏனெனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கிளைக் குன்றுகள் பல இடங்களில் கடற்கரை வரை நீண்டு அமைந்துள்ளது.

கிழக்குக் கடற்கரைச் சமவெளி[தொகு]

இது கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விரிகுடா கடலுக்கும் இடையே அமைந்துள்ளது. இச் சமவெளி மேற்குக் கடற்கரை சமவெளியை விட அகலமானது. இப்பகுதியில் பாயும் ஆறுகள் பெரும் அளவில் வண்டலைப் படிவிப்பதால் இப்பகுதி வளமான பகுதியாகும். ஆறுகளின் முகத்துவாரத்தில் கழிமுகங்கள் உள்ளன. இதன் விளைவாக கப்பல்கள் கரையை நெருங்க முடிவதில்லை. தெற்கே செல்லச் செல்ல சமவெளியின் அகலம் அதிகமாகிறது. கிழக்குக் கடற்கரைச் சமவெளியினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

  1. தமிழ்நாடு கடற்கரைச் சமவெளி
  2. ஆந்திரக் கடற்கரைச் சமவெளி
  3. உத்கல் கடற்கரைச் சமவெளி

தமிழ்நாடு கடற்கரைச் சமவெளி[தொகு]

கலங்கரையின் மீதான, சென்னைக் கடற்கரை, 2013

இதனை சோழ மண்டலக் கடற்கரை என்றும் கூறுவர் இது அகன்றுள்ளது. அகலம் சுமார் 100 கி.மீ. வண்டல் படிவுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. படிகப் பாறைகளால் ஆன சிறு குன்றுகள் உள்நாட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன. இங்கு காவிரி கழிமுகம் அமைந்துள்ளது.

ஆந்திரக் கடற்கரைச் சமவெளி[தொகு]

இந்த சமவெளிப்பகுதிகள். ஆந்திர மாநிலத்தின் ஆறுகளான கிருசுணா, கோதாவரி கழிமுகங்களில் அமைந்து உள்ளன.

உத்கல் கடற்கரைச் சமவெளி[தொகு]

இதனை சர்க்கார் கடற்கரை என்றும் கூறுவர். இங்கு மகாநதி கழிமுகம் அமைந்துள்ளது. இது மிகவும் குறுகலானது. மகாநதி ஆற்றிற்கும், கிருஷ்ணா ஆற்றிற்கும் இடையே பல தீவுக் குன்றுகள் அமைந்துள்ளன. கடற்கரை ஓரமாக மாங்குரோவ் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன. கடற்கரைகளை ஒட்டியுள்ள பகுதியினை அரிப்பால் ஆன சமநிலமாக கருதலாம். பல இடங்களில் இந்த சம நிலத்தை வண்டல் மூடி இருந்த போதிலும் சில இடங்களில் பாறைகள் வெளிப்பட்டு காணப்படுகின்றன.

உசாத்துணைகள்[தொகு]

  • www.importantindia.com/12504/coastal-plains-of-india
  • en.wikipedia.org/wiki/Eastern_coastal_plains
  • en.wikipedia.org/wiki/Coastal_India
  • edugeneral.org/.../geography/coastal-plains-of-india

மேற்கோள்கள்[தொகு]