இந்திய அரசியலமைப்பு - நெறிமுறைக்கோட்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles) அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில அரசுகளின் கொள்கைக்கான நெறிமுறைக் கோட்பாடுகள் 36 முதல் 51 வரை உள்ள பிரிவுகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகள் அனைத்தும் அட்டவணை ஆறில் பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன.[1]

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

நெறிமுறைகளின் நோக்கம்[தொகு]

சட்டங்களை உருவாக்கும் போதும், நிர்வாகத்தை நடத்தும் போதும், மாநில அரசுகள் இப்பிரிவுகளில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நாட்டு மக்கள் சமுக பொருளாதார சுதந்திரம் பெறவில்லை என்றால் அரசியல் சுதந்திரம் பொருளற்றதாக ஆகிவிடும். ஆக பொருளாதார சமுக சுதந்திரம் பெறுவதற்கு ஒரு சில கோட்பாடுகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்து அளித்துள்ளது. இக்கோட்பாடுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முகப்புரையை (Preamble) நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. இக்கோட்பாடுகளை நீதிமன்றம் மூலம் செயல்படுத்த முடியாது. இக்கொள்கைகளை மூன்று தலைப்புக்களில் வகைபடுத்தலாம்.[2]

  • சமூகம் மற்றும் பொருளாதாரம் (Social and Economic character):பிரிவு 38(1) ன்படி, அரசுகள் சமூக பொருளாதார நீதியை நிறுவ பாடு படவேண்டும். 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 44ஆவது திருத்தச் சட்டம் பொதுமக்களிடம் உள்ள வருமானத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களைய அரசுகள் முனைய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. பொதுமக்கள் அனைவரும் வாய்ப்புகளையும் வசதிகளையும் அடைய சந்தர்ப்பங்கள் சமமாக அமைய வேண்டும் என்பதற்காக அரசுகள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றது. இது தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல், குடிமக்களுக்கும் அமைப்புகளுக்கும் பொருந்தும். சம வேலைகளுக்கு சமஊதியம் வழங்கப்பட வேண்டும். இதில் ஆண் பெண் வேறுபாடு காட்டக் கூடாது. உற்பத்தியும், உற்பத்திக்கான சாதனங்களும் ஒருசில கரங்களில் குவிந்து கிடைப்பதை அரசுகள் அனுமதிக்கக் கூடாது. பொது நன்மைக்காக நாட்டின் வளங்கள் பரவலாக்கப் பட வேண்டும்.
  • சமூகப்பாதுகாப்பு (Social security): தொழிற்சாலை நிர்வாகத்தில் தொழிலாளர்கள் பங்குபெற ஆவன செய்ய வேண்டும். அரசு அனைவருக்கும் வேலைவாய்ப்பையும் கல்வியையும் உறுதி செய்ய வேண்டும். வேலை வாய்ப்பின்மை, வயோதிகம் நோய்வாய்படுதல் மற்றும் இயலாமை ஆகியவைகளால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அவர்கள் பொருளாதார வரம்பிற்குட்பட்டு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.மனித வாழ்விற்குத் தேவையான அடிப்படைகளை உறுதி செய்யவும், பேறுகால நிவாரணம் வழங்கவும் அரசு உறுதி செய்ய வேண்டும்.பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும்.பிரிவு 47இன் படி பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அரசு கடமைப்பட்டுள்ளது.பிரிவு 46ன் படி அட்டவணைப் பிரிவு, மலைசாதி மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு கல்வி மற்றும் பொருளாதார நலனை அரசு மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு சமநீதி கிடைப்பதையும் அவர்களுக்கு இலவச சட்ட உதவி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இது போலவே கிராம ஊராட்சிகளை நிறுவி அவைகள் தன்னாட்சி அமைப்புக்களாக சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
  • சமூக நலம்: பிரிவுகள் 44, 48 முதல் 51 சமூக நலனை மேம்படுத்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் குறிப்பிடுகின்றன. பிரிவு 44 ல் அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவாக ஒரு உரிமையியல் சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.பிரிவு 48 வேளாண்மை மற்றும் கால்நடை மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது, பசு மற்றும் இதர கால்நடைகளை துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை, வேளாண் துறைகளை நவீனப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும்.காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரிவு 48A விதிக்கிறது.பிரிவு 49 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால சின்னங்கள் இடங்கள் மற்றும் பொருட்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு செயல்படுத்தும் துறையும், நீதித்துறையும் பிறித்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. பிரிவு 51 சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர் துர்காதாச் பாசு, இந்திய அரசியலமைப்பு ஓர் அறிமுகம், பக்கம் 203-217, LexisNexis, 2ஆவது பதிப்பு, ISBN 978-93-5143-527-3
  2. DR JN Pandey, Constitutional Law of India,Pages 444-463, Central law Agency Fifty Third Edition, ISBN 93-84852-41-2 பிழையான ISBN