இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா எண்ணற்ற ஆறுகளையும், கால்வாய்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்கான வாய்ப்புகள் மிகுதியாய் உள்ளன. இந்திய நீர்வழிகளில் 15544 கி.மீ. நீளமுடைய வழிகள் போக்குவரத்திற்கு ஏற்றவையாக உள்ளன. இருப்பினும் இத்தொலைவில் 37 விழுக்காடே (5700 கி.மீ) போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்நாட்டு நீர்வழிகளின் பங்களிப்பு 0.15 விழுக்காடாக உள்ளது. இஃது ஐக்கிய அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் (21 விழுக்காடு) மிகக் குறைவாகும்.

இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம்[தொகு]

உள்நாட்டு நீர்வழிகளின் மேம்பாட்டிற்காக, 1985-இல் இயற்றப்பட்ட சட்டத்தின் படி, கப்பல் துறை அமைச்சகத்தின் (Ministry of Shipping) கட்டுப்பாட்டில் 27 அக்டோபர் 1986-இல் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் (Inland Waterways Authority of India) அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ளது. இதன் வட்டார அலுவலகங்கள் பாட்னா, கொல்கத்தா, குவகாத்தி, கொச்சி ஆகிய நகரங்களிலும், துணை அலுவலகங்கள் அலகாபாத், வாரணாசி, பகல்பூர், ஃபராக்கா, கொல்லம் ஆகிய நகரங்களிலும் அமைந்துள்ளன.

தேசிய நீர்வழிகள்[தொகு]

தேசிய நீர்வழி 1[தொகு]

கங்கை - பகீரதி - ஹூக்ளி ஆறுகள், அலகாபாத் முதல் ஹல்தியா வரை.
அமைப்பு-அக்டோபர் 1986.
நீளம்- 1620 கீ.மீ.
நிலை முனையங்கள்- ஹல்தியா, பகூர், ஃபராக்கா, பாட்னா.
மிதவை முனையங்கள்- ஹல்தியா, கொல்கத்தா, வைரத்துறைமுகம், கட்வா, திரிபேணி, பகராம்பூர், ஜங்கிபூர், பகல்பூர், செமாரியா, தோரியகஞ்ச், பாலியா, காசிபூர், வாரணாசி, சுனார், அலகாபாத்.

தேசிய நீர்வழி 2[தொகு]

பிரம்மபுத்திரா ஆறு சாடியா முதல் துப்ரி வரை
அமைப்பு-செப்டம்பர் 1982.
நீளம்- 891 கீ.மீ.
நிலை முனையங்கள்-பண்டு
மிதவை முனையங்கள்-துப்ரி, சோகிகோபா, தேஜ்பூர், சில்காட், திப்ருகார், சாம்குர்கி, போகிபில், சைக்கோவா, சாடியா.

தேசிய நீர்வழி 3[தொகு]

மேற்கு கடற்கரைக் கால்வாய், சம்பகரா மற்றும் உத்தியோகமண்டலக் கால்வாய்கள், கோட்டப்புரம் முதல் கொல்லம் வரை.
அமைப்பு-ஃபிப்ரவரி 1993.
நீளம்-205 கீ.மீ.
நிலை முனையங்கள்- ஆலுவா, வைக்கம், காயங்குளம், கோட்டபுரம், மாராடு, திரிகுன்னப்புழை, சேர்த்தலா, கொல்லம், ஆலப்புழை.

தேசிய நீர்வழி 4[தொகு]

கோதாவரி ஆறு ( பத்ராச்சலம் முதல் இராசமுந்திரி வரை ), கிருஷ்ணை ஆறு ( வாசிராபாத் முதல் விசயவாடா வரை ), காக்கிநாடா முதல் புதுச்சேரி வரை உள்ள கால்வாய்த் தொடர், கலுவெல்லி நீர்த்தேக்கம்
அமைப்பு- நவம்பர் 2008
நீளம்-1095 கீ.மீ.

தேசிய நீர்வழி 5[தொகு]

பிராமி ஆறு ( தால்சர் முதல் தாம்ரா வரை ), கிழக்குக் கடற்கரைக் கால்வாய் ( கியோங்காளி முதல் சர்பாட்டியா வரை ), மதாய் ஆறு ( சர்பாட்டியா முதல் தாம்ரா வரை ), மகாநதி ஆறு ( மங்கல்காடி முதல் பாரதீப் வரை ). அமைப்பு-நவம்பர் 2008
நீளம்-623 கீ.மீ.

தேசிய நீர்வழி 6[தொகு]

பராக் ஆறு ( லக்கிபூர் முதல் பங்கா வரை )
இவ்வழிக்கான திட்ட வரைவு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
நீளம்-121 கீ.மீ.

இத்தேசிய வழிகள் நீங்கலாக கோவா மாநிலத்தின் சூவாரி மற்றும் மாண்டோவி ஆறுகளிலும், கும்பார்சுவா கால்வாயிலும் ஓதங்களின் தயவால் நீர்வழிப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

பக்கிங்காம் கால்வாய்[தொகு]

முதன்மை கட்டுரை : பக்கிங்காம் கால்வாய்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இக்கால்வாய் தென்னிந்தியாவின் இன்றியமையாத நீர்வழியாய்த் திகழ்ந்தது. இது 1806-ஆம் ஆண்டு இன்றைய விழுப்புரம் மாவட்டம் வழியாக ஆந்திரத்தின் விசயவாடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைக்குமாறு அமைக்கப்பட்டது. 1876-77 ஆம் ஆண்டுகளில் அடையாறு மற்றும் கூவம் ஆறுகள் இக்கால்வாயுடன் இணைக்கப்பட்டன.

1878-ஆம் ஆண்டு இதற்கு 'பக்கிங்காம் கால்வாய்' என்ற பெயர் வழங்கப்பட்டது. இதன் மொத்த நீளம் 420 கி.மீ. ஆகும். அக்காலத்தில் போக்குவரத்திற்கு பெரிதும் பயன்பட்ட இக்கால்வாய் 1965-1966 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களால் பெரும் சேதம் அடைந்தது. மேலும் வடசென்னை அனல் மின் நிலையம் வெளியேற்றும் கழிவுகளும் இதனைப் பெரிதும் மாசுபடச் செய்கின்றன. இக்கால்வாய் தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.

இந்திய அரசின் கொள்கை[தொகு]

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து சிக்கனமானது; குறைவான எரிபொருள் செலவுடையது; மிகுதியான சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு ஏற்படுத்தாதது. எனவே, இந்திய நாட்டின் ஆறுகளும், ஏரிகளும், கால்வாய்களும் மேம்படுத்தப்படின், அவை மிகத் திறன் வாய்ந்த போக்குவரத்து வழிகளாய்த் திகழவல்லன என்னும் கொள்கையின் அடிப்படையில் இந்திய அரசு உள்நாட்டு நீர்வழிகளை மேம்படுத்திவருகிறது.

திட்ட வளர்ச்சி[தொகு]

உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துத்துறை ஒன்பதாம், பத்தாம் திட்டக்காலங்களில் இந்திய அரசிடமிருந்து பெருமளவு நிதியைப் பெற்றுள்ளது. இத்துறை தேசிய கடல்சார் மேம்பாட்டுத் திட்டத்தின் (National Maritime Development Plan) இன்றியமயாத அங்கமாய்த் திகழ்கிறது. 2004-ஆம் ஆண்டு, ஆசிய மேம்பாட்டு வங்கி இத்துறையில் ரூ.300 கோடி முதலீடு செய்துள்ளது. ஆறுகளின் வரைபடங்களைத் தயாரிக்கவும் , துறைசார் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் தேசிய உள்நாட்டு நீர்வழிப் பயணக்கழகம் ( National Inland Navigation Institute) பீகார் மாநிலம் பாட்னாவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்கத்தாவில் உள்ள நடுவண் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துக் கழகம் ( Central Inland Water Transport Corporation ) பல கலங்களைக் கொண்டுள்ளது. மேலும் இத்துடன் இணைந்த இராசபகன் கப்பல் பணிமனையில் ( Rajabagan Dock Yard ) படகுகளைக் கட்டுதலும், பழுதுநீக்கலும் நடைபெறுகின்றன.

பயணிகள் போக்குவரத்து[தொகு]

ஆற்றுவழிப் போக்குவரத்து கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா வளர்ச்சியிலும் இத்துறை பெரும்பங்காற்றி வருகிறது. கேரள மாநிலத்தின் ஆலப்புழை, கோழிக்கோடு ஆகிய ஊர்களில் இயக்கப்படும் படகு இல்லங்கள் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்கின்றன. மேலும் படகுகள் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக்காடுகளில் உள்ள புலிகள் சரணாலயத்தைக் கண்டு களிக்க உதவுகின்றன. இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நீர் விளையாட்டுகள் விரைந்து புகழ்பெற்று வருகின்றன.

சரக்கு போக்குவரத்து[தொகு]

உள்நாட்டு நீர்வழிகளில் ஆண்டுதோறும் 44 மில்லியன் டன் சரக்கு கையாளப்படுகிறது. பண்டைக்காலந்தொட்டே கங்கை ஆறு சணல், தேயிலை, நறுமணப்பொருட்கள் ஆகியவற்றை கொல்கத்தா துறைமுகத்திற்கு கொண்டு செல்வதில் பெரும்பங்காற்றி வருகிறது.இருப்பினும் இவ்வழியில் போக்குவரத்து வளர்ச்சி மிகத் தொய்வாகவே உள்ளது.ஆனால், பிற்காலத்தில் பயன்பாட்டிற்கு வந்த கோவா நீர்வழி விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. வடகர்நாடகத்தின் குதிரைமுகம் உள்ளிட்ட சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் தாதுக்களை கோவாவிலுள்ள மர்மகோவா, பனாஜி துறைமுகங்களுக்கும், கேரளத்தின் திருவிதாங்கூர் உர மற்றும் வேதிப்பொருள் நிறுவன (FACT) தயாரிப்புகளைப் பயன்பாட்டிடங்களுக்கும் எடுத்துச் செல்வதன் மூலம் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மிகுதியான வருவாய் ஈட்டி வருகிறது. கச்சா எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றைக் கொண்டுசெல்ல வடக்கு மற்றும் வடகிழக்கிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களான ஹல்தியா, பாராணி, திக்பாய், திப்ருகார் ஆகியவற்றையும், அனல்மின் நிலையங்களான பார்ஹ், பாண்டல் ஆகியவற்றையும் நீர்வழியால் இணைக்க நீர்வழிப்போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.

நடைமுறைச் சிக்கல்கள்[தொகு]

இந்திய ஆறுகளின் நீரோட்டம் மழைப்பொழிவிற்கேற்ப மாறுபடுகிறது. மேலும் பெருகிவரும் பாசனத்திட்டங்கள், விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் மிகுதியான நீர்ப்பயன்பாடும் நீர்மட்டம் குறையக் காரணிகளாகின்றன. குறைந்த மட்டமுள்ள நீர்வழிகள் பெரிய கலங்களின் போக்குவரத்திற்கு பயனற்றவையாகின்றன. ஆற்றுப்படுகைகளின் வண்டல்மண் படிவுகளைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தூர்வாருவதற்கு மிகுதியான பொருட்செலவு ஏற்படுகிறது. இதற்கு நகர்ப்பகுதிகளில் ரூ.10 முதல் 11 கோடியும் ஊரகப்பகுதிகளில் ரூ.8 முதல் 9 கோடியும் தேவைப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த இடர்கள் களையப்படின், இத்துறை சிறப்பான வளர்ச்சி அடையும்.

உசாத்துணைகள்[தொகு]

  1. இந்திய உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து ஆணையத்தின் அலுவல் வலைத்தளம்.
  2. மனோரமா நிகழ்வுத் தொகுப்பு 2010
  3. விக்கிபீடியா ஆங்கில வலைப்பக்கங்கள்
  4. இந்திய உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்திற்கான நிகழ்கூறுகள் குறித்து திரு.நாராயண் இரங்கராஜ் (இந்திய தொழில்நுட்பக்கழகம், மும்பை) மற்றும் திரு.ஜி.இரகுராம் (இந்திய மேலாண்மைக் கழகம், அகமதாபாத்) ஆகியோரின் அறிக்கை.